இராமச்சந்திரன் இராஜேந்திரகுமார்
முருங்கன் - மன்னார்
1971 பங்குனித் திங்கள் 21ம் திகதி நம்பியார் இராமச்சந்திரன் இணையரின் செல்வ மகனாக முத்துக்கள் விளையும் பூமி முருங்கனில் ராஜேந்திரம் என்னும் பெயருடன் இம்மண்ணில் உதித்தான் மேஜர் தங்கேஸ். இவன் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தும் இவனது தந்தை இவனின் தொடக்க கல்வியை மன்னார் முருங்கன் மகாவித்தியாலயத்தில் பயிற்றுவித்தார். இவன் ஆசிரியர்கள் மத்தியில் நற்பெயருடனும் திறமையானவனாகவும் செயற்பட்டு வந்தான். இவனது திறமைகளைக் கண்டு ஆசிரியர்கள் இவனை மகாவித்தியாலயத்தின் மாணவர் தலைவனாக நியமித்தனர்.
இக்காலப் பகுதியில் இவனது கிராமம் இந்திய படைகளால் சுற்றி வளக்கப்பட்டு ஆட்கள் தேசவிரோதிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டும் வந்ததனர். இக் காலப்பகுதியில்தான் இவன் எமது நாட்டில் நடக்கும் கொடுஞ்செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி இடவேண்டும் என்ற நோக்குடன் இவன் தனது நண்பர்களிடம் ”மச்சான் நாம் அடிமைகளாய் வாழ்கிறதை விட விடுதலைக்காய் போராடி சாவதுமேல், நான் ஒரு முடிவு எடுத்திட்டன் நான் இயக்கத்திலை இணையப் போறன்" என்று கூற அவனுடன் நண்பர்களான 2ம் லெப் நவாசும், லெப்ரினன்ட் றொபேட்டும் 1988 இல் இணைந்து எமது அமைப்பில் பதிவாகினர். பதிவானதும் இவனுக்கு தங்கேஸ் என்னும் பெயர் சூட்டப்பட்டு மன்னாரில் 9 வது அணியில் பயிற்சி பெற்றான்.
இவன் பயிற்சி முகாமில் திறமையாக பயிற்சி பெற்று பொறுப்பாளர் மத்தியில் நற்பெயருடன் விளங்கியவன். பயிற்சி முடிந்ததும் அரசியல் வேலைத்திட்டத்திற்காய் தனது சொந்த கிராமத்திற்கே அனுப்பப்படுகிறான். இவன் தனது கிராம மக்களுக்கு எங்கள் அமைப்பைப் பற்றியும், எமது போராட்டத்தையும் தெளிவு படுத்தியவன். அத்தோடு நின்று விடவில்லை. இவனது திறமைகளைக் கண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த லெப்ரினன்ட் கேணல் சுபன் அண்ணன் அப்போது மன்னார்த்தீவுப் பொறுப்பாளராக இருந்த லட்சுமன் அண்ணனுடன் இவனை விட்டார். அங்கும் கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடித்தான்.
அக்காலப் பகுதியில் 2ம் கட்ட ஈழப்போர் தொடங்கியது. அந்நேரம் மன்னார் பழைய பாலம் என்னும் இடத்தில் நிலை கொண்டுள்ள சிறீலங்கா இராணுவம் மீது தாக்குதல் நடாத்த பொறுப்பாளர்களால் திட்டம் தீட்டப்பட்டு தாக்குதல் நடாத்தப்படுகின்றது. இத்தாக்குதலில் தங்கேசும் பங்குபற்ற அனுமதி கிடைத்தது. இத்தாக்குதலில் ஏராளமான படையினர் கொல்லப்பட்டனர். இம்முகாம் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் இவன் திறமையாக செயல்பட்டு களமாடினான். அத்துடன் மன்னாரில் நடை பெற்ற பல தாக்குதல்களில் தனது திறமைகளை வெளிக் கொணர தவறவில்லை. இதற்காக தளபதியிடம் பாராட்டுக்கள் பல பெற்றான். இவனது திறமைகளைக் கண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்ரினன்ட் கேணல் சுபன் அண்ணன் 1991ல் தன்னுடன் தங்கேசை எடுத்துக் கொள்கிறார். இந்நேரம் சிலாபத்துறைக்கு கொண்டச்சியிலிருந்து வரும் படையினரை எதிர்த்து தாக்குதல் நடாத்த சுபன் அண்ணாவால் திட்டம் வகுக்கப் படுகின்றது. இக்தாக்குதலுக்கு தங்கேசின் திறமையான செயல்கனைக்கண்டு தங்கேசை ஒரு குழுவிற்கு அணித்தலைவனாக அனுப்புகின்றார்.
இத்காக்குதலிலும் தங்கேஸ் தனது திறமையைக் காட்டத்தவறவில்லை. இத்தாக்குதலில் இவன் விழுப்புண் அடைகின்றான். பின் 1992 காலப்பகுதியில் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியால் இவன் வேறு துறைக்கு விடப்படுகின்றான். இங்கும் இவனது திறமைகள் வெளிபடுத்தப்பட்டு வளர்க்கப் படுகின்றது. அத்துறையிலும் இவனது திறமைகளை வெளிக்காட்டி பொறுப்பாளர்களின் பாராட்டைப் பெற்று ஓர் படி வளர்கின்றான். அதன் பின்பு தங்கேஸ் தாக்குதல்களுக்கு செல்ல வேண்டும், எதிரியை எல்லையை விட்டு என்ற நோக்கத்துடன் தான் தாக்குதல்களுக்கு செல்வதற்கு பொறுப்பாளரிடம் அனுமதி கேட்கின்றான். இவனது தொடர்ச்சியான வற்புறுத்தலால் அப்போது மன்னார் மாவட்ட சிறப்புதளபதியாக இருந்த யான் அண்ணன் அவனை தாக்குதல் குழுவில் குறிப்பிட்ட சில அணிகளுக்கு பொறுபாளனாக விடுகின்றார். இந்நேரம்தான் பூநகரி தவளைத்தாக்குதல் திட்டமிடப்பட்டு தாக்குதலும் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இத்தாக்குதலில் தங்கேஸ் மிகவும் திறம்பட தனது அணிகளை நகர்த்தி தாக்குதல்களை வேகப்படுத்திய வேளை எதிரியின் தாக்குதலால் காயமடைகின்றான்..
பின் 1994ல் மாவட்ட சிறப்பு தளபதியால் மாவட்ட வேவு அணிக்கு இரண்டாவது பொறுப்பாளனாக தங்கேஸ் விடப்படுகின்றான். தாக்குதல்களில் மட்டுமல்ல வேவு வேலைகளிலும் எதிரியின் காவலரணகளுக்கு அண்மையில் சென்று வேவு பார்த்து வந்தான். பின் மாவட்ட சிறப்புத் தளபதியின் மெய்க்காப்பாளனாக இவன் தேர்ந்து எடுக்கப்படுகின்றான். இதன் பின்பு இவன் பல தாக்குதல்களுக்கு தலைமை தாங்கி தாக்குதல்களை நடாத்துவதற்கு சிறப்புத்தளபதி அனுமதிக்கின்றார்.
அதன்படி இவனும் பல தாக்குதல்களை வெற்றிகரமாக செய்து முடிக்கின்றான். இவ்வேளையில் தான் யாழ் குடாநாட்டில் சிங்கள அரசால் திட்டமிடப்பட்டு இனஅழிப்பை குறிக்கோளாகக் கொண்டு நடாத்தப்பட்டது சூரியக்கதிர் படை நடவடிக்கை. இந்த படைநடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் ஓர் அணியை வழிநாடாத்தும் பொறுப்பு அவனுக்கு வழங்கப்பட்டது. அதை இவன் மிகுந்த மகிழ்வுடன் ஏற்று தனக்கு கொடுக்கப்பட்ட பகுதியில் எதிரியை முன்னேற விடாது தனது கட்டுபாட்டினுள் வைத்திருக்கின்றான். இதற்கு முன் நடாத்தப்பட்ட இடிமுழக்க நடவடிக்கையில் தலையில் விழுப்புண் அடைந்தும் அவன் சளைக்கவில்லை. அக்காயத்துடன் தனது மக்கள் விடுதலை பெற வேண்டும், தனது மண் பறி போகக் கூடாது என்ற சிந்தனையுடன் மழை என்றும் பராது தனக்குரிய கடமைகளை செய்தவண்ணமே காணப்பட்டான்.
இந் நேரம்தான் எமக்கு தாங்கமுடியாத துயர் ஒன்று காத்திருந்தது. 10.11.1995 அன்று தங்கேசின் வோக்கி அலறுகிறது. 'கலோ தங்கேஸ்" தங்கேஸ் தனது வோக்கியை எடுத்துக் கதைக்கிறான். அந்நேரம் எதிரியானவன் தனது தாக்குதலை அதிகரிக்கின்றான். தங்கேஸ் அவசரமாகவும் தனது உறுதி தளராத குரலிலும் கூறுகிறான். 'அண்ணை என்ர உயிர் இருக்குமட்டும் எதிரி ஒரு அங்குலம் தானும் அரக்க முடியாது. வேறை ஒன்றும் இல்லை. நன்றி அவுட்" என்ற பதிலே தங்கேசுவிடம் இருந்து கிடைத்தது. அதன் பிறகு தங்கேஸ் கட்டளைகளைப் பிறப்பித்தவாறு எதிரியின் தாக்குதல்களை முறியடித்தவாறு எதிரிமீது தாக்குதல் தொடுக்கின்றான். இந்நேரம் எங்கிருந்தோ வந்த எதிரியின் எறிகணை தங்கேசின் அருகில் விழ்ந்து வெடிக்கின்றது. அவ் இடத்தே தங்கேஸ் சத்தமின்றி இப் புனித மண்ணை முத்தமிடுகின்றான். தான் காதலித்த மண்ணிற்காகவும் மக்களுக்காவும் அம் மண்ணிலேயே மடிகின்றான்.
தங்கேஸ் சாகவில்லை. சரித்திரமாகிவிட்டான்.
சு.கீரன்(போராளி)