நந்தகோபாலன் துஸ்யந்தன்
மானிப்பாய் - யாழ்ப்பாணம்
அமைதியான பொழுது... சூரியன் விழுந்துவிடக்கூடாது என்று வானம் போராடியதற்கு அடையாளமாய் முகில்கள் இரத்தமாய் சிவந்திருந்தது. அருளன் தனிமையில் நடந்து கொண்டிருந்தான். அவனிற்கும் பூமிக்குமான இடைவெளி நீண்ட தூரமாகிக்கொண்டு போனது. நினைவுகள்தான் இப்போது அவனுடன் ஒட்டியிருந்தன.
அவன் மனசைத்தவிர எல்லா இடமுமே அமைதி நிலைகொண்டிருந்தது. அந்த வெளியில் முளைத்திருந்த பற்றைகளும் இடிந்து போன கட்டடங்களும் அமைதியாக இருந்தாலும் அவனிற்கு அவை பேசுபவையாகவேயிருந்தன. அவனது நடையில் தளர்வு இல்லை. துயர் தெரிந்தது. இதுதான்... இந்த இடம்தான்... தாண்டிக்குளச் சண்டைக்கு போன கரும்புலிகள் அணிக்கு அவன் பயிற்சி கொடுத்த இடம். இந்த மரக்குற்றியில் இருந்துதான் ஓய்வு நேரத்தில எல்லோரும் தேநீர் குடிப்பது. அந்த மண்பிட்டியில் தான் எப்போதும் நிதன் இருந்து ஏதாவது ஒருகதை சொல்லிக்கொண்டிருப்பான். இதே வெட்டைக்கரைதான் ஆனையிறவுத்தளம் மீதான ஊடுருவித்தாக்குதலிற்காக சென்ற கரும்புலி அணியிற்கு பயிற்சி கொடுத்த இடம்.
ஒவ்வொரு இடத்தையும் பார்க்கின்ற போது நினைவுகள் அவனை பிடித்து இழுப்பது போல் இருந்தது. பழைய நினைவுகள் அவனிற்குள் தீ மூட்டிக்கொண்டிருந்தன.
அருளன் கரும்புலிகள் அணியின் பயிற்சி ஆசிரியன். அவன் பயிற்சி கொடுத்து அனுப்பிய பல கரும்புலி வீரர்கள் தங்களிற்கான இலக்கை அழித்துவிட்டு தாய் மண்ணோடு நிலைத்து விட்டார்கள். அவர்களின் நினைவுகளைச் சுமந்த படிதான் இப்போது அருளன் வாழ்ந்துகொண்டு இருக்கிறான். நடந்து கொண்டிருந்த அருளன் நிழலிற்காக அந்த மரஅடியோடு அமர்ந்தான். அவனுக்கு நிழல் எதற்கு? இத்தனை நினைவுகள் அவனை சூழ்ந்து நிழல் கொடுக்கின்றபோது மரத்தின் அடியில் இருந்தபடியே எட்டுத் திசகளையும் சுற்றி வந்தன கண்கள். நினைவுகள்... சுபேசனாக... சிற்றம்பலமாக... ஆசாவாக... உமையாளாக... இப்படி ஒவ்வொரு கரும்புலி வீரர்களினதும் முகங்களாக படையெடுத்து மூச்சுவிடக்கூட கடினப்படும் அளவிற்கு சுற்றி வளைத்து முற்றுகையிட்டன.
“இந்த மரத்திற்கு கீழயிருந்தே எத்தின பேர் பயிற்சி ஓய்வு நேரங்களில பம்பல்அடிச்சு கதைச்சுச்சிரித்திருப்பினம்” ஆழ்மனத்தில் இருந்து தவிப்பாய் ஒருகுரல் மேல்எழுந்து வந்தது.
கண்கள் சட்டென ஒரு இடத்தில் குற்றி நிலைத்தன. அது ஒரு இடிந்தும் இடியாமலும் கிடக்கின்ற கட்டிடம். அதுவும் மனிதர்களைப் போலதான். இல்லாமல் போனவர்களிற்காக அவர்களின் நினைவுகளைக் கொண்டு வாழ்பவர்களைப் போல சிதைந்துபோன சில கற்கட்டகளையும் ஓடுகளையும் வைத்துக் கொண்டு வீடு என்பதை அடையாளப்படுத்திக்கொண்டிருந்தது.
“சரி இனி நாங்கள் செய்யப்போகின்ற சண்டையின்ர மொடலைச்செய்து காட்டுங்கோ” அருளன் அதில் வைத்துத்தான் தாண்டிக்குளம் மீது தாக்குதல் நடத்துவதற்குச் சென்ற கரும்புலிகள் அணியிற்கு பயிற்சி கொடுத்தான். அவனது கட்டளை கிடைத்ததும் தாக்குதலில் ஈடுபடப்போகும் கரும்புலிவீரர்கள் டொள்.... டொள்... என்று வாயால் சத்தம் இட்டபடி உண்மையிலேயே எதிரியை எதிர்கொள்வதைப்போல் ஆவேச பாவத்துடன் முன்னேறினார்கள். பயிற்சி யின் ஒரு கட்டத்தில் சண்டை இறுகியது “சார்ச் காரன் மூவ்..” என்று அணித்தலைவன் சத்தமாகக் கட்டளையிட்டான். களத்திலே அதை நிறை வேற்றப்போகின்ற கரும்புலிவீரன் ஓடிவந்து தனது உடலில் கட்டிய வெடிமருந்தினை வெடிக்கச் செய்வது போல பாவனைசெய்து டுமார் என்று கத்திக்கொண்டு சிரித்தபடியே கீழேவிழுவான். அணிகள் தொடர்ந்து முன்னேறும்.
இதைப் பார்த்த உடனேயே அருளனது கண்கள் கலங்கிப்போய்விடும். சண்டையில இது உண்மையாகவே நடக்கப்போவது. பயிற்சி இடைவேளை வந்ததும் அணிகள் ஓய்வெடுப்பதற்காகப் போய்விடும். அருளன் தனிமையில் இருப்பான். பயிற்சியில் நிகழ்ந்த நிகழ்வை நினைத்து நினைத்து விம்முவான். இந்த நேரம் தான் அவன் அழுதுதீர்த்துவிடும் நேரம். உடலில் கட்டிய வெடிகுண்டை வெடிக்க வைக்கின்ற ஒவ்வொரு கணத்திலும் அதைச்செய்யப்போகின்ற போராளியை நினைத்து அழுத கண்கள் வீங்கியிருக்க ஓய்வை முடித்து மறுபடியும் பயிற்சி கொடுப்பதற்கு அருளன் தயாராகுவான்.
அவனின் மென்மையான இயல்பிற்கு அந்தப்பணி ஒவ்வொரு கட்டத்திலும் பெரும் போராட்டமாகவேயிருந்தது. அதனால் என்ன அவனிற்கு இந்த போராட்டம் வழங்கிய பணியிது. அதை மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுச்செய்து கொண்டிருக்கிறான். கட்டடத்தின் மீது பதிந்து போன பார்வையைப் பிரித்து எடுத்தான். மீண்டும் விழிகள் சுழலத் தொடங்கின. விழிகளின் ஒவ்வொரு அசைவிலும் தெரிகின்ற காட்சிகளில் ஏராளமான நினைவுகள் புதைந்து கிடந்தன. மரத்திற்கு கீழ் இருந்தவன் எழுந்தான். தொடர்ந்தும் நடக்க தொடங்கினான். சிறியதொரு வெட்டை அந்த மணல் வெட்டையில் ஒருசில காற்சுவடுகள் அழிந்தும் அழியாமலும் பதிந்துகிடந்ததாக அவனின் கண்களிற்குத்தெரிந்தது. அந்த மண்ணிற்கும் அவனிற்கும் மட்டும்தான் தெரியும் அவை யாருக்குச்சொந்தமென்று.
அந்த காற்சுவடுகள் ஆனையிறவு கரும்புலித்தாக்குதலிற்கு செல்வதற்காக கரும்புலிகள் அணி பயிற்சி எடுத்த இடத்திற்குரியது. அந்த இடம்தான் எப்போதும் அழியாத அடையாளமாய் அவனுள் இருந்தது. தனிமை அவனுக்கு வேண்டியதாகவும் அதுவே வேதனையாகவும் இருந்தது. கண்கள் மீண்டும் வெட்டை முழுவதும் உலவின. கல்லுக் குவியல்... கால்கள் வேகமாக நடந்து அருகில் சென்று தரித்துக் கொண்டன. கண்கள் அந்தக் கற்குவியலையே உற்றுப்பார்த்தன. அருளன் அதற்கு அருகிலேயே அமர்ந்து கொண்டான். உயிரின் ஓசை உமையாள்... உமையாள்... என்று துடித்தது. ஆனையிறவுத் தாக்குதலிற்கு பயிற்சி நிகழ்ந்து கொண்டிருந்தவேளை, அந்த இடத்தில் வைத்துத்தான் கரும்புலி மேஐர் ஆசாவின் அணிக்கு பயிற்சி கொடுத் தான்.
குண்டு எறியும் பயிற்சி நேரம் வந்துவிட்டால் ஒவ்வொருவரும் அவர்கள் எறிவதற்கு கற்களை பொறுக்கிக் குவிப்பார்கள். கற்களையே குண்டாக நினைத்து எறிந்து பயிற்சி செய்வார்கள். அப்படி குவிக்கப்பட்ட கற்களில் இது உமையாள் குவித்தகற்கள். அவள் ஓடியோடி நிறையகற்கள் பொறுக்கி குவித்தவள். பயிற்சி முடிந்தபோதும் அவள் கற்களை எறிந்து முடிக்கவில்லை. அந்தகற்கள்தான் அப்படியேயிருக்கின்றன.
தாண்டிக்குளத்தில் நிதன் வீரச்சாவு என்ற செய்தியோடு உருவானபுயல் தொடர்ந்தும் நெஞ்சுக்குள் கொந்தளித்துக் கொண்டேயிருந்தது. நினைவுகளின் வேகம் சிலவேளை அதிகரிக்கின்ற போது இமைகள் கசிந்து எச்சரிக்கும். அவனின் மௌனக்குமுறல்கள் அஞ்சல்களின் மடிப்புகளிற்குள் தலைவரிக்கு அனுப்பப்பட்டன. கடிதங்களாக வெளியிட்ட உணர்வுகளை அண்ணனைக் காணுகின்ற போது நேரிலே தெரியப்படுத்தினான். அருளன் கதைத்தபோதும் அவனின் மனக்குமுறல்களைப் புரிந்து கொண்ட தலைவர் சிரித்தார். “சந்தர்ப்பம் வரேக்குள்ள” என்று கூறிவிட்டு விடைபெற்றார்.
சந்தர்ப்பம் எப்பவரும் என்று அவனது கண்கள் காத்திருக்கத்தொடங்கின. படைத் துறைப்பள்ளியில் ஆசிரியர்கள் தேவைப்பட அருளனது ஆசிரியப்பணி அங்கேயும் தொடர்ந்தது. அவன் சிறந்தவொரு ஆசிரியன் என்தற்கு இங்கேயும் ஒரு எடுத்துக்காட்டு. படைத் துறைப்பள்ளியில் பயிற்சிகள் தொடங்கப்பட முன்தரத்தின் அடிப்படையில் ஐந்துபிரிவுகள் பிரிக்கப்பட்டன. ஐந்தாவது பிரிவு மெல்லக் கற்போரிலும் மிகமெதுவாகக் கற்போர்பிரிவு. ஆசிரியர்கள் ஒன்று கூடி அவர்களிற்கான வகுப்புக்களைத் தெரிவு செய்தபோது அந்த வகுப்பை பொறுப்பெடுக்க முன்வந்தான் அருளன். நான் ஐந்தாவது பிரிவை ஆளாக்குவேன் என்றான். பாடங்கள் தொடங்கியது. வகுப்பறை நேரம் மட்டும் அருளன் ஆசிரியன். மீதி நேரங்களில் எல்லாம் அவன் அன்பு அண்ணன். பல்தேச்சு விடுவது. நகம் வெட்டிவிடுவது. கால் தேத்துக்குளிக்க வைப்பது, இப்படி அவன் எல்லா வற்றையும் கவனித்துக்கொள்வான்.
அங்கே சில போராளிகளிற்கு சிரங்கு. அருவருப்போ வெறுப்போபடாது முருக்கம் இலை அரைத்த சாறுவைத்து குளிக்கவைப்பான் சிரங்கு மாறும் வரைக்கும் அந்தப் போராளிகளை அவனே கவனித்துக்கொள்வான். படிப்புச் சொல்லிக்கொடுக்கின்ற நேரத்தில் சிலவேளை அவன் கடுமையாகப் பேசிவிட்டால் கூட தான் பேசியதை நினைத்து இரவில் தனக்குள்ளே அழுவான். ஓய்வான நேரங்களில் அவர்களைப் பாடச்சொல்லி இவனும் சேர்ந்து தாளம்போடுவான். படைத்துறைப்பள்ளி வாழ்க்கை நினைவுகளைச் சற்று தனித்துவைத்திருந்தனவே தவிர மாற்ற வில்லை. மீண்டும் அவனிடம் இருந்து கடிதங்கள் தலைவரை நோக்கிப்புறப்பட்டன. அப்போது உருவாக்கிக் கொண்டிருந்த புதிய கரும்புலிகள் அணியிற்கு பயிற்சி கொடுக்கும் பணி அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்தப்பணியை செய்து கொண்டு இருக்கின்றவேளையில்தான் கரும்புலியணியில் சேருவதற்கு அவனிற்கு அனுமதி கிடைத்தது.
அவன் கரும்புலி வீரனானதே தாக்குதல் ஒன்றிற்கு கரும்புலிகள் அணி தயாரான வேளையிற்றான். மணலாற்றில் ஒரு முக்கியமான இலக்கை அழிப்பதற்கு அணிகள் தயார்ப்படுத்தப்பட்ட போது அந்த அணியின் முதன்மைப் பொறுப்பாளராக அருளனே தெரிவுசெய்யப்பட்டான். பயிற்சிகொடுப்பதற்காக கரும்புலிகள் அணியிற்கு வந்தவன் தானும் ஒருகரும்புலியாய் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான். கடும்பயிற்சியை அருளன் எப்படிச் செய்யப்போகிறான். பயிற்சி எடுப்பதற்கு அவனது உடல் இயலாமை காரணமாய் இருக்குமே என்று அனைவரது மனங்களிலும் சிறு புள்ளியிருந்தது. அந்த சிறுபுள்ளியைக்கூட அவனின் உறுதி இல்லாமல் செய்தது. உண்மையிலேயே அருளனின் உடல் நிலை கடும் பயிற்சி எடுப்பதற்கு இயலாமற்றான் இருந்தது. முகாமில் நிகழ்ந்த வானூர்தித் தாக்குதல் ஒன்றில் அவனது முதுகில் துளைத்த உலோகத்துண்டு ஒன்று குடலோடுசேர்த்து சுவாசப்பையிலும் சிறு சிதைவேற்படுத்தியிருந்தது. காயம் மாறினாலும் வயிற்றில் தையல்போட்ட அடையாளம் நீளமாக அழியாதவடுவாய் இருந்தது. பலமான வேலைகள் செய்வதால் வயிற்றுக் குத்து, வயிற்றுநோ என்று எல்லாவருத்தங்களும் வரும். ஆனால் அனைத்து வருத்தங்களையும் அவன் தனது புன்னகைக்குள் புதைத்து விடுவான். எந்தப் பயிற்சிகளிலும் தளர்வில்லாது அனைத்துப் பயிற்சிகளையும் செய்தான்.
“இந்தக்காயத்திற்குப் பிறகு நீங்கள் எவ்வளவு தூரம் நீந்துவியல்” எனத்தோழர்கள் யாரும் கேட்டால் இமைகள் குவிய கண்கள் சுருங்க சிரிப்பான். எப்போதும் உலராத உதடுகள் சொல்லும். “நீந்திறதென்டா மூன்று மீற்றர் கூட நீந்த இயலாது. தேசத்திற்குத் தேவையெண்டு நீந்த வேண்டியிருந்தால் மூன்று கடல்மைல் கூட நீந்தி முடிப்பன்.” சொல்லிவிட்டு மறுபடியும் சிரிப்பான். அவனது கண்கள் உறுதியாய் ஒளி வீசும். அவன் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் நேரங்க ளில் அவனோடு எப்போதும் ஒரு கடிதம் இருக்கும். தகட்டில் தலைவரினதும் நிழல் கரும்புலிகளினதும் படம் ஒட்டப் பட்டிருக்கும். அந்தக்கடிதம் அவனின் ஒரேயொரு ஆசைத் தங்கை வரைந்த கடிதம். தங்கையின் கண்ணீரால் நனைத்து எழுதியது அவனது வியர்வையில் நனைந்து கொண்டிருக்கும்.
“அண்ணா.. நான் உனக்கு ஒரேயொரு தங்கச்சி எண்டதாலயோ இவ்வளவு கஸ்ரப்படுறன். எனக்கு உன்னோட சேர்ந்துவாழ எவ்வளவு ஆசையாயிருக்கு. எப்பவருவாய்...” அது நதிக்கரைகளைப்போல நனைந்து நனைந்து நீழும். அருளனின் வாழ்வை ஆதாரமாக வைத்தே அவனின் ஆசைத்தங்கையும் அம்மாவும். இதனை நினைக்கின்ற போதெல்லாம் அவனின் நெஞ்சு கனமாகும். பிள்ளைகளுக்காக வாழ்வைச் சுமக்கின்ற அம்மாவும் அந்தச் சிறு வீடும் இமைகளுக்குள் ஈரம் ஏற்படுத்தும். பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று அம்மா எவ்வளவு துயரப்பட்டு உழைத்தாள். ஆனால் அருளனிற்கு அம்மாவின் கண்ணீர் சுட்டது ஒரு சூடு என்றால் அம்மாக்களின் கண்ணீர் ஆயிரம் சூடுகள் சுட்டன. அதற்காகத்தான் தனக்காக வாழ்கின்ற அம்மாவையும் தன்னை நினைத்தே வாழ்கின்ற தங்கையையும் மனசோடு வைத்துவிட்டு இந்தத் தாய் நாட்டிற்கு வாழ்ந்துகொண்டிருந்தான்.
கொழும்பு றோயல்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவன் சிறப்புச் சித்தியடையக்கூடிய மாணவன் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவனோ போராடவேண்டும் என்பதற்காக கொழும்பில் இருந்து அவனின் சொந்த ஊரான மானிப்பாய் வந்தடைந்தான். மானிப்பாய் இந்துக்கல்லூரியில் சிறிதுகாலம் தன் கல்வியைத் தொடர்ந்தவன், பின் அவன் நினைத்து வந்ததைப்போலவே போராட்டத்தில் இணைந்து கொண்டான். அவன் கதைக்கின்ற போதெல்லாம் அவன் வார்த்தைகளில் அதிகம் வருவது பிள்ளைகளை இந்தப் போராட்டத்திற்காய் விலை கொடுத்துவிட்டிருக்கும் தாய்களினது கதை யாகத்தான் இருக்கும். அவனுக்குத்தெரியும் பிரிந்திருக்கின்ற வேதனையோடு பார்த்தால் பிரசவத்தின் வேதனை ஒரு துளியென்று. பிள்ளைகளை இழந்த தாய்களிற்காய் கண்கள் கசிவான்.
ஒவ்வொரு போராளியையும் அவன் நினைத்திருந்தான் என்று அவர்களின் பெயர்களைச் சொல்லி அவர்களின் இறுதி நல விசாரிப்பைத் தெரிவித்தான். அவனது விரல்கள் இறுதியாக வரைந்த கடிதங்களை உரியவர்களிற்காய் உறையில் இட்டன.
”அம்மாட்டக் கொடுங்கோ” ஒரு கடிதம். “தங்கச்சியிட்டக் குடுங்கோ...” ஒரு குறிப்புப் புத்தகம்(நோட்புக்), ஒரு அல்பம். “அம்மாவையும் தங்கச்சியையும் சந்தோச மாய் இருக்கச்சொல்லுங்கோ” அவன் புறப்படப் போகின்றான் என்றாலும் கொடுத்து விட்டுப்போக நிறைய நினைவுப்பொருட்கள் இருந்தன.
“இது நிதன் அண்ணை தந்தது..” மனசின் மடிப்பினைப் போல அவனது பாக்கினுள் ஒரு லைற்றர். கவனமாய் இருந்தது. எடுத்துக் கொடுத்தான்.
“இந்தாங்கோ இதையும் கவனமாய் வைத்திருங்கோ...” ஒரு கல்லு, கரும்புலி கப்டன் உமையாள் என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தது. நினைவுகளை வார்த்தைகளாலும் நினைவுப் பொருட்களை கைகளாலும் கொடுத்துவிட்டு அவன் புறப்பட்டான்.
அந்த தாக்குதல் நீண்ட காலத்தயார்ப் படுத்தலில் பெரியதிட்டமோடு நிகழவிருந்தது. ஓயாத அலைகள் மூன்றிற்கு பலம் சேர்க்க அது மிகவும் முக்கியமானது. எனவேதான் விரைவு விரைவாக அந்த இலக்கை அழிப்பதற்கு அருளன் தலைமையிலான அணி புறப்பட்டுக் கொண்டிருந்தது. 04.11.1999 நள்ளிரவு நேரம் ஆரம்பித்த பயணம் காலைவிடிகின்ற வேளைதான் முடிவிற்கு வந்தது. இறுதித் தங்குமிடத்தில் தங்கியிருந்த அணிகள் உள்நுழைவதற்கு தேவையான இருளை எதிர்பார்த்திருந்தனர்.
காலை 10:48 இருளுக்காக காத்திருந்த போராளிகளை இரைச்சல் தின்றது. இறுதி தரிப்பிடத்தில் நின்ற வேளை எதிர்பாராத விதமான ஸ்ரீலங்கா வான்படையின் குண்டு வீச்சு வானூர்திகள் நடாத்திய தாக்குதலில் அந்த இடத்திலேயே அருளனும் மேஜர் சசியும் ஆயிரமாயிரம் கனவுகளைச் சுமந்த படியே உயிர் பிரிகின்றார்கள். கூட இருந்தவர்களின் நினைவு அருளனைக் கரும்புலி ஆக்கிய தென்றால் அருளனது நினைவுகளோடு இன்னும் எத்தனை கரும்புலிகள் உருவாகுவார்கள்.
- துளசிச்செல்வன்