• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
மேஜர் சந்தனா

மேஜர் சந்தனா


அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது, தனது நீண்டநாள் கனவு, இலட்சியம் இம்முறை எந்தத் தடையும் இன்றி வெற்றியடையும் என்று. அந்த நம்பிக்கையின் நிறைவோடு தன்னைப் பெற்றவளை, தன் உறவுகளை இறுதியாக ஒரு தடவை பார்த்துவிட்டு வருவதற்காய் வீடு செல்கிறாள்.

"அடிக்கடி வீட்டை வா மோனை" என்று கூறிய தன் தாயிடம் சொல்கிறாள் "கிட்டடியில வந்திடுவன் அம்மா" அவள் கூறியதன் பொருள் புரியாது கண்ணீரோடு கட்டியணைத்து முத்தமிட்டு விடைகொடுக்கின்றாள் அந்தத் தாய். இன்னும் சில நாட்களில் நிழற்படமாகத்தான் தன் மகள் தன்னிடம் வரப்போகிறாள் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை அத்தாயுள்ளம்.

ஒல்லியான தோற்றம், எப்போதும் முகத்தில் இனிய புன்னகை இவள்தான் மேஜர் சந்தனா.

தனது இனத்தின் விடுதலைக்காக போராடப் புறப்பட்ட ஆயிரம் ஆயிரம் வீரவேங்கைளில் இவளும் ஒருத்தி. மகளிர் படையணியில் இருந்து 1995ஆம் ஆண்டு தலைவரின் அனுமதியுடன், கரும்புலிக் கனவுகளுடன் தன்னை கடற்புலிகளின் அணியில் இணைத்துக்கொண்டாள். கரும்புலி அணிகளுக்கான சிறப்புப் பயிற்சிகளை முடித்துக் கொண்டு எதிரியின் இலக்குகளைத் தேடத் தொடங்கினாள்.

அவள் வெடி மருந்து நிரம்பிய படகுடன் கடலில் இறங்கும் போதெல்லாம் எதிரி தப்பிப் பிழைத்துச் சென்றுகொண்டிருந்தான். சந்தனா கூட அடிக்கடி கூறுவாள் "என்ர படகு கடலுக்க நிக்குதெண்டு நேவிக்காரனுக்குக்கூடத் தெரியும் அதுதான் உயரவாப் போறான்" என்று.

தன் நகைச்சுவைப் பேச்சால் அனைவரது உள்ளங்களிலும் குடிகொண்டிருந்த சந்தனா, தன் இறுதிவேளையிலும் வரைகூட எந்தவித மாற்றங்களுமின்றி அதே சிரிப்பு, அதே நகைச்சுவைப் பேச்சு என கலகலப்பாகவே இருந்தாள்.

அவளது இறுதித் தாக்குதலுக்காக படகை கடலில் இறக்கும் போது தன் சக போராளியிடம் தனது புதிய காலணியை கழற்றிக் கொடுத்து விட்டு "நான் திரும்பி வரமாட்டன்" இதை நீ வைச்சிரு என்று கூறிவிட்டு மறுநிமிடமே தனது குறும்புத் தனத்துடன் சொன்னாள் "திரும்பி வந்தா குறைநினைக்காமல் கழட்டித் தா" என்று. அந்த இறுதிக் கணப்பொழுதிற்கூட மற்றவர்களைச் சிரிக்க வைத்து மகிழ்ந்தாள் சந்தனா.

யாழ் குடாவில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படைகளுக்குரிய ஆயுதங்கள், வெடிபொருட்கள், உணவுப் பொருட்கள் என்பவற்றை ஏற்றிக்கொண்டு 26- 06- 2000 அன்று கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி வந்துகொண்டிருந்தது 'உகண' கப்பல். கடற்படையின் இரு பீரங்கிப் படகுகள் மற்றும் 6 டோராப் படகுகளின் பாதுகாப்புடன் வந்தது 'உகண' கப்பல்.

கடற்புலிகளது சண்டைப்படகுகளும், கரும்புலிப்படகுகளும் கடலில் களமிறங்கின.

பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து 55 கடல்மைல் தொலைவில் வைத்து கடற்புலிகளால் வழிமறிக்கப்பட கடும் சமர் வெடித்தது. சமர் நடுவே லாவகமாக உள் நுழைந்த கரும்புலிப் படகுகள் உகண கப்பலுடன் மோதி வெடிக்க, உகண முற்றாக எரிந்து கடலில் மூழ்கியது. 10 கடற்படையினர் பலியாகினர். எட்டு மணிநேரம் இடம்பெற்ற கடும் கடற்சமரில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகொன்றும் கடுமமையான தேசதத்திற்குள்ளாகியது.

மேஜர் சந்தனாவுடன், கடற்கரும்புலிகளான லெப். கேணல் ஞானேந்திரன். மேஜர் ஆரன், மேஜர் நல்லப்பன், கப்டன் இளமதி, கப்டன் பாமினி ஆகிய 5 காவிய நாயகர்களும் கடற்தாயின் மடியினில் விழிமூடினர்.



Image
© 2011 - 2024 Veeravengaikal.Com. All Rights Reserved.