அழியாச்சுடர்கள்

தாயக விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய வேங்கைகளின் வீரவரலாறு

லெப்.கேணல் நிலவன்

லெப்.கேணல் நிலவன்

அ. தங்கராசா டென்சில் டினஸ்கோ 
யாழ்ப்பாணம்

ஆறடி உயரம், ஒருமுறை பார்த்தால் மறுமுறை பேசத் தூண்டும் எடுப்பான தோற்றம். கள்ளம் கபடமற்ற அவன் சிரிப்பு. அரசியல் தெளிவு மிக்க அவன் பேச்சு, படையியல் காய் நகர்த்தலில் அவனுக்கிருந்த திறன், மக்களுக்குள் இறங்கி அவர்களின் வாழ்வியலை உயர்த்த அவன் உழைத்த உழைப்பு என எல்லாவற்றிலும் என்றும் மறக்க முடியாத ஒருவன் தான் நிலவன்.
 
இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்து கடற்புலிகள் அணிக்கு வந்திருந்த நிலவனது கையில் இருந்தது RCL ஆயுதம். இந்த ஆயுதத்துடன்தான் படகுகளில் ஏறிச் சண்டை செய்தான்.
 
படகில் ஆயுத இயக்குனராகச் சண்டைகளுக்குச் சென்று வந்த நிலவன் பல்வகைப் படைக்கலங்களைக் கையாள்வதில் தேர்ச்சி மிக்கவனாகத் தன்னை வளர்த்தான்.
 
படையக்கருவிகளைக் கையாண்டு கடற்போர்களைச் செய்த நிலவன், மெல்ல மெல்ல படகின் ஓட்டியாக, பொறி சீர் செய்பவனாக, தொலைத்தொடர்பாளனாக படிப்படியாக வளர்ந்து, படகை வழிநடத்தும் கட்டளை அதிகாரியாக தன்னை வளர்த்திருந்தான். மிகக் குறுகிய காலத்துக்குள் இவனது வளர்ச்சியைப் பார்த்து நானே பல வேளைகளில் பெருமைப்பட்டிருக்கிறேன்.
 
இவனது செயல்திறனைக் கருத்தில் கொண்டு கடற்புலிகளின் நடவடிக்கை அணிக்குள் உள்வாங்கி இருந்தேன். நேரம் காலமின்றி ஓய்வு ஏதுமின்றி அயராது உழைக்கும் நடவடிக்கை அணியில் நிலவன் மிகத் திறமையுடனும், பொறுப்புடனும் செயல்பட்டான். இங்கு நீண்ட கடல் அனுபவத்தைப் பெற்றுச் சிறந்த கடலோடியாகத் தன்னை இனங்காட்டியிருந்தான். நல் ஆற்றலும் ஆளுமையும் கொண்டு வளர்ந்து வரும் போரளிகளுக்குக் கண்டிப்பாக நிர்வாகத் திறனும் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. இதனால் நிலவனுக்குச் சற்றுக்கூட பொருத்தம் இல்லாத கடற்புலிகளின் வழங்கல் பகுதிப் பொறுப்பைக் கொடுத்துப் பார்த்தேன். ஆனால் அந்தப் பணியையும் எந்தவித பின்னடைவும் ஏற்படாத வண்ணம் மிக நேர்த்தியாக செய்து காட்டினான்.
 
இந்த நேரத்தில்தான் மன்னாரில் சிறிலங்காப்படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழும் மக்களில் "போதைப்பொருள்" பயன்பாட்டிற்கு அடிமையாகி வருபவர்களைக் காப்பதோடு, அதன் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்தி, மக்களை இந்தக் கேடான பழக்கத்திலிருந்து விழித்தெழச் செய்ய வேண்டிய பொறுப்பை ஒப்படைத்திருந்தேன். மன்னாருக்குள் சென்ற நிலவன் நான் எதிர்பார்த்ததை விட மிக விரைவாகப் பணியில் இறங்கி, மதகுருமார்கள், அறிஞர்கள், சமூகப்பெரியவர்கள் என எல்லோரையும் அணுகி சமூகத்தைக் காக்கவேண்டிய கடமையை எடுத்துச் சொன்னான். ஒவ்வொரு வீடாகப் போய் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஊட்டினான். இவனது பெரும் முயற்சி பேராபத்திலிருந்து மக்களை காத்ததென்றால் மிகையாகாது.
 
இவ்வாறு சமூகப் பணியின் மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்த நிலவன் மன்னர் நடவடிக்கை அணியிலும் சிலகாலம் செயற்பட்டிருந்தான். இந்தச் சூழ்நிலையில்தான் ஆழிப்பேரலை வேரவலம் ஏற்பட்டது. இந்த இழப்புக்குள்ளும் அழிவுக்குள்ளும் இருந்து மக்களை நிமிர்த்தி மீளக் குடியமர்த்த வேண்டிய தேவை இருந்தது.
 
இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு அபிவிருத்திச் செயல் திட்டங்களைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் இருந்தது. இங்குதான் வடமராட்சி கிழக்கின் அபிவிருத்தி மீள் குடியேற்றப் பணிக்காய் நான் நிலவனை நியமித்தேன். ஆனால் அந்தப்பகுதி அவனது சொந்த இடமாக இருந்ததனால், அங்கு சென்று வேலை செய்வதற்கு அவனுக்கு உடன்பாடு இருக்கவில்லை. ஆனால் நிலவனைக் கூப்பிட்டு நிலமையை எடுத்துச் சொல்லி இது மக்களுக்குச் செய்யும் பெரும்பணி என்பதை உணர்த்திய போதுதான் அந்த வேவையை பொறுப்பெடுத்தான்.
 
மிக வேகமாக இரவு பகல் பாராது அந்தப் பணிக்குள் மூழ்கிய நிலவன் குறிப்பிட்ட சில காலத்துக்குள் மீண்டும் என்னிடம் வந்து நின்றான். "நான் அங்க வேலை செய்யேல்ல....." ஏன் என்று எனக்குத் தெரியும். சில புரிந்துணர்வுச் சிக்கல்கள் அவன் மனதைப் பாதித்திருப்பதை நான் உணர்ந்தேன். அவனது இடத்துக்கு வேறு ஒருவரை அனுப்பிவிட்டு நிலவனைத் திருகோணாமலை மாவட்டத்திற்குப் பொறுப்பாக நியமித்தேன். அவனும் மிக விருப்புடன் அந்தப் பணியை ஏற்றுச் சென்றிருந்தான்.
 
அங்கு மிக இறுக்கமான கால கட்டத்தில் எல்லாம் உறுதியோடும் மன வைராக்கியத்தோடும் நின்று செயற்பட்டிருந்தான்.
 
பின்னர் திருகோணமலையிலிருந்து திரும்பிய நிலவனுக்கு லெப்.கேணல் பாக்கியன்/பாக்கி படையணிப் பொறுப்பை ஒப்படைத்திருந்தேன். அந்தப் படையணியை வளர்க்க அவன் உழைத்தான். அவனது உழைப்பு அந்தப் படையணியில் பாரிய மாற்றங்களைத் தந்தது. (லெப். கேணல் பாக்கி நிலவனின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது)
 
பிரிகேடியர் சூசை
சிறப்புத் தளபதி
விடுதலைப் புலிகளின் கடற்புலிகள்
 
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
 
அல்பிரட் தங்கராஜா டென்சில் டினெஸ்கோ (டென்சில்) யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் க.பொ.த. சாதாரண தர மாணவன். அதற்கு முன்னர் வெற்றிலைக்கேணி றோமன் கத்தோலிக்க பாடசலை, மற்றும் வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தனது ஆரம்ப கல்வியைக் கற்றிருந்தான்.
 
இதன் பின்னர் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட ரிவிரெச படை நடவடிக்கை காரணமாக இடம் பெயர்ந்து இரணைப்பாலையில் வசித்து வந்தான். அத்தருணத்தில் தேசம் விடுத்த அழைப்பினை ஏற்று தனது தாய் நாட்டுக்குரிய கடமையைச் செய்வதற்காக 14.02.1997 அன்று எமது விடுதலை அமைப்பில் இணைந்து கொண்டான்.
 
அமைப்பின் சில தேவைகளின் பொருட்டு குறித்த ஒரு கடமைக்காக போராளிகள் உள்வாங்கப்பட்ட பொழுது இவனும் அக்கடமைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டான். இம்ரான் பாண்டியன் படையணிக்குத் தெரிவுசெய்யப்பட்டான். "கெளதமன் - 02" இவனது தொடக்கப் பயிற்சி முகாம். ஏறக்குறைய 06 மாதங்கள் தனது அடிப்படை படையப் பயிற்சியை நிறைவு செய்த இவன் மாறன் என்ற பெயருடன் வெளியேறினான்.
 
அடிப்படைப் பயிற்சி முகாமைப் பொறுத்த வரை எந்தப் போரளிக்கும் அது ஒரு புது அனுபவமாகவே இருக்கும். மாறனும் இதற்கு விதிவிலக்கானவன் அல்ல. இருந்த போதிலும் இவன் நிற்கும் இடத்தில் ஒரு கூட்டமே இருக்கும். கடுமையான பயிற்சிகளைப் பெற்றும் சோர்வடைந்து ஓய்வாக இருக்கின்ற பொழுது இவன் கூறும் நகைச்சுவைகள், மற்றும் மற்றவர்களை ஊக்கப்படுத்தும் பேச்சுக்கள் என்பவை போராளிகளுக்கு சோர்வைக் களைந்து புதுத் தென்பை ஊட்டும். சிரிப்பொலிகளால் அந்த இடத்தின் மெளனமே கலையும்.
 
எந்தப் போரளிக்கும் சுகயீனம் என்றால் தாயாக, தந்தையாக நின்று அப்போராளியைப் பராமரிப்பான். இவன் இயக்கத்தில் இணைவதற்கு முன் கிபிர் தாக்குதல் ஒன்றில் கையில் காயமடைந்து கொழும்பு வரை சென்று சிகிச்சை பெற்று வந்த பொழுதிலும், பயிற்சியில் அதன் விளைவைக் காண முடியாது. சாதாரண போராளிகள் போலவே பயிற்சியினை சிரித்து சிரித்தே செய்து முடிப்பான்.
 
அடிப்படைப் பயிற்சியினைப் பெற்றுக்கொண்ட இவன் சில இரகசிய கடமைகளைப் பொறுப்பேற்று செய்தான். அதன் பின் கனரக ஆயுதப்பயிற்சிகளைப் பெறுகின்றான். கனரக ஆயுதப்பயிற்சியினைப் பெற்றுக் கொண்ட இவன் 26.09.2000 அன்று ஓயாத அலைகள் -04 நடவடிக்கையில் இத்தாவில் பகுதியிலும், 30.09.2000 அன்று கண்டல் பகுதியிலும், 05.10.2000 அன்று நாகர்கோயில் பகுதியிலும், 09.10.2000 அன்று கிளாலிப் பகுதியிலும், 19.10.2000 அன்று மீண்டும் நாகர்கோயில் பகுதியிலும் எதிரியின் அரண்களை சிதைத்து தனது ஆயுதத்தால் எதிரியை சிதறடித்து ஓயாத அலைகள் -04 நடவடிக்கைக்கு பலம் சேர்த்தான். இவன் தொடர்பாக தக்குதலை வழிநடத்திய தளபதிகள் கூறும் பொழுது "சண்டை எண்டா அவனுக்கு ஒரு கலை, அவனில் எந்த பதட்டமும் இருக்காது, சிம்பிளா நிப்பான்" எனக் கூறினார்கள்.
 
சண்டை முடிவுற்றதும் பின்தள பணி சிலவற்றிற்காக எடுக்கப்பட்ட பொழுது தனது சில விண்ணப்பங்களை போராளிகளுடனும் பொறுப்பளர்களுடனும் பகிர்ந்து கொண்டான். அதாவது கடற்புலிகள் அணிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையினை தெரியப்படுத்தினார்.
 
இதற்கு முன்னர் 27.01.2000 அன்று அண்ணைக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் "அண்ணை நான் கடற்புலிகள் அணிக்குப் போக விரும்புறன். நான் கடற்கரை சார்ந்த கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தனான், எங்கட சொந்தங்கள், உறவுகள் எல்லாம் நேவிக்காரன் சுட்டுத்தள்ளுறான், அவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும். ஆகவே கடற்புலிப் படையணியில் எனது பணியைத் தொடர அனுமதியுங்கள்" என்று கேட்டுக்கொண்டான்.
 
அதற்கு பதில் வருவதற்கு சிறு தாமதங்கள் ஏற்பட்ட போது அடுத்தடுத்து மூன்று கடிதங்கள் அனுப்பினான். "அண்ணை கடற்புலியில் இருந்த எனது சித்தப்பாவான பாக்கி அண்ணையும் (லெப்.கேணல் பாக்கியன் / பாக்கி) வீரச்சாவடைந்துவிட்டர். அவரது பணியைத் தொடர என்னை அனுமதியுங்கள்" இது இவனது மூன்றாவது கடிதம்.
 
இவனது மூன்றாவது கடிதத்துக்குரிய பதிலானது இவனை பரவசத்தில் ஆழ்த்தியிருந்தது என்றே கூறவேண்டும். மச்சான் நான் கடற்புலிக்குப் போறன்டா, அண்ணை ஓம் எண்டுட்டார், இருந்துபாரன், மாறன் ஆமியை ஒரு கை பாத்துத்தான் திரும்பி வருவான்". இது இம்ரான் பாண்டியன் படையணிப் போராளி ஒருவனிடம் கூறியது.
 
அதன் பின்னர் தலைவரின் பணிப்பிற்கு அமைய, 2001.09 ம் மாதம் கடற்புலிப்படையணிக்கு அனுப்பப்பட்டான்.
 
இவனது வரலாற்றை ஒன்றிரண்டு பக்கங்களுக்குள் எழுதிவிட முடியாது. எங்கென்றாலும் போருக்கான முன்னகர்வுகள் கடற்புலிகளால் முன்னெடுக்கப்படும் பொழுது அங்கு நிலவனைக் காணலாம். தனக்குக் கிடைக்கப்போகும் பணியை எதிர்பார்த்துக் காத்திருப்பான். கடைசிச் சமரிலும் அப்படித்தான் காத்திருந்தான். 26 டிசம்பர் 2007 அன்று நெடுந்தீவுப்பகுதியில் நடந்த கடற்சண்டை உண்மையில் நாம் எதிர்பார்த்திருந்த ஒன்றல்ல. முதல்நாள் நத்தார்ப் பண்டிகை என்றமையால் எதிரியின் வருகை இருக்காது என எதிர்பார்த்திருந்தோம். நிலவன் அந்தப்பகுதியில் தாக்குதல் படகுக்குரிய கட்டளை அதிகாரியாய் இருக்கவில்லை. வேரொரு முக்கிய பணியில் நின்றிருந்தான்.
 
25 ம் நாள் இரவு எமது முகாமே கலகலப்பாக இருந்தது. கலைநிகழ்வொன்றை ஒழுங்கமைத்து, அதிகாலை 2 மணிவரை அதில் கலந்து கொண்டுவிட்டு அதன் பின்னரே நித்திரைக்குச் சென்றோம். நித்திரைக்குச்சென்ற சிலமணி நேரங்களுக்குள் எமது கண்காணிப்பாளர்கள் எதிரி எமது பகுதியை நோக்கி டோராக்களில் வருவதாக அறிவித்தனர். உடனே நாமும் தாக்குதலுக்குத் தயாராகிவிட்டோம். அந்நேரம் எமது ஒரு படகின் கட்டளை அதிகாரி மிகவும் சுகயீனமுற்றிருந்தார். என்ன செய்வதென யோசித்துக் கொண்டிருந்தோம். நிலவன் தான் அந்தப் படகைப் பொறுப்பெடுத்து செல்வதாக சம்மந்தப்பட்ட பொறுப்பாளரிடம் அடம்பிடித்து அந்தப் படகைப் பொறுப்பெடுத்து மிகவேகமாக தாக்குதலுக்குத் தயாரானான்.
 
பகற்பொழுதில் 11 டோராப்படகுகளுடனும் எம்.ஐ.24 ரக உலங்குவானூர்தியுடனும் கிபிர் வானூர்திகளுடனும் எதிரி மிகவும் பலமான நிலையில் கடுமையான தாக்குதலைத் தொடுத்தான். அர்ப்பணிப்புடனும் துணிச்சலுடனும் எமது போரளிகள் அந்தக்களத்தை வென்று கொண்டிருந்தனர். தாக்குதல் தளபதி லெப்.கேணல் நிலவன் தனது தனிப்படகால் நெடுந்தீவைச் சுற்றி வந்து தாக்குவதற்கும் தயாராக இருந்தான். அந்தளவு துணிச்சலுடன் இந்த மண்ணின் விடிவுக்கும் கடலின் விடிவுக்கும் தன்னை அர்ப்பணித்து போர் புரிந்து கொண்டிருந்தான். ஒரு டோரா அடித்து மூழ்கடிக்க மேலும் இரண்டு அடித்து மிக மோசமாக சேதமாக்கப்படுகிறது.. பெரு வெற்றியை எமது இனத்திற்கு கொடுத்துவிட்டு தளபதி நிலவன் உள்ளிட்ட மாவீரர்கள் கடலிலே காவியமனார்கள்.
 
எந்த நேரத்திலும் எந்த வகையான பணியினைக் கொடுத்தாலும் சலிப்பின்றி நேர்த்தியான முறையில் திறம்பட தன்னம்பிக்கையோடு செயற்படும் பல்துறை ஆளுமைமிக்க போராளியை சிறந்த ஒரு தளபதியை நாம் இழந்து நிற்கிறோம். இவனுடைய நினைவுகள் சுமந்த எம் வீரர்கள் புதிய பயிற்சிகளுடனும் பெருவேகத்துடனும் அடுத்த தாக்குதலுக்கு தயாராகி நிற்கின்றனர்…..
 
-கடலிலே காவியம் படைப்போம்-
 
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
 
நன்றி :-
கேணல் சிறிராம் (தாக்குதல் தளபதி - கடற்புலிகள்)
------------------------------
ஆக்கம்: பா. சுடர்வண்ணன், பெ.மைந்தன்
லெப். கேணல் ராதா வான் காப்புப் படையணி

Image
  • www.veeravengaikal.com
  • info@veeravengaikal.com

மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும்.

பின்தொடர்க..