சின்னத்துரை சுகுமாரன்
வவுனிக்குளம் - முல்லைத்தீவு
பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை இறுதிவரை எதிர்த்து நின்று போராடி வீரவரலாறு படைத்த தமிழ் அரசன் பண்டாரவன்னியனால் பெருமைப்படுத்தப்பட்ட மண் வன்னிப் பெருநிலப்பரப்பு. காடுகளும், குளங்களும், விளைநிலங்களும், காட்டு விலங்குகளும், மந்தைகளும் இம்மண்ணின் செல்வங்கள். இத்தகையதொரு விவசாயக் கிராமமான வவுனிக்குளம்தான் சுகுமாரன் என்ற இயற்பெயரோடு மேஜர் மாறன் பிறந்த ஊர்.
சிறுவயதிலேயே ஒழுக்கமும், இரக்க குணமுடைய இவன். தொடக்க கல்வியை பிறந்த ஊரிலேயே முடித்துக் கொண்டு உயர் வகுப்புப் பயில மத்திய மகாவித்தியாலயத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். அப்பாடசாலையில் உயர் வகுப்பில் கல்வி கற்கும் பொழுது மாணவர் மன்றத்தின் தலைவராக இருந்த மாறன் சக மாணவர்களின் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றுக் கொண்டான்.
தமிழீழ மக்களை அடக்கி ஒடுக்கி சூழ்ச்சிகரமாக தமிழின விரோதச் சட்டங்களைப் அறிமுகப்படுத்தி ஓர் இன அழிப்பு நடவடிக்கையில் சிங்கள அரசுகள் இறங்கியிருந்த அக்காலகட்டத்தில், தனது பாடசாலை மாணவர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்த மாறன் பல வழிமுறைகளைக் கைக்கொண்டான். கலை நிகழ்ச்சிகளிற்கு ஊடாகவும், கட்டுரை வடிவங்களிலும், கிராமங்கள் தோறும் பரப்புரை செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினான். அத்துடன் சிங்கள இனவெறி அடக்குமுறைக்குட்பட்ட நிலையிலும் தமிழர்கள் மத்தியில் தலைதூக்கிக் கொண்டிருந்த சாதிக்கொடுமைகளுக்கு எதிரான கருத்துக்களை மக்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு வழங்கினான்.
சிங்கள இனவெறிப் பிடியிலிருந்தும், பிற்போக்குத் தமிழ் தலைமைகளிலிருந்தும் தமிழீழ சமூகம் விடுவிக்கப்பட்டு ஒரு புரட்சிகரத் தலைமையினால் வழிநடத்தப்படும்போதுதான் இத்தகைய சமூக ஏற்றத்தாழ்வுகளையும், சமூக ஒடுக்குமுறைகளையும் களைந்தெறிய முடியும் என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கையை எடுத்துக்கூறிய மாறன் 1983ஆம் ஆண்டின் முற்பகுதியில் தன்னையும் இணைத்துக் கொண்டான்.
கிளிநொச்சி மாவட்ட விடுதலைப் புலிகளின் அரசியற் பொறுப்பாளனாக இருந்தபோது மக்கள் மீது அவன் வைத்திருந்த நேசமும், அக்கறையும் அவனை ஒரு சிறந்த போராளியாக மக்கள் மத்தியில் வெளிக்காட்டியது. சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் கிராமங்களே மாறனின் கவனத்தை சிறப்பாக ஈர்த்தன. அம்மக்களின் நல்வாழ்விற்காக மாறன் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.
சிங்கள வெறியர்களின் காடைத்தனங்களால் தமது சொந்தக் கிராமங்களைவிட்டு ஏதிலிகளாகத் துரத்தப்பட்ட தமிழ் மக்களிற்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் விடுதலைப் புலிகளின் செயற்திட்டங்களுக்கு சரியான முறையில் மாறன் செயல் வடிவம் கொடுத்தான். மேலும் மக்களுக்கிடையில் ஏற்படும் சாதாரண பிரச்சினைகளை சரியான கோணத்திலிருந்து அணுகி அதனைத் தீர்த்து வைக்க மாறன் கையாளும் அணுகுமுறைகள் மக்கள் மத்தியிலிருந்த அவனது மதிப்பை மேலும் உயர்த்தியது. எந்தப் பிரச்சினைகளானாலும் அவற்றைத் தீர்த்துவைக்க முற்படுகின்ற பொழுது அப்பிரச்சினைகளின் தோற்றம், அதற்கான காரணங்கள், அக்காரணிகளைத் தோற்றுவிக்கும் சமூகப் பின்னணி என்பனவற்றை ஆராய்ந்த பின்பே தீர்ப்புக்களை வழங்குவான்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், விடுதலைக்கெனப் புறப்பட்டு பிழையான தலைமைகளால் வழி நடாத்தப்பட்டு, திசை மாறி சமூக விரோத சக்திகளாகிய சில அமைப்புக்களால் மக்கள் துன்புறுத்தலுக்குள்ளாகிய வேளையில், அவதானத்துடன் அதேவேளையில் உறுதியுடன் மக்களை அச்சக்திகளிடம் இருந்து காத்தான்.
அமைதிப்படை என்ற போர்வையில் எமது மக்கள் மீது ஆதிக்கத்தினைச் செலுத்த வந்த இந்திய அரசின் வஞ்சக நோக்கத்தை எமது மக்களிற்கும், உலகத்திற்கும் காட்டுவதற்காக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாநிலைப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றி மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கப் பாடுபட்டான்.
இந்திய ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான யுத்த காலகட்டத்தில் எமது கருத்துக்களையும், உண்மைச் செய்திகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக எமது இயக்கத்தால் வெளியிடப்படும் 'உணர்வு', 'சுதந்திரப்பறவைகள்' ஆகிய ஏடுகளின் உருவாக்கத்திற்கும், அவற்றை மக்களிடம் கொண்டு செல்லவும் மாறன் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளுடைய பங்கின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அவர்களை அணி திரட்ட வேண்டிய அவசியத்தைப் பற்றியும் அடிக்கடி வலியுறுத்திக் கூறுவதுடன் அவைகளுக்கு செயல் வடிவமும் கொடுத்துள்ளான். வவுனியா, கிளிநொச்சி, முல்லை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப்பிராந்தியத்தில் பெண்களுக்கிடையில் அரசியல்ரீதியான விழிப்புணர்ச்சியை உண்டு பண்ணி எமது இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் அவர்களையும் பங்குகொள்ள வைக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளான்.
இவ்வாறாக விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டுசென்று சரியான முறையில் செயற்படுத்திய வேலைத்திறனும், மக்கள் மீது குறிப்பாக சமூக ஒடுக்குமுறைக்குள்ளாகிய மக்கள் மீது மாறன் காட்டிய நேசமும் அவனை வன்னிப் பிராந்திய அரசியல் பொறுப்பாளனாக உயர்த்தியது.
26.06.1989 அன்று வவுனியா மாவட்டத்திலுள்ள பன்றிக்கெய்த குளம் என்னும் இடத்தில் வன்னிப்பிராந்திய அரசியற் பொறுப்பாளர் மேஜர் மாறனுடன் லெப். நித்திலா(மகளிர் படைப்பிரிவு), லெப். அருள், சுதன், மகேந்தி, சபா, பொபி, அகிலன், கேசவன், அச்சுதன், நவம், விஜயன், முரளி, ரூபன் ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.