அடிக்கற்கள்

தொடக்க காலத்தில் விடுதலை அமைப்பிற்கு வலுச்சேர்த்து விழிமூடியோரின் வரலாறுகள்

லெப்டினன்ட் சங்கர்

லெப்டினன்ட் சங்கர்

செல்வச்சந்திரன் சத்தியநாதன்
கம்பர்மலை - யாழ்ப்பாணம்

 சங்கர், சுரேஸ்,

ஆயுதப் படைகள் வலை விரித்துத்தேடும் செ.சத்தியநாதன் இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கெரில்லாவீரன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன். கண் திறக்காத பூனைக்குட்டியாக நெஞ்சில் கனலும் புரட்சிகர உணர்வோடு சின்ன வயதிலேயே இயக்கத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கக் காத்திருந்த வீர மறவன்.

அரசபடையின் தீடீர் முற்றுகையிலிருந்து தப்பிச் செல்லுகையில் சுற்றி நின்று கொமாண்டோக்கள சரமாரியாக வெடிகளைத் தீர்த்தபோது காயமுற்று,எங்கள் இயக்கத்தின் முதலாவது களப்பலியாகும் பெருமையை அணைத்துக்கொள்கிறான்.

ஒரு பகுதிக்குப் பொறுப்பாக இருந்து நடாத்திய தாக்குதலால், அப்பகுதி அரசு படைகளை ஸ்தம்பிக்கச் செய்தது.

பொன்னாலைக் குண்டு வெடிப்பு நடவடிக்கையிலும் சங்கர் கடுமையாக உழைத்தவன்.

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் தம்பாப்பிள்ளை மீதான இயக்க நடவடிக்கைக்குச் சங்கரே பொறுப்பு வகிக்கிறான்.

எந்தவிதமான வாகனத்தையும் நேர்த்தியாகச் செலுத்தும் ஆற்றலும் சங்கரின் பல்முனைப்பட்ட ஆற்றலுக்குச் சான்றாகும். ஓரு கெரில்லா தாக்குதலையடுத்து ஏற்படுகிற பரபரப்பு,எதிரிப் படைகள் ஸ்தலத்திற்கு வருமுன்னர் வெளியேறவேண்டிய பதைப்பு என்பவற்றிற்கும் மத்தியில்,மிகுந்த வேகத்துடனும் அதிக நிதானத்துடனும் வாகனத்தைச் செலுத்துவதில் சங்கர் வல்லவன்.

சக போராளிகளுக்கு ஆயுதங்களைப் பயிற்றுவிக்கும்போது மிகுந்த கவனம் செலுத்துவான்,தெளிவாக விளக்குவான். தனக்குத் தெரியாத விபரங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டவன்.அன்போடும் பணிவோடும் பழகுவதால் சக போராளிகள் மத்தியில் தனி மதிப்பு வகித்து வந்தான்.

தமிழீழ விடுதலையைத் தமிழீழ வி;டுதலைப் புலிகளின் அரசியல் இராணுவத் தலைமையிலேயே வென்றெடுக்க முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த சங்கர், இயக்கத்தில் தன்னையே கரைத்துக் கொண்டவன். விடுதலைப்போராட்டமே சங்கரின் முழுமூச்சாக இருந்தது.விடுதலைப் போராட்டத்திற்கென்றே ஆயுதமேந்திக் களத்திலே குதித்தவன் இந்த வீரன் சமூக விரோத நடவடிக்கைகளையும் சந்தர்ப்பவாதிகளையும் அவன் அறவே வெறுத்தான்.அவன் மனசு மிகவும் சுத்தமானது. இத்தகைய இதயசுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நிற்கிறார்கள்.

தலைவர் பிரபாகரனின் அரசியல் வழிகாட்டலிலும், இராணுவக்கட்டுக்கோப்பிலும் சங்கர் ஊறி வளர்ந்தவன். பிரபாகரனின் அரசியல் தூய்மையில் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான், மலரப்போகும் தமிழீழம் தன்னலமற்ற - தூய்மைமிக்க விடுதலைப் போராளிகளால்தான் தலைமையேற்று நடத்தப்படவேண்டும் என்று, அவன் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறான். பதவிப் பித்தர்களும் துரோகிகளும் எங்கள்  புனித இயக்கத்தின்மீது களங்கம் கற்பிக்க முனைந்த போதெல்லாம், அமைதியான இந்தப்போர் மறவன் சினங்கொண்டு எழுந்திருக்கிறான்.

சாகும் தறுவாயிற்கூட அவன் தன் உற்றார்,பெற்றாரை நினைக்கவில்லை. 'தம்பி தம்பி ' என்றுதான் அந்த வீரனின் உதடுகள் வார்த்தைகளை உதிர்த்தன. தம்பியும், மற்ற இயக்கப் போராளிகளும் கண்கலங்கி நிற்க அந்த வீரமகன் சாவிலே வீழ்ந்து போனான்.

'ஒரு உண்மை மனிதனின் கதை' என்ற ரஷ்ய நாவலைக் கடைசியாக வாசித்துக் கொண்டிருந்த சங்கர். அந்த நாவலை முழுதும் வாசித்து முடிக்கவில்லை. சங்கர் என்ற உண்மை மனிதனின் கதை. ஒரு வீரகாயவியம்தான்.

Image
  • www.veeravengaikal.com
  • info@veeravengaikal.com

மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும்.

பின்தொடர்க..