யேசுதாசன் மரியமகிந்தினி
கற்கோவளம், யாழ்ப்பாணம்
எல்லோரதும் உதாரணமாய் லெப். கேணல் சுதந்திரா
அது ஒரு சிறப்பு அணி. அதிசிறப்பு அணி. காட்டின் சருகுகள் காலில் மிதிபடும் ஓசையைக் கூட எழும்பாது பதுங்கி நகர்ந்து, பார்வையைக் கூர்மையாக்கி இரைதேடி, பொருத்தமான இலக்கை மட்டுமே வேகப் பாய்ச்சலில் பாய்ந்து தாக்குகின்ற சிறுத்தை போன்றது அந்தச் சிறப்பு அணி. தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்ட அதன் உறுப்பினர்களும் சிறுத்தைகளை ஒத்தவர்களே, அடித்தால், இலக்குத் தப்பாது, தப்பவிடக்கூடாது.
மனிதர்களைச் சிறுத்தைகளாக்குகின்ற அந்த மாபெரும் முயற்சியில் சுதந்திரா முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்த நாட்கள் அவை. சிறப்பு அணிக்குரிய படைய தொடக்கப் பயிற்சித் தளத்தின் பொறுப்பதிகாரி அவர்.
அப்போதுதான் வீட்டிலிருந்து வந்த இளம் பெண்களை, ‘உன்னால் முடியாது’ என்று சமூகம் சொல்வதை நம்பி கடினமானவை என்று கருதப்படுகின்ற பணிகளை அப்பாக்கள் அண்ணாக்களின் உதவியோடு செய்தார்களை, அவர்கள் கனவில் கூட கண்டிருக்கமுடியாத வாழ்க்கைக்கு அழைத்துப் போவது அவ்வளவு எளிதானதல்ல.
அந்த கடின பணியைச் சுதந்திரா செய்துமுடித்தார். அவர்களுக்கு ஒவ்வொரு விடயமாகச் சொல்லிக்கொடுத்தார். எது ஏன் செய்யப்படுகின்றது என்பதைப் புரிந்துகொண்டு அவர்கள் செய்ததனால், தலைவர் அவர்களின் எதிர்பார்ப்புக்கமைய அவர்களால் செயலாற்ற முடிந்தது.
அங்கே எல்லாமே நேரக் கணக்குப்படிதான், குறிக்கப்பட்ட நேரத்தினுள் எல்லோரும் உணவறையில் ஒன்றாக இருக்கைகளில் அமர்ந்து, பரிமாறப்படுகின்ற அதிகரித்த அளவிலான உணவை, கீழே சிந்தாமல், மிச்சம் மீதிவிடாமல் சாப்பிட்டே ஆகவேண்டும். மேற்பார்வையாளரின் விழிகள் அனைவரையும், அனைத்தையும் கவனித்துக் கொண்டேயிருக்கும். நேரம் கடந்தும் சாப்பிடமுடியாமல் திணறுபவர்கள் சுதந்திராவின் குடில் வாயிலில் நின்றவாறு சாப்பிட்டு முடிக்க நேரிடும.
அவர்களின் அதிகரித்த பயிற்சியால் எப்படி சக்தி இழக்கப்படுகின்றது என்றும், அதை ஈடுசெய்ய அவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய தேவைபற்றியும் உள்ளிருந்து ஒலிக்கும் சுதந்திராவின் குரல் விளக்கும். ஒருமுறை நின்றவர்கள் மறுபடி குடில் வாயிலில் நிற்க வேண்டியிராது.
காலையில் ஓடு பாதைக்குப் போகுமுன் குடிக்கவேண்டிய அரை அவியல் முட்டை, வந்த புதிதில் பலருக்குச் சிக்கலாகவே இருக்கும். ஏன் முட்டை குடிக்கவேண்டும் என்று விளக்கியவாறே சுதந்திரா தன் கையாலேயே முட்டைகளை ஒவ்வொருவருக்கும் கொடுத்துக் கொண்டிருப்பார்.
ஓட்டம் தொடங்கும் புள்ளியில் சுதந்திரா நிற்பார். இரண்டாவது, மூன்றாவது சுற்று ஓடும்போதும் அதிலேயே நிற்பார் என்ற எண்ணத்தில் இடைவழியில் எவரேனும் நடக்கமுனைந்து நாலு அடி எடுத்து வைத்துவிட்டு நிமிர்ந்தால், எதிரேயுள்ள மரத்தோடு சாய்ந்தபடி சுதந்திரா நிற்பார். எந்த இடைவழிகளால் எப்படி அவர் வருகின்றார் என்பது ஒருவருக்கும் விளங்காது. திடிர் திடிரெனக் காட்சி தருகின்ற சுதந்திராவின் வருகையே எல்லோரையும் ஓடவைக்கப் போதுமானது.
பிழைகள் நடந்த வேளைகளில், கோபத்தை ஏற்படுத்தக் கூடியமாதிரி பேசாமல், தாம் உணர்ந்து கொள்ளக்கூடியவாறு சுதந்திரா கதைத்ததாகவே அவரைப்பற்றி சிறப்பு அணியினர் இப்போதும் கூறுகின்றார்கள்.
போராளிகள் தவறுவிட்டால், அந்த அணித்தலைவரைக் கூப்பிட்டுக் கண்டிப்பார். கடுமையானவர்களுக்குக் கடுமையாக, இலகுவானவர்களுக்கு எளிமையாக அவரவர் இயல்புக்கேற்ப ஒவ்வொருவரையும் அணுகுகின்ற சுதந்திரா, 1993ம் ஆண்டின் இறுதியில் சிறப்பு அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதிலிருந்து 1995ம் ஆண்டின் இறுதிவரை ஏழு அணிகளுக்கு சிறப்புப் பயிற்சியின் முன்னோடி படைய தொடக்கப் பயிற்சியை வழங்கியிருந்தார்.
கல்விப் பொதுத் தராதர (உ/த) கலைப்பிரிவு மாணவியாக இருந்த சுதந்திரா 1989ம் ஆண்டில் எமது அமைப்பில் இணைந்து கொண்டார். இந்திய வல்லாதிக்க படைகள் சூழ்ந்திருக்க, மணலாற்றுக் காட்டினுள்ளே தலைவர் அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ற வகையில் மேஜர் சோதியா, மேஜர் சஞ்சிகா முதலானோர் பெண் போராளிகளுக்கென உருவாக்கிய ‘விடியல்’ பாசறையில், விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் ஐந்தாவது அணியில் தனது படைய தொடக்கப் பயிற்சியை நிறைவுசெய்த சுதந்திரா, 1990ன் ஆரம்ப நாட்களில் இந்தியக் படையினரின் வெளியேற்றத்தோடு, மகளிர் படையணி காட்டுக்குள்ளிருந்து நாட்டுக்கு வருகை தந்தபோது, வெளிவந்திருந்தார்.
தொடக்க நாட்களில் படையணியின் களஞ்சியப் பொறுப்பாளராகவும், அறிக்கையாளராகவும் பணியாற்றியவர், 1990 ஆண்டிலேயே பலாலி – கட்டுவன் பகுதியில் நிலைகொண்டிருந்த சிறு அணியொன்றின் வழிநடத்துனராகவும் செயற்பட்டார்.
1991ல் ஆனையிறவு மீதான ஆகாய கடல் வெளி நடவடிக்கையின் முடிவில், அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சி கற்கை நெறிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லெப். கேணல் ராஜன் அவர்களால் நடாத்தப்பட்ட அந்த அதிகாரிகள் கல்லூரி ராஜனைப் போலவே ஒழுக்கமும் கண்டிப்பும் நிறைந்ததுதான். கட்டாயம் சுட்டு ஆறிய நீர்தான் எல்லோரும் குடிக்கவேண்டும். குளிர்பானம் தயாரிப்பதாயினும் அதில்தான். எதைக் குடித்தாலும் நோயே வராத உயர் எதிர்ப்பு சக்திவாய்ந்த எம்மவர்களுக்கு சுடவைத்த நீர் சுவை குறைந்திருப்பதாகத் தோன்றியது. ராஜனின் ஒப்புதலைப் பெறாமலேயே, ஒருநாள் சுடவைக்கப்படாத அதாவது சுவையான நீரில் குளிர்பானத்தைத் தயாரித்து எல்லோருக்கும் கொடுக்க, வந்தது வில்லங்கம். வயிற்றோட்டத்தால் அவதியுற்ற சுதந்திராவால் எல்லோருமே அகப்படவேண்டிய ஏதுநிலை தோன்றவே, அன்றோடு பச்சைத் தண்ணீரைக் கைவிட்டார்கள் சுதந்திராவைத் திட்டியவாறே.
எவருமே எதிர்பாராதவண்ணம் பேரிடியாய் நிகழ்ந்த லெப். கேணல் ராஜனின் வீரச்சாவோடு தமது பயிற்சியை இடைநிறுத்திய அதிகாரிகளுக்கு உடனே பணி காத்திருந்தது. 1992ல் தொண்டைமானாற்றிலிருந்து ஒட்டகப்புலம் வரையான நூற்றைம்பது காவலரண் அழிப்பு நடவடிக்கையில் பங்கேற்ற விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் அணிகளின் நிர்வாகப் பொறுப்பு இவரிடம் கொடுக்கப்பட்டது. அதுதான் முதல் அனுபவம் என்றாலும், சிறப்பாகவே தன் பங்கை ஆற்றியிருந்தார் சுதந்திரா.
நடவடிக்கையின் பின்னும் தாக்குதல் அணிகளோடே பெரும் பொழுதைக் கழித்த லெப். கேணல் சுதந்திரா, 1993ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து மறைந்து போனார். முடியாதது என்று எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்கும்போதே அதை முடித்துக் காட்டுகின்ற எமது தலைவர் அவர்கள் மிகுந்த நம்பிக்கையோடு பெண் போராளிகளை மட்டும் கொண்டதாக சிறுத்தைகளின் வேகங்கொண்ட ஓரு சிறப்பு அணியை 1992லேயே உருவாக்கினார். அது 1993ன் கடைசிப் பகுதியில் சுதந்திராவை உள்வாங்கிக்கொண்டது.
1995 பிற்பகுதிவரை படைய தொடக்கப் பயிற்சியோட நின்ற சுதந்திராவுக்கு, மறு ஆண்டே ஒரு புதிய பணி தரப்பட்டது. படைய தொடக்கப் பயிற்சியை முடித்திருந்த குறிப்பிட்ட தொகைப் போராளிகளுக்கு மேலதிகப் பயிற்சி வழங்கி, சிறப்பு அணியினரின் இரண்டாவது தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு இப்போது சுதந்திராவிடம்.
யாழ்ப்பாணத்திலிருந்து வன்னி நோக்கிய மாபெரும் இடப்பெயர்வோடு சிறப்பு அணி வன்னியின் காடுகளுள் புகுந்துகொண்டது. பொருட்களை ஏற்றிவந்த ஊர்திகள் காட்டுக்கு வெளியே நின்றுகொள்ள, அத்தனை பொருட்களையும் போராளிகள் தலையிலும் தோளிலும் காவிச் சென்றனர். அதற்கிடையிலேயே காட்டுக்குள் சுதந்திராவின் அணியினர் காட்டுத் தடிகளால் குடில்கள் அமைத்து புற்களால் கூரை வேய்ந்து களஞ்சிய அறைகளைத் தயார் செய்துவிட்டனர். பொருட்கள் வருவதும், சுமப்பதும், அடுக்குவதும் இரவு பகலாக நடந்துகொண்டிருந்தது. பெருந்தளங்களே இடம்மாறிய காலமல்லவா அது?
சுதந்திரா தனது அணியினரை மூன்றாகப் பிரித்தார். ஒரு அணி குடில்களை அமைத்து கிணறு வெட்ட, ஒரு அணி பொருட்களைச் சுமக்க, ஒரு அணி தனது சிறப்புப் பயிற்சியை செய்துகொண்டிருக்கும். இது மூன்று அணிகளுக்கும் சுழற்சி முறையில் வரும, இடப்பெயர்வு நடந்ததே தவிர. பயிற்சிகள் இடைநிறுத்தப்படவில்லை.
ஒரு பிஸ்கட் பேணியுடன் ஒரு அணி ஓருநாள் முழுதும் பயிற்சி எடுத்த நாட்கள் அவை, சில நாட்களில் அதுவும் இருக்கவில்லை. அப்படியான நேரங்களில் பாகையையும் தூரத்தையும் கொடுத்து நீண்ட காவலுலாவுக்கு அணிகளை அனுப்பிவிடுவார் சுதந்திரா. பாகையும் தூரமும் தரப்பட்டால், அன்று பட்டனிதான் என்று அணிகளுக்குப் புரிந்துவிடும்.
காட்டுக்குள் அமைக்கப்பட்ட களஞ்சியம் நிறையும்வரை இந்தக் கடின நாட்கள் தொடர்ந்தன. இப்போது எல்லாம் ஓரளவு சரி. நீர் வசதிதான் ஏற்படுத்தப்படவில்லை. தூரத்தேயுள்ள குளம் ஒன்றுதான் கைகொடுத்தது. அன்றிரவு களஞ்சியத்தினுள் போத்தல் விளக்கொன்றைத் தூக்கிப் பிடித்தபடி பொருட்கள் எடுப்பதற்காக வந்த போராளி ஒருவர், திடிர் காற்றுக்கு நெருப்பு அலைபாய்ந்து சட்டென குறைந்து கூடி எரிய அவரின் கைகள் தன்னிச்சையாகப் போத்தலை வீசிவிட்டன.
தூரத்தே நின்ற சுதந்திரா மரங்களின் உச்சியைத் தொட்டவாறு உயர்ந்த நெருப்பைக் கண்டு ஓடிவந்து, நெருப்புக்குள் நின்று பொருட்களை எடுக்க முயன்று கொண்டிருந்த எல்லோரையும் வெளியே தள்ளிவிட்டு, தனியான தன்னை மறந்த நிலையில் கையில் அகப்பட்டவற்றை எடுத்து வெளியே எறிந்தார். போத்தல்கள் வெடித்து, பேணிகள் உருகி… ஒரு சிலவற்றைத் தவிர எல்லாம் நாசம்.
அமைப்புக்கு நாம் கடன்பட்டிருக்கின்றோம் என்று அந்த நிகழ்வுபற்றி அடிக்கடி அணியினரோடு கதைப்பார் அவர்.
அந்த சுடுகலன்கள் அப்போதுதான் அமைப்புக்குப் புதிதாகக் கிடைத்திருந்தன. ஆவற்றைத் தலைவர் அவர்கள் சிறப்பு அணியினருக்கு வழங்கியிருந்தார். வழங்கப்பட்ட தொடக்க நாட்களில் எல்லோரது சுடுகலன்களையும் துப்பரவு செய்வது சுதந்திராதான். ஓரு வாரமளவில் அணியினர் நன்கு பார்த்துப் பழகிய பின்பே, அவர்களைத் துப்பரவு செய்யவிட்டார். தூய்மைப்படுத்தலைச் சரிபார்க்கும் போது எப்படியோ எங்கேயோ ஒரு சிறு தூசு அவரின் கண்களில் பட்டுவிடும். நான்கு கரும்புலிகள் உட்பட பதினெட்டு கடற்புலிகள் தமது உயிர்களை விலையாகக் கொடுத்து தாயகத்துக்கு அனுப்பி வைத்த சுடுகலன்கள் அவை. அவற்றின் உயிர்ப் பெறுமதியை மீளவும் மீளவும் எல்லோருக்கும் நினைவுபடுத்துகின்ற சுதந்திரா, சுடுகலனைத் துப்பரவாக வைத்திருக்காதவர்களை உரிய ஒறுப்புக்குள்ளாக்குவார்.
சிறப்பு அணியின் இரண்டாவது அணி பயிற்சிகளை முடிக்க முன்பே சுதந்திராவை ‘வெற்றி உறுதி’ எதிர் நடவடிக்கைக் களம் அழைத்தது. அதுவரை நாளும் புளியங்குளம் பகுதியில் சிறப்பு அணியின் தாக்குதலணியை வழிநடத்திக் கொண்டிருந்த லெப்.கேணல் நந்தாவின் வெற்றிடத்தை நிரப்ப, சுதந்திரா புறப்பட்டார்.
நெருக்கடிகள் மிகுந்த வன்னிச் சமர்முனையில் நின்ற சிறப்பு அணியில் ஒரு அணியினருக்குப் புதியவகை வானூர்தி எதிர்ப்புப் பீரங்கியொன்றை இயக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. களமுனையில் நிற்கும் தனது அணியினரை மாறிமாறிப் பயிற்சிக்கு அனுப்பிவைப்பார். வேலை நெருக்கடியால் அவரால் தொடர்ச்சியாக அதில் ஈடுபட முடியவில்லை. காப்பரண்களிடையே காவல் உலா போகின்ற வேளைகளில்கூட வருபவரிடம் படித்த விடயங்களைக் கேட்டறிந்தார். நிலத்தில் படங்களைக் கீறிக் காட்டி, அவர்களிடம் சரிபார்த்துக் கொண்டார். வாய்ப்புக் கிடைத்த வேளைகளில் நேரடியாக போகத் தவறவில்லை, பயிற்சி நிறைவில் நடந்த சூட்டுப் போட்டியில் அதிக புள்ளிகளைப் பெற்று, எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கவும் தவறவில்லை அவர்.
அகல விரிந்த களமுனைகளெங்கும் சுதந்திராவின் கால்களும் நடந்தன. கரிப்பட்டமுறிப்பு, மூன்றுமுறிப்பு, ஒலுமடு, கிளிநொச்சி… இந்தக் காலப்பகுதியில் சிறப்பு அணி பங்கேற்ற ஊடுருவி உள்நுழையும் தாக்குதல்கள் சிலவற்றில் இவரும் இணைந்திருந்தார்.
1999ல் “ஓயாத அலைகள் - 03” சுழன்றடிக்கத் தொடங்கிய அன்று தன் அணியினரோடு ஒட்டுசுட்டான் பகுதியூடு உள்நுழைந்த சுதந்திரா, நெடுங்கேணி, மணலாறு வரையும் போனார். ஆண்டிறுதியில் இன்னுமொரு அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி அவரை உள்வாங்கிக்கொண்டது.
2000.04.01 அன்று இயக்கச்சி, முகாவில், பகுதியூடு நடந்த முன்னேற்ற நடவடிக்கையில் ஏனைய அதிகாரிகளோடு அவரும்; பங்கேற்றார். தொடர்ந்தும் நீண்டுவிரிந்த களம் இவரைத் தன்னோடு அழைத்துக் கொண்டது.
அமைப்பு எந்த வேளையில் எமக்கு எந்தப் பணியைத் தந்தாலும் ஏற்று செய்யத் தயாராக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். 'என்னை உடை தோய்க்குமாறு அமைப்பு வேலை தந்தால், உடைகளை எப்படி மிகச் சுத்தமாகத் தோய்க்கலாம் என்று பார்ப்பேனே தவிர, இந்த வேலையை நான் செய்வதா என்று கவலைப்பட மாட்டேன்” என்ற கேணல் கிட்டு அவர்களின் எடுகோளைக் குறிப்பிடுவார். சொன்னது போலவே செய்தும் காட்டினார்.
தம்மால் வளர்த்தெடுக்கப்பட்ட போராளியொருவர் தனக்கு மேலான பொறுப்பாளராக வந்தபோதும் அதை இயல்பாக ஏற்றுக்கொண்டு, அவரின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டார்.
‘கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே – சங்கு சுட்டாலும் வெண்மை தரும்’ ஓளவை சொல்லக் கேட்டதை, சுதந்திராவிடம் நேரே பார்த்தோம். அதனால்தான் சுதந்திராவின் இழப்புக்கு எல்லோருமே வருந்தினோம்.
ஒருவரின் இயல்பை அறிந்து பழகுவது, பழக்குவது அவரின் இயல்பு. சிறப்பு அணியினருக்கு காவலரண் வாழ்வு புதிது. அவர்கள் வெட்டிய காப்பரண்கள் இருந்த விதத்தைப் பார்த்த சுதந்திரா, மேலதிக ரவைக்கூட்டு அணியை அணிந்த நிலையில் அவர்களை அதற்குள் இறக்கி ஏற்றி, என்ன பிழை என்று அவர்களிடமே கேட்டு, திருத்துவித்து, காவலரண் வாழ்வுக்குப் பழக்கினார்.
எப்போதும் எடுகோளாக இருப்பது அதுவும் அவரின் இயல்பு, புதிதாக வானூர்தி எதிர்ப்புப் பீரங்கி ஒன்று வந்தபோது, பொதி உடைக்கப்படாமல் இவர்களின் கையில் அது கொடுக்கப்பட்டது. குழல்வாய் மூடி மிக இறுக்கமாக இருந்ததால், எல்லோரும் கைவிட்டுவிட, நாற்பத்தைந்து நிமிடங்களுக்கும் மேலாக தொடர்ந்து முயன்று மூடியை கழற்றினார்.
தரப்படும் பணிக்கு மறுப்புச் சொல்வது அவரின் வரலாற்றிலேயே கிடையாது. அது இல்லை, இது இல்லை என்று தாமதிக்காமல், எது இருக்கின்றதோ அதைவைத்து வேலையைத் தொடங்கிவிடுவார்.
“ஓயாத அலைகள் - 04”ல் பங்கேற்ற அவர், ‘கட்டம் - 02’ மிகச் சிரமமான பாதைகளோடே நகர்ந்த போதும் நம்பிக்கையோடு அணிகளை வழிநடத்தினார்.
தன்னுடைய கடைசி நாட்களை மேஜர் சோதியா படையணியுடன் முகமாலைப் பகுதியில் கழித்தார் அவர். ஓரு பெரும் பலம் தமக்குக் கிடைத்ததற்காக அவர்கள் பெருமையுற முன்னரே, “தீச்சுவாலை – 01” எதிர் நடவடிக்கை அவரை அவர்களிடமிருந்து பறித்தது.
ஆனையிறவிலிருந்து பகைவரை நாம் துரத்தியபோது எங்களோடிருந்த சுதந்திரா, ஆனையிறவை மீண்டும் பிடிக்க முனைந்த படையினரைத் துரத்தியபோது பகைவர்களின் வரவுக்கு மட்டுமன்றி, தன் வரலாற்றுக்கும் முற்றுப் புள்ளியை வைத்துவிட்டார்.
ஆக்கம்: மலைமகள்
மூலம்: விடுதலைப்புலிகள்