ஞானாந்தன் மேரிசாந்தினி
கனகபுரம், கிளிநொச்சி
எப்போதும் எதிரிக்குப் பேரிடியாக...
“இந்தக் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கின்றதோ அன்றுதான் எமக்கு விடிவு பிறக்கும்” லெப். கேணல் திலீபனின் உரையைச் சுமந்த காற்று கோட்டையிலே கம்பீரமாக பறந்து கொண்டிருந்த புலிக்கொடியைத் தழுவி வீசியது. மகிழ்ச்சி, பெருமிதம், இன்னும் இனம் புரியாத உணர்வுகள் எல்லாம் கலந்த ஒரு உணர்வில் தமிழர்கள் ஊறிப்போயினர்.
‘ஜீவன்’ கானகப் பாசறை வெற்றியைக் கொண்டாடியது. லெப்.கேணல் மாதவி (பின்நாட்களில் கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி) யிடம் படையியற் பயிற்சியைப் பெற்றுக் கொண்டிருந்த மகளிர் படையணியின் அந்த அணிக்கு, தாம் பயிற்சி முடித்துப் போய் அடித்துத்தான் கோட்டையைப் பிடிப்போம் என்று சொல்லிச் சொல்லி பயிற்சி எடுத்த அந்த அணிக்கு வெற்றிக் களிப்பையும் மீறி கவலை வந்தது.
“எப்போது எங்களுக்குச் சண்டை?” எல்லோர் மனதிலும் இதே கேள்விதான். “நீங்கள் வரப்போறீங்கள் எண்ட பயத்திலேயே அவன் ஓடி விட்டான்.” பயிற்சியாசிரியர்கள் கேலி செய்தனர். “நாங்கள் போக முதலே இப்பிடியெண்டால், போயிருந்தால் என்ன நடந்திருக்கும்” என்று வீரம் பேசிச் சமாளித்துக் கொண்டனர் லெப்.கேணல் நிர்மா முதலான பயிற்சியாளர்கள் சண்டை ஒன்று வராமலா போகும் என்று தம்மை ஆறுதற்படுத்திக் கொண்டனர்.
அது இரண்டாம் ஈழப்போர்க் காலம். களங்கள் விரித்திருந்தன.
பலாலிப் படைத்தளம் போராளிகளால் காவலிடப்பட்டது. கட்டுவன், வீமன்காமம் போன்ற பகுதிகளில் நிர்மாவும் நின்றார். இயல்பிலேயே ஆளுமையைக் கொண்டிருந்த நிர்மா தொடக்கத்திலேயே சிறு அணியொன்றின் இரண்டாவது பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரிதும் பேசப்பட்ட எமது முதலாவது மரபு வழிமுறைப் போரான ஆனையிறவுத் தளம்மீதான ஆகாய கடல் வெளிச் சமருக்கும் அணியொன்றின் இரண்டாவது பொறுப்பாளராகவே போயிருந்தார்.
ஆனையிறவு எமது கையிலவிழாமல் தடுக்குமுகமாக வெற்றிலைக் கேணியில் தரையிறங்கி, ஆனையிறவு நோக்கி நகர்ந்த படையினரை வழிமறித்து வழிமறித்து நடந்த சண்டைகளின்போது புல்லாவெளியில் காயமடைந்தார்.
காயம் ஆறியதும் கண்ணி வெடிகள் தொடர்பான சிறப்புப் பயிற்சியில் கண்ணிவெடி அணியாகப் பயிற்சி முடித்து தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் வழங்கப்பட்ட சின்னங்களுடன் பணி செய்வதற்காய் வெளியேறினார்.
அதன் பின் தொடர்ந்த “கஜபார” எதிர் நடவடிக்கை (1992), “பலவேகய - 0”2 எதிர் நடவடிக்கை (1992) என்றவாறாக அவரின் களங்கள் தொடர்ந்தன.
1992ல் தொண்டமானாற்றிலிருந்து ஒட்டகப்புலம் வரையான 150 காவலரண்கள் தகர்ப்பு நடவடிக்கைக்கு முன்னரான ஒழுங்கமைப்புக்களின்போது பகல் நேர கண்காணிப்பிற்கென ஒரு பகுதி நிர்மாவிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இரவு நேரங்களில் எமது வேவு அணிகளுடன் முன்னகர்ந்து, தாக்குதல் அணிகள் உள்நுழையவுள்ள பாதைகளில் கிடக்கும் எதிரிகளின் கண்ணிகளை அகற்றுதல், பகலில் தொடர்ச்சியாக மழையில் நனைந்து வெயிலில் காய்ந்தவாறு கண்காணித்தல், மறுபடி இரவு கண்ணிவெடி அகற்றல் என்று கடைசி ஐந்தாறு நாட்களிலும் ஓய்வேயில்லாத கடும் பணி.
இடையில் நிர்மாவின் அணியை வந்து பார்த்த நிர்மாவின் பொறுப்பாளர், எல்லோரையுமே பின்னணிக்குப் போய்க் குளித்துவிட்டு வருமாறு பணித்தார். பகல் நேரக் கண்காணிப்புத்தானே என்று முழுப் பேருமே போகாமல் தன்னோடு ஒருவரை நிறுத்திக்கொண்டு ஏனையவர்களைக் குளிக்க அனுப்பினார் நிர்மா. சண்டை தொடங்க இன்னும் ஓரிரண்டு நாட்களே இருக்கும் போது தமது கவனக்குறைவால் ஏற்படப்போகும் சிறு தவறுகூட நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் அவர் மிகக் கவனமாகவே இருந்தார். நிலைமை சிக்கலில்லை என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு நிர்மாவுடையது. பலாலி விமானத் தளப் பகுதியினுள் பகலில் நடமாட்டம் கூடுதலாக இருப்பதால், சாப்பிடுவதற்குக்கூட மரத்தை விட்டு இறங்காமல் தொலைநோக்குக் கருவியால் கண்காணித்தவாறே இருந்தார்.
சண்டை தொடங்கும்போது நிர்மாவுக்கு பின்னணியில் நின்று காயக்காரர்களை வெளியேற்றும் பணி கொடுக்கப்பட்டிருந்தது. நேரடியாகச் சண்டையில் தன் பங்கு இல்லை என்பது நிர்மாவால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. இருளில் நகர்ந்து கொண்டிருந்த அணிகளுடன் சேர்ந்து நகரத் தொடங்கிய நிர்மாவை அவரின் பொறுப்பாளரின் கூர்மையான விழிகள் கண்டுகொண்டன. உடனடியாகவே ஆளைப் பின்னணிக்கு அனுப்பி விட்டார்.
சண்டை தொடங்கி முதற்தொகுதி காயக்காரர்களைப் பின்னணிக்கு நகர்த்திக் கொடுத்து விட்டு காவும்குழு மறுமுறை முன்னணிக்கு நகர்ந்தபோது நிர்மா அவர்களோடு இணைந்து கொண்டார்.
1993ல் ஆனையிறவிலிருந்து ‘யாழ்தேவி’ நடவடிக்கையில் திருப்பி அனுப்பப்பட்ட வழியெங்கும் படையினர் விதைத்துச் சென்ற கண்ணிகளை அகற்றும் பணியில் நிர்மாவின் அணியும் ஈடுபட்டது.
கண்ணிகளை அகற்றும்போது, வெடிக்காமல் விழுந்து கிடந்த எறிகணைகளையும் அகற்றினர். எறிகணைகளைக் கையாளுவது வேறு தனியான அணியினரின் வேலையாக இருந்தபோதும், அது மக்கள் வாழ்ந்த பகுதி என்பதால் திடீரென வருகின்ற மக்களுக்கு ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்க்க முயன்றார் நிர்மா. தன் அணியினரைக்கூட அனுமதிக்காது தானே எறிகணைகளை அகற்றினார்.
வேலைகளைப் பார்வையிட வந்த பொறுப்பாளர் நிர்மாவை மிகவும் கண்டித்து, “வெடிக்காமல் கிடக்கும் எறிகணைகளை எடுக்க உங்களுக்கு அனுமதியே இல்லை” என்று கடுமையாகச் சொல்லும் வரை நிர்மா எறிகணைகளையும் சேர்த்தே அகற்றினார். அதன் பின் எறிகணைகளருகே அடையாளத்துக்காகத் தடிகளைக் குத்தி விட்டு, எழுதுமட்டுவாளிலிருந்து கறுக்காய் வரையான பகுதிக்குள் கண்ணிவெடிகளை அகற்றினார்.
ஆனால் அந்த வேலை முடிந்ததும் தானாகவே பொறுப்பாளரிடம் கேட்டு, வெடிக்காத எறிகணைகளை அகற்றும் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார். இதுதான் நிர்மா. தனக்குத் தெரியாது என்று எதையுமே விட்டு வைக்க எப்போதுமே அவர் விரும்பியதில்லை.
இதன் பின் பூநகரிப் படைத்தளம் மீதான “தவளை” நடவடிக்கையில் பங்கு கொண்டு, அங்கும் கண்ணிவெடிகளை அகற்றும் பணி செய்தார்.
இவரது பணியைப் பல களங்கள் வேண்டி நின்றன. “சூரியக்கதிர் - 01” எதிர் நடவடிக்கைக் களமுனையில் கண்ணிகளை விதைக்கும் பணியை இவரின் அணி செய்தது. அது மிகவும் நெருக்கடி மிகுந்த களம். ஒவ்வொரு நாளும் களமுனை இடம் மாறிக்கொண்டேயிருக்கும். சண்டையின் நிலைமைக்கேற்ப, சண்டையணிகளின் நகர்வுக்கேற்ப நிலக்கண்ணிகளை விதைப்பதும், வரைபடத்தில் குறிப்பதும், அணிகள் இடம் மாறும்போது அகற்றுவதும், மறுபடி விதைப்பதுமாக மிகச் சிரமமான பணி அது. கண்ணிவெடி அணியினரின் கைகள் காய்த்து விட்டிருந்தன. இடர்கள் நிறைந்த “சூரியக்கதிர் - 01” களமுனையில் நிர்மா காயமடைந்தார்.
காயம் ஆறிய பின் புதிய அணி ஒன்றுக்கு கண்ணிவெடிகள் பற்றிய பயிற்சிகளை வழங்கும் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில், சூரியக் கதிர் - 02 களம் நிர்மாவை அழைத்தது. அங்குலம் அங்குலமாகத் தடவி ஆயிரம் ஆயிரம் கண்ணிகளை அகற்றி, பயமின்றி மக்கள் நடமாட வழிவகுத்த பெரும் பணியில் நிர்மாவின் பங்கு முக்கியமானது.
வெற்றி நிச்சயம் எதிர் நடவடிக்கைச் சமர்முனையில் கண்ணி வெடிப்பிரிவின் பகுதிப் பொறுப்பாளராகப் பணியாற்றிய கடினமான அந்த நாட்கள்...
“ஓயாத அலைகள் - 02” கிளிநொச்சி மீட்பு நடவடிக்கையில் ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியின் கண்ணிவெடிப் பொறுப்பாளராகக் கடமையாற்றினார். எறிகணை வீச்சிலே தலையில் காயமடைந்தார். தொடர்ந்தும் எறிகணை வீச்சிலேயே நிர்மா காயமடைவதைத் தோழிகள் கேலி செய்தார்கள்.
“எறிகணைக்கு என்மேல் அத்தனை அக்கறை. அதுதான் தேடிவருகிறது.” என்று சிரித்தார் நிர்மா.
விடுதலைப் புலிகள் மகளிர் படையணியோடு இருந்த கண்ணிவெடி அணி, பின் மாலதி படையணியின் கண்ணிவெடிப் பிரிவாகி, பின் 1999.04.28ல் லெப். கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி மகளிர் அணியாகப் புதுத்தோற்றம் பெற்ற போது நிர்மா அந்த அணியின் 2வது பொறுப்பாளராக எமது தேசியத் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
லெப். கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி அணியை விரிவாக்கம் செய்யவென வந்திருந்த புதிய போராளிகளின் தொடக்க படையியற் பயிற்சியையும், மேலதிக சிறப்புப் பயிற்சியையும் நேரடிப் பொறுப்பெடுத்துச் செய்தார். இன்று களமெங்கும் பரந்து நிற்கும் கண்ணிவெடி மகளிர் அணியின் அடித்தளம் சின்னச்சின்ன விடயங்களில் கூட கவனமெடுத்து நிர்மா போட்ட அடித்தளம்.
பயிற்சி முடித்த புதிய அணி பணி செய்யப் புறப்பட்ட போது நிர்மா கண்ணிவெடி மகளிர் அணியின் நிர்வாகப் பொறுப்பாளராகப் பணிபுரிந்தார்.
அலை மூன்றில் நாம் ஏறி, வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சிக்குள் படை நகர்த்தி எம் பலத்தை பகைவருக்கு உணர்த்திக் கொண்டிருந்த நாட்கள் அவை. களங்கள் அகல விரிந்திருந்தன. பளைப் பகுதியில் கண்ணிவெடி சார்ந்த வேலை களுக்குப் பொறுப்பாக நிர்மா நின்றார். ஓயாத அலைகள்- 01, 02, 03, 04 எல்லாவற்றிலுமே நிர்மாவின் பங்கு கணிச மாக இருந்தது.
நாங்கள் அமைதியாக இருந்தோம். பகைவரோ பரபரப்பாக இருந்தனர். ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை நான்கு மாதங்கள் வரை பொறுமையாக நீடித்தோம். பகைவரோ போர் நிறுத்த மீறல்களிலேயே காலத்தை நீடித்தனர். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த அந்த நாளில், பகைவரின் பெரும் எடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையைத் தடுப்பதற்குத் தயாராக நாம் நின்றோம்.
அந்நிய நாட்டு நிபுணர்களின் ஆலோசனையோடும், அவர்கள் வழங்கிய ஆயுத, உபகரண உதவிகளோடும் சிறிலங்காப் படைத்தரப்பினர் ஆனையிறவில் சிங்கக் கொடி பறக்கவிடும் கனவோடு செய்த தீச்சுவாலை- 01 படை நடவடிக்கையை எமது பெரும் பலத்தால் மூன்றே நாளில் அணைத்தோம்.
படையினர் பலர் எறிகணைகளாலும் கண்ணிவெடிகளாலும் பெருமளவில் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்ததாகவும் படை அதிகாரிகள் தெரிவிக்கும் அளவுக்கு, களத்திலே நிர்மாவின் பங்கு பாரியது. இப்படி இப்படியெல்லாம் கண்ணிகளை விதைக்குமாறு எமது தலைவர் அவர்கள் தயாரித்த திட்டத்தை, தனது அணியினரை வைத்துச் செவ்வனே செய்து முடித்த நிர்மா, “எறிகணைகளாலேயே எப்போதும் காயமடைகின்ற நிர்மா, “எறிகணைக்கு என்மேல் அவ்வளவு அக்கறை . அதுதான் தேடி வருகிறது” என்று சிரிக்கின்ற நிர்மாவைத்தேடி அந்த எறிகணை, கடைசி எறிகணை வந்தது.
“தீச்சுவாலை- 01” எதிர் நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்து, அணிகள் மீளமைக்கப்பட்டு, எரிந்த வேலிகளும் சிதைந்த காப்பரண்களும் போராளிகளால் திருத்தப்பட்டுக் கொண்டிருந்த அந்த வேளையில் இந்தச் செய்தி வந்தது.
நிர்மா எங்களோடில்லை.
கிளிநொச்சி சென்திரேசா மகளிர் கல்லூரி தனது பழைய மாணவியை, ஒரு கூடைப் பந்தாட்ட வீராங்கனையை இழந்தது. இழப்புக்கள் எப்போதுமே துயரத்தைத் தருபவை. ஆனால் உலகத்தில் எந்த ஒரு நாடும் இரத்தம் சிந்தாமலும், ஈகங்கள் புரியாமலும் விடுதலை பெற்றதில்லை.
எமது தலைவர் அவர்கள் சொல்வது போல் மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை - அவர்களது அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள்- இவை எல்லாவற்றினதும் ஒட்டு மொத்த வெளிப்பாடாகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது.
ஆக்கம்: செந்தூரநிலா
மூலம்: - சுதந்திரப்பறவைகள் (ஐப்பசி - கார்த்திகை 2002)