மைக்கேல் வசந்தி
கரவெட்டி - யாழ்ப்பாணம்
ஒரு போராளியின் நினைவலைகளில்
மேஜர் சோதியா
1984-ம் ஆண்டின் முற்பகுதி...
1984-ம் ஆண்டின் முற்பகுதி. விடுதலைக்காகப் போராட வேண்டும் என்ற ஆவலில் சோதியா நீண்ட நாட்களாக முயற்சி செய்து, விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களைச் சந்தித்தார். சோதியா தலைவரைச் சந்தித்ததன் மூலம் நானும் அவரும் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டோம்.
நாங்கள் போராளிகளாகியதிலிருந்து, பயிற்சியை முடித்து ஈழத்திற்கு வரும்வரையில் நடந்தவை நிறைய விடயங்கள். இந்தியாவில் எங்களுடன் சோதியா மருத்துவப் படித்தது, எம்மோடு பயிற்சியை எடுத்தது, பயிற்சியின்போதே மருத்துவப் பணியிலும் ஈடுபட்டு... அப்போது சோதியா செய்தவற்றை எல்லாம் எழுதித் தாள்கள் போதாது.
பயிற்சி முடிந்தவுடன் சோதியா உட்பட பெண் போராளிகளின் ஒவ்வொரு குழுவும் ஈழத்திற்கு வந்தது. மன்னாரில் தளம் அமைத்துத் தங்கிய அவர்களுக்கும், தலைவருக்கும் இடையிலான செய்திப் பரிமாற்றம் சோதியாவின் பொறுப்பில் விடப்பட்டது. சுற்றிலும இராணுவத்தினரின் அச்சுறுத்தல் நிறைந்த அன்றைய நிலையில், அவர்களுக்கும் தலைவருக்கும் இடையில் பாலம் போன்று செயற்பட்டவர் சோதியாதான் அதில் சந்தேகமில்லை. கோட்டையில் இருந்த சிறீலங்கா இராணுவத்தினருடனான மோதலில் பங்கு கொண்டார்.
இதன்பின் வடமராட்சியில் 'விடுதலை நடவடிக்கை' என்ற இராணுவ நடவடிக்கையை இலங்கை இராணுவத்தினர் நடத்தியதும், அதைத் தொடர்ந்து நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் இருந்த இராணுவத்தினரைக் கரும்புலிகள் மில்லர் தாக்கியதும், அதன்பின் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும், இந்திய இராணுவத்தினரின் வருகையும் எம்மண்ணுக்கு வந்ததும் எல்லோரும் அறிந்த விடயங்களாகும். இந்திய இராணுவம் இங்கு வந்ததும் மீண்டும் சோதியா களத்தில் இறங்கினார்.
கல்லுண்டாய் தாக்குதலும் மருத்துவ சேவையும்
கல்லுண்டாய் வெளியில் அமைக்கப்பட்டிருந்த இந்திய இராணுவத் தளத்தின் மீதான தாக்குதலில் சோதியா முக்கிய பங்கெடுத்தார். இத்தாக்குதலின்போது அவர் நேரடி மோதல், மருத்துவச் சேவை ஆகிய இரு பணிகளிலும் ஒரே நேரத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து சண்டையிப்பாயில் இந்திய இராணுவத்தினரின் கவச வாகனம் மீதான தாக்குதலிலும் பங்கெடுத்தார். நாட்டிலிருந்த புலிகளில் பெண் எண்ணிக்கையானோர் காடுகளில் பாசறை அமைத்துத் தங்கத் தொடங்கும் காலம் வரையில், இந்திய இராணுவத்தினரை நேர்கொண்ட சந்தர்ப்பங்களில் நடந்த மோதல்களிலெல்லாம் சோதியா பங்கெடுத்தார்.
அதன்பின் காட்டிலே அமைக்கப்பட்டிருந்த பாசறையில் தனது மருத்துவப் பணியைத் தொடர்ந்தார். காட்டிலெங்கிருந்தபோதிலும் வெளியில் சிங்ளை இராணுவ அணிவந்து எம்மவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் காயமடைந்த போராளிகளுக்கு களத்தில் வைத்தே சிகிச்சை அளித்தார்.
மீண்டும் சோதியா காட்டுப் பாசறைக்குத் திரும்பினார். சோதியாதான் முகாம் சுத்தம், சமையலறைச் சுத்தம், போராளிகளின் சுத்தம் சம்பந்தப்பட்ட விடயங்களைக் கவனிப்பார்.
பெண் போராளிகளுக்கு என்னென்ன தேவை என்பதைத் தலைவரிடமே கேட்பார். சோதியாவின் செயலாற்றும் தன்மையும் பெண் போராளிகளை நல்ல முறையில் வழிநடத்தும் ஒழுக்கமும் அவதானித்த தலைவர் பெண் போராளிகளுக்கான தலைமைப் பொறுப்பை 1989 இன் முற்பகுதியில் சோதியாவிடம் ஒப்படைத்தார்.
'விடியல்' மகளிர் தளம் உருவாக்கம்
தலைமைப் பொறுப்பேற்ற பின்னர், நாள்தோறும் பெண் போராளிகளைக் குழுக்குழுவாகக் கூப்பிட்டு, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து அவர்கள் எப்படி இருக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், சண்டை வந்தால் எப்படிச் சண்டை யிடுவது என்பது பற்றிக் கதைப்பார். போராளிகளுடன் கதைப்பதில், அவர்களுக்கு அறிவுரைகள் கூறுவதில் சோதியாவுக்கு நிகர் அவரேதான்.
சோதியா பொறுப்பெடுக்குமுன், ஆண் போராளிகளும் நாங்களும் எமது வேலைகளையெல்லாம் அட்டவணை போட்டு ஒழுங்குபடுத்திச் செய்தோம். சோதியா பொறுப்பெடுத்த பின் எமது வேலைகளை நாமே தனித்துச் செய்வதற்குத் தலைவர் அனுமதி கேட்டார். தலைவரும், பெண் போராளிகள் தமது கால்களை ஊன்றி வளர்வதுதான் தனது விருப்பமாகும் என்று அனுமதித்துவிட்டார். அதன் பின்னர் எனக்கான எல்லா வேலைகளையும் நாமே செய்யத் தொடங்கினோம்.
சில காலத்தின்பின் பெண் போராளிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதால் எமது பாசறையில் இருந்த வசதிகள் போதாமல் போய்விட்டன. முக்கியமாகத் தண்ணீர் ஒரு பெரும் பிரச்சினையாக இருந்தது.
தலைவர் சோதியாவைக் கூப்பிட்டு, பெண் போராளிகளுக்கெனத் தனியாகத் தளம் அமைத்து, தனியாக ஒரு கிணறு வெட்டும்படி உத்தரவிட்டார். சோதியா பெண் போராளிகளைப் பல குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு வேலையைக் கொடுத்து புதிய தளம் ஒன்றை அமைத்தார். அத்தளத்திற்கு 'விடியல்' எனப் பெயரிடப்பட்டது. இந்தப் பெயரைப் பற்றித் தலைவர் கருத்துத் தெரிவிக்கும்போது 'பெண்கள் தனித்து நின்று செயற்பட்டு ஒரு விடியலைக் காணவேண்டும்' என்று சொன்னதாகச் சோதியா என்னிடம் சொன்னார்.
தனித் தளம் அமைக்கப்பட்ட பின்னர் சோதியா பெண் போராளிகளை வளர்த்த விதம் தனியானது. எல்லா வேலைகளையுமே ஒழுங்குக்கு முறைக்கக்கொண்டுவந்தார். எல்லாப் போராளிகளுடனும் கதைப்பதன்மூலம் அவர்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டலாம் என்பதில் சோதியா அதிக நம்பிக்கை வைத்திருந்தார். பெண்களைச் சகல வேலைகளிலும் பயிற்றுவித்தார்.
வீரச்சாவும் சோதியாவின் நினைவும்
சோதியாவின் தலைமையில் விடியலில் பெண்போராளிகளின் ஐந்தாவது படையணி தனது பயிற்சிகளை ஆரம்பித்தது. பயிற்சி போராளிகளுக்கு என்னென்ன வேண்டும் என்று கேட்டு அறிந்து அதற்கான ஒழுங்குகளை ஓடி ஓடிச் செய்து கொண்டிருந்தார். எல்லோரையும் கவனிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் தன்னைக் கவனிக்கத் தவறிவிட்டார். ஐந்தாவது படையணி தனது பயிற்சிகளை முடிக்கும் தருவாயில் சோதியா சற்றுச் சோர்வாக இருப்பதாகத் தெரிந்தது.
தனக்கு நெஞ்சு வலிப்பதாக சோதியா ஒருநாள் என்னிடம் சொன்னார். 'கொஞ்ச நாளைக்கு ஓய்வெடுங்கோ. ஒழுங்காகச் சாப்பிடுங்கோ' என்றுதான் கூறினேன். ஆனால் சோதியா தனது வழக்கமான வேலைகளில் எதையுமே நிறுத்தவில்லை.
ஒரு நாள் தலைவர் சோதியாவைக் கூப்பிட்டார். அன்றும் சோதியாவுக்குக் காய்ச்சல்தான், ஆனால் யாரிடமும் சொல்லவில்லை. தலைவரிடம் போய் வந்தார். மறு நாள் காலையில் சோதியா எழும்பவில்லை. என்னவென்று கேட்டபோது நெஞ்சுக்குள் காய்ச்சலும் நெஞ்சு நோவுமாக இருப்பதாகக் கூறினார். நான் சோதியாவுக்கான மருத்துவரைக் கூப்பிட்டுக்காட்டி, மருந்து எடுத்துக் கொடுத்தேன். தலைவரின் இடத்திற்கு நிற்கும் மருத்துவரைக் கூப்பிட்டுக் காட்டுவோமா என்று நான் கேட்க, அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டார். மறுநாளும் வருத்தம் குறையாததால் நான் அந்த மருத்துவரைக்க கூப்பிட்டுக் காட்டினேன். தலைவரும் வந்து பார்த்தார். இருவரும் சோதியாவை யாழ்ப்பாணத்துக்குப் போய்ச்சிகிச்சை செய்யுமாறு கூறினார்கள்.
யாழ்ப்பாணம் போன சோதியாவின் உடல் நிலை பரவாயில்லை என்ற செய்தி நமக்குக் கிடைத்தது. சோதியா திரும்பி வந்துவிடுவார் என்றே தலைவர் எண்ணிக்கொண்டிருந்தார். நானும் அவ்வாறே எண்ணியிருந்தோம். ஆனால் திடீரென, சோதியா வீரச்சாவடைந்த செய்தி நமக்குக் கிடைத்தது. நாம் அதிர்ந்து போனோம்.
ஆனாலும் சோதியாவின் புகழுடலை விடியலுக்கு கொண்டு வருவதற்கான ஒழுங்குகளைச் செய்துவிட்டுக் காத்திருந்தோம். விடியலுக்குக் கொண்டுவரப்பட்ட சோதியாவின் உடலை, வழக்கமாகச் சோதியா படுக்கும் இடத்தில் வைத்து அஞ்சலி செய்தோம்.
சோதியா எம்மைவிட்டுப் பிரிந்தது நேற்றுத்தான் போலிருக்கிறது. சோதியா அன்று போட்ட அந்தப் பலமான அடித்தளம்தான் இன்று மகளிர் படையணி ஒரு பலம்வாய்ந்த இராணுவ அணியாக உருவாகிய காரணங்ளுள் ஒன்றாக அமைந்தது.
- சுகி
ஈழநாதம்
--------------------------------------------------
மேஜர் சோதியா
பச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது. அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற... தலைக்கிரீடம் ஒருபுறம்.. உறுதியாக... உறுதியாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன.
இந்திய படைக் காலப்பகுதி, ஓ! அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம்.
நெடிதுயர்ந்த பெண், வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் காட்டில் வலம் வந்தவர்.
சோதியாக்கா வயித்துக்குத்து... சோதியக்கா கால்நோ... சோதியாக்கா காய்ச்சல்... சோதியாக்கா.... சோதியாக்கா.
ஓம் எப்ப வருத்தம் வந்தாலும் அவவைக் கூப்பிட நேரம் காலம் இல்லை. சாப்பிட்டாலும் சரி, இயற்கைக் கடனை கழிக்கச் சென்றாலும் பின்னுக்கும் முன்னுக்கும் நாய்குட்டிகள் போல் நாம் இழுபட்டுத்திரிந்த அந்தக் காலம். கடமை நேரங்கள் எங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய சோதியாக்கா. நெல்லியடி ஈன்றெடுத்த புதல்வி. கல்வியும் கலையும் கற்றுத்தேர்ந்த உயர் கல்வி மாணவி.
விடியல் - அதுதான் எம்மை பட்டைதீட்டி வைரங்கள் ஆக்கிய பட்டறை, இல்லை பாசறை எம்மை வளர்த்த அன்புத்தாய் நிலம் என்பேன்.
அந்த இனிய பொழுதுகள் யாவும் இனிமையும் இளமையும் நிறைந்தவை. எங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற எழுந்த நாட்கள்.
காடு - ஆம் காடு விரிந்து பரந்து எங்கும் வளர்ந்திருந்தது. எப்பவும் ஒரு குளிர்மை அச்சம் தரும் அமைதி. குருவிகள்கூட எம்மைக் கண்ட பின் சத்தம் குறைத்தே கீச்சிட்டனவோ? என எண்ணத்தோன்றும் அமைதி. மென்குரல்களில் உரசிக்கொள்ளும் எம் உரையாடல்கள்.
எங்கும் தேடல், எதிலும் தேடல். காட்டில் உள்ள அனைத்து வளத்தையும் சிதைக்காமல் சிக்கனமாக முகாம் அமைத்தோம். அழகுபடுத்திப் பார்த்தோம். போர் முறைக் கல்வியும் புதிய பயிற்சிகளும் தலைவர் அவர்களால் நேரடிப்பார்வையில் நிறைவேற்றிய காலம்.
சமையல் தொடக்கம் போர்ப்பயிற்சி வரையான பெண்களின் தனி செயலாண்மை(நிர்வாகம்) திறமை வளர்த்தெடுக்கப்பட்ட முதல் படியும் அங்கேதான். அதில் சிறப்பாக எல்லாப் போராளிகளாலும் கீழ்ப்படிவுடனும், அன்புடனும் நோக்கப்பட்ட ஒரே ஒரு தலைவி மேஜர் சோதியாக்கா.
உணவுத் தேவைக்காகவும் வேறுதேவைகள் கருதியும் மைல் கணக்கா, நாள் கணக்கா, அளவு தண்ணி, அளவு உணவுடன் நடை... நடை. தொலை தூரம்வரை நடை. வானம் தெரியும் வெட்டைகளைக் கடக்கும்போது இரவு எம்முடன் கலந்துவிடும். தொடுவானம் வரை தெரியும் விண்மீன்கள் எமக்கு உற்சாகமூட்டும். காலைப் பனியும், உடலில் எமனைத்தின்ற களைப்பும் சேர்ந்திருக்கும். ஆனால் நொடிப்பொழுதில் கிசு கிசுத்து நாம் அடித்த பம்பலில் யாவும் தூசாகிப்போகும். அன்று எம்முடன் இருந்து குருவியுடன் பாடிய, மரத்துடன் பேசிய தோழியர் பலர் இன்றில்லை. நெஞ்சு கனத்தாலும் தொடர்கின்றேன்.
கனத்த இரவுகளிலும் நுளம்புக் கடியுடன் எப்பவுமே, ஏன் இப்பவுமே அது எங்களுடன் தொடர்கின்றது. சோதியாக்கா யார் யார் எப்படி எவ்விதம் கவனிக்க வேண்டும். அவர்கள் உடல்நிலை எப்படியென்று கவனித்துத் தந்த பிஸ்கற், குளுக்கோஸ் உணவாக மாறிவிடும் அங்கே. அவரது பரிவும், இரக்கமும் எம்மைக் கவனித்து அனுப்பும் விதமும் எனக்கு என் அம்மாவை நினைவூட்டும்.
கண்டிப்பும் கறாரும் கொண்ட கட்டளையை அவர் தந்த போதெல்லாம் எனக்கு என் அப்பா நினைவு வரும்.
கல கலவென அவர் சிரித்த வேளை என் பள்ளித் தோழிகள் நினைவில் வந்தனர்.
கள்ளம் செய்துவிட்டு அவர்முன் போகும்போது அருட்தந்தை ஒரு வரை நினைவுட்டும்.
அதுதான் எங்கள் சோதியாக்கா.
பச்சை சேட், பச்சை ஜீன்ஸ் அதுதான் அவரது விருப்பமான உடையும், ராசியான உடையும் கூட. பச்சை உடை போட்டால் நிச்சயமாகத் தெரியும் அண்ணையைச் சந்திக்கப் போறா என்று. அண்ணையிடம் பேச்சு வாங்காத உடுப்போ என்று யாரும் கேட்க. கொல் எனச் சிரித்தவர்களை கலைத்து குட்டும் விழும். அந்த குட்டுக்கள் இனி...
காட்டில் அனைத்து வேலைகள், முகாம் அமைத்தல், திசைகாட்டி மூலம் நகர்த்தல், கம்பால் பயிற்சி என ஆளுமையுடன் வளர்ந்து வந்தோம். யாவற்றையும் திட்டமிட்டு அனைத்துப் போராளிகளிற்கும் விளக்கிக் கொண்டு, அவர்களது கருத்துக்களையும் கேட்கும் பண்பும், வேலைகளைப் பங்கிடும் செயலாண்மைத் திறனும், மனிதர்களை கையாளும் திறமையும் மிக்க தலைவியாக வளர்ந்து வந்தவர். மற்றவர்கள் ஒத்துப்போகும் விருப்பை எம்மில் வளர்த்துச் சென்றவர்.
உழைத்து உழைத்து தேய்ந்த நிலவு ஒரேயடியாக மறையும் என்று யார் கண்டார்.. எமக்கெல்லாம் ”நையிற்றிங் கேளான” அவர் நோயால் துயருரற்றபோது துடித்துப் போனோம்.
அந்த மணலாற்றின் மடியில் புதையுண்டு போக அவர் விரும்பியும் அன்னை, தந்தையை காண உடல் சுமந்து நெல்லியடி சென்றோம். ஊர் கூடி அழுதது. ஊர் கூடி வணங்கியது. இறுதிவணக்க நிகழ்வில் மத வேறுபாடின்றி போராளியின் வித்துடலை வணங்க பல்லாயிரம் மக்கள் கண் பூத்து அழுதபடி வணக்கம் செலுத்திய காட்சி, நாம் நிமிர்ந்தோம்.
வளர்வோம், நிமிர்வோம் என மீண்டும் புது வேகத்துடன் காடு வந்தோம். இன்று களத்தில் புகுந்து விளையாடும் வீராங்கனைகளையும் பெண் தளபதிகளின் நிமிர்வையும் கண்ட பின்பே ஆறினோம்.
சோதியாக்கா! நாம் படை கொண்டு நடத்தும் அழகைப் பாருங்கள். நாம் செயலாண்மை நடத்தும் நேர்த்தியைப் பாருங்கள்.
உங்கள் பெயரை நெஞ்சிலே ஏந்தி, உங்கள் பெயரைச் சுமந்த படையணியைச் பாருங்கள்.
- விசாலி -