• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
லெப். கேணல் கில்மன்

லெப். கேணல் கில்மன்


இது வீரியமுள்ள வித்து

தாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டியதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர் கொண்டனர்.

ஒவ்வொரு கணமும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்த சிரமங்கள் ஏராளம். அவர்கள் சந்தித்த எந்தத் துயர்மலையாலும் துளிகூட அவர்களை நிலைகுலையச் செய்யமுடியவில்லை. ஒவ்வொரு வீரனின் உள்ளமும் உறுதியால் இழைக்கப்பட்டு தேசப்பற்றினால் உரம் பெற்றிருந்தது. எவ்வளவு கடினத்திற்குள்ளும் விடுதலைக்காக உழைக்கும் அவர்களின் உழைப்பு வீச்சுள்ளதாய் இருந்தது. அத்தனை வீரத்தையும் விடுதலைப் பற்றையும் தலைமுறைப் பற்றையும் ஊட்டியிருந்தான் அவன்.

காட்டு மரங்களும் மேட்டு நிலங்களும் ஆறுகளும் சதுப்புவெளிகளும் முகம் மறக்காமல் அறிந்து வைத்திருப்பது அவனைத்தானே. எதிரியும் கூட அவன் பெயரை நன்கு அறிந்து வைத்திருப்பான். எதிரிக்குப் பலதடவை இழப்புகளை ஏற்படுத்தியவனை, முகாமுக்குள் முடக்கிவைத் திருந்தவனை எதிரி தன் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் தடுத்து ஏமாற்றத்தைக் கொடுத்தவனை எப்படி எதிரி அறியாதிருக்கமுடியும்.

ஒவ்வொரு உள்ளமும் உதடும் சேர்ந்து உச்சரிக்கும் பெயர்தான் கில்மன்...

கில்மன்... எப்படியிருப்பான்? !

கில்மன் என்ற பெயர் கொண்ட விடுதலை நெருப்பின் தோற்றம் இப்படித்தானிருக்கும். சரித்து வாரப்பட்ட தலைமுடி. செந்தளிப்போடு அனைவரையும் வசீகரிக்கும் பரந்த முகம் கருணையையும் கண்டிப்பையும் உணர்த்தும் பார்வை. சராசரியான உயரம். கம்பீரத்தோடு கூடிய நிமிர்வான தோற்றம். எப்போதும் அமைதியான சிந்தனை.

இதுதான் அவனின் வெளித்தோற்றம், அவனுக்குட் கிளர்ந்தெழும் உணர்வுகளை எழுத்தில் வடிக்க முடியாது.

அந்த உயர்ந்த காட்டிற்குப் போராளிகள் ஒவ்வொருவருக்கும் அருகிலிருந்தபடி அவர்களை வீரராகவும் சகிப்புணர்வுள்ள விடுதலைப் போராளிகளாகவும் வளர்த்துக் கொண்டிருந்தான் கில்மன்.
போராளி ஒருவரே ஓய்வுறக்கம் இல்லாது செயற்பட வேண்டிய அந்த நாட்களில் அந்த அணியின் ஒட்டு மொத்தத் தேவைகளையும் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளையும் நிறைவேற்ற வேண்டிய பணிகளையும் சிந்தித்துச் செயற்பட வேண்டிய தளபதியின் உழைப்பு எத்தனை கனதியானதாக இருக்கும் கடினம் நிறைந்ததாக இருக்கும்!

திருமலைக் காட்டிற்குள் வரலாற்றைக் காப்பாற்ற வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் வீரர்களை வழிநடத்தும் தளபதியாக இருந்தான்.

அந்த அணி அங்கு நகர நினைத்ததே தன்மேலுள்ள பெரிய வரலாற்றுப் பணியொன்றை நிறைவேற்றத்தான்.

எங்கள் வரலாற்றுப் புகழ்மிக்க தலைநகர் திருமலை சிங்களக் குடியேற்றக் கறையான்களால் அரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நகரங்களிற் படிப்படியாகச் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருக்கும் அரச படைகளிடம் திருமலைக் காட்டுப் பகுதியும் ஏறத்தாழப் பறிபோன நிலையிலிருந்தது. காடுகளை இழக்க நேர்ந்தால் அந்த மாவட்டத்தில் பின்பு சிறு தாக்குதல் செய்யவே சிரமமாயிருக்கும். கால் வைக்கவே அதிகமான உயிர்விலை கொடுக்க வேண்டியிருக்கும். தலைநகருக்கான தாக்குதல் தளத்தை இழந்து போய்விடுவோம். தொடர்ச்சியான எமது பாரம்பரிய நிலம் துண்டாடப்படுகின்றது. எனவே, காட்டையும் காட்டின் கரையோரங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும் என்ற தேவை ஏற்பட்டது.

அந்தப் பணியினை நிறைவேற்றவெனத் தெரிவுசெய்யப்பட்ட படையணி சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி. சீலன் பிறந்த மண்ணில் அவனது பெயர் தாங்கிய படையணி தாக்குதல் நடவடிக்கைக்காகப் புறப்பட்டது. அங்கே எதிர்கொள்ளப்போகும் நெருக்கடிகள் ஏற்கனவே கணிக்கப்பட்டன.

நிலையான பாதுகாப்புள்ள முகாமோ நிலமோ கட்டுப்பாட்டில் இல்லை. உணவு முதற் கொண்டு மருத்துவம் ஈறாக எந்த வழங்கல்களிலும் நம்பிக்கையில்லை. தங்கிடங்கள் இல்லாமையினால் மழையும் வெயிலும் அச்சுறுத்தும். அதிகமானவர்களுக்குப் பழக்கப்படாத புதிய சூழல். இப்படி, தொடராக இருக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு தேடினால் அது கில்மனிடம்தான் கிடைக்கும் என்றே தலைவர் உணர்ந்திருக்கவேண்டும்.

கில்மன்தான் அந்த அணிகளை வழிநடத்துவதற்கு ஏற்றவனாய் இருந்தான். இவர்கள் செல்லப்போகும் களச்சூழலில் அணிகளைத் தொடர்ச்சியாகப் பயிற்சியில் ஈடுபடுத்தவும் பொருத்தமான புதிய திட்டங்களைக் கையாளவும் தொடர் வேவிலும் சுற்றுக்காவலிலும் ஈடுபட்டுத் தகவல்களைப் பெறக்கூடிய அணியைச் சிறப்பான முறையில் வழிநடத்தவும் எதிர்கொள்ளப்போகும் சிக்கல்கள் அனைத்தினையும் சுமந்தபடி போராளிகளின் உணர்வுகளைக் கட்டிக்காத்து நிர்வகிக்கவும் சிறந்த ஆளுமை உள்ள ஒருவர் தேவைப்பட்டார். கில்மன் தான் பொருத்தமானவன் எனத் தலைவர் முடிவு செய்தார். அத்தனை வினாக்களுக்கும் விடை காணக்கூடிய ஆளுமை பொருந்திய தளபதியாக அவனே அவரது எண்ணத்தில்
இடம்பிடித்தான்.

சாள்ஸ் அன்ரனிப் படையணி தோற்றம் பெற்றபோது இவன் பயிற்சி ஆசிரியனாகக் கடமையாற்றினான். அனைத்து ஆயுதங்களின் தன்மைகளையும் பயிற்சி நுட்பங்களையும் நேரடியான பட்டறிவில் நன்கு அறிந்திருந்தான். வேவு அணிக்குப் பொறுப்பாக இருந்து பல இடங்களிலும் வேவுத் தகவல்கள் திரட்டிய பட்டறிவும் இருந்தது. மேலாளர்கள்(அதிகாரிகள்) பயிற்சிக் கல்லூரியில் அவன் படித்த நாட்களிற் கற்றுக்கொண்ட நிர்வாகம் தொடர்பான அறிவும் தந்திரம் தொடர்பான அறிவும் இருந்தன. தாக்குதல்களுக்குத் தலைமையேற்றிருந்த பட்டறிவும் சமர்களிற்கான வழங்கல் தேர்ச்சியும் அவற்றிற்கு மேலாகப் போராளி ஒவ்வொருவரின் மனத்தையும் கனிவுடன் அரவணைக்கும் தன்மையும் இருந்தன. இவையெல்லாம் அவனே அப்பணிக்கு ஏற்றவன் என்பதைக் காட்டின.

கில்மன் அனைத்துதுறை வல்லமையும் அனைவரையும் வழிநடத்தும் ஆளுமையும் கொண்டவனாக இருந்தான். நெருக்கடி நிறைந்த களச்சூழலுக்குள் தாக்குதல் இலக்கு ஒன்றைத் தெரிவு செய்வது, வேவு பார்த்துத் திட்டம் தீட்டுவது, அணிகளை ஒன்றாக்கிப் பயிற்சி கொடுப்பது, தாக்குதலுக்கு நகர்வது, விழுப்புண்பட்டவர்களையும் கைப்பற்றிய ஆயுதங்களையும் பாதுகாப்பாகக் கொண்டுவந்து சேர்ப்பது, மருத்துவ ஏற்பாடு செய்வது, களஞ்சியப்படுத்துவது இப்படிப் பலவற்றையும் ஒவ்வொரு தாக்குதலுக்கு முன்பும் பின்பும் கருத்திற் கொள்ளவேண்டும்.

எப்போதும் எதிரியின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய அச்சுறுத்தல்களுக்குள்ளே அதை முறியடித்துவிடும் விழிப்புணர்வுடனேயே அவர்களின் பணிகள் ஒவ்வொன்றும் நிறைவேறின. ஒரு களத்தில் நேரடியாக நின்று வழிநடத்துவதை விடவும் எப்போதும் ஆபத்து நிறைந்த எதிரியின் வல்வளைப்பு பகுதியின் போர்க்களச் சூழலிற்குள்ளேயே வாழ்ந்தபடி, ஒவ்வொரு இலக்காகத் தெரிவுசெய்து, அதை வேவுபார்த்து அதற்கான ஆயுத ஏற்பாடுகளை ஒழுங்கு செய்வதும் தாக்குவதும் சுலபமானதல்ல. அதைச் சவாலாக எடுத்தான் கில்மன். ஒவ்வொரு தாக்குதல் முயற்சியையும் நிறைவேற்றத் தொலைத்தொடர்புக் கருவியில் கதைத்தால் எதிரி எமது தங்குமிடத்தைக் கண்டுவிடுவான் என்பதால் நேரடியாகவே ஒவ்வோரிடமும் சென்று கவனிக்க வேண்டிய வேலைகளைக் கவனிப்பான்.

ஒவ்வோர் அணிகளுக்குமிடையே கிலோமீற்றர்க் கணக்கில் நீண்டு விரிந்திருக்கும் காட்டை ஊடறுத்து நுழைவதற்கு அவனது கால்களைத்தவிர வேறு எந்த ஊர்தியையும் பயன்படுத்த
வசதியில்லை . அவன் பயன்படுத்துவதும் இல்லை. அனைத்து இடங்களிற்கும் ஓயாது நடந்து செல்வான். வியர்வை சிந்தச் சிந்த, மூச்சு வாங்க வாங்க அவனது நடை தொடரும். அந்தக் காட்டுப் பகுதியில் அவன் சுவடு படாத இடம் இல்லையென்றே சொல்லலாம்.

படையணி திருமலைக்குச் சென்றபின் சண்டை தொடங்கும் வரை வேவுக்காகவும் இடங்களை அறியவும் நடந்து திரிவான் கில்மன். அவனது ஓயாத உழைப்பு ஒவ்வொரு போராளியிலும் வெளிப்பட்டது. சிறுசிறு தாக்குதல்களைச் செய்து எமது கால்களைத் திருமலைக் காட்டில் வலுவாகப் பதிக்கவே அணிகள் எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிகளும் பெருகின.

அந்த இறுக்கமான சூழலில் ஒவ்வொரு வேளை உணவுக்கும் காத்திருக்க வேண்டியதாகவும் உணவை எடுத்துச் சென்றே சண்டையிட வேண்டியதாகவும் இருந்தது. எனினும் கில்மனின் அன்பும்
அரவணைப்பும் போராளிகள் ஒவ்வொருவரையும் உறுதியான உளவுரனோடிருக்கச் செய்தன.
எப்போதும் எளிமையாய் உடையணிந்து கொண்டு எல்லோருடனும் அன்பாய்ப் பழகும் கில்மன் குறுகிய காலத்தில் அந்தப் பகுதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினான்.

ஆங்காங்கே எதிரிகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. திறமையோடு சண்டை செய்த வீரர்களை இதய நிறைவோடு பாராட்டி அடுத்த சண்டைக்கு அனைவரையும் தயார்ப்படுத்துவான்.

பெருஞ்சிரமத்தின் பின் கிடைக்கின்ற அளவுச் சாப்பாட்டிற்காகக் கில்மனும் மற்றவர்களோடு சமையற்கூடம் வந்து காத்திருப்பான். கையில் ஒரு கோப்பையோடு, ஒரு மரக்குற்றியில் அமர்ந்தபடி எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பான்.

மரக்குற்றியில் அமர்ந்திருக்கும் அவனது நெஞ்சின் ஒரு மூலையிற் பழைய நினைவுகளும் உட்கார்ந்திருக்கும். சில வேளைகளில் தள்ளாடும் முதியவரின் நடையைப்போல தளர்ந்த நடையில்
அவை உலாவத்தொடங்கும்.

அவன் இந்தப் போராட்டத்திற் பங்களிப்புச் செய்த தொடக்க நாட்களும் ஊருக்குள் அந்தக் கதை கசிந்தபோது அவன் எதிர்கொள்ள வேண்டியிருந்த அச்சறுத்தலும் எங்கோ தூரத்தில் ஒரு நாடகம் நடப்பதைப்போல அவனை உணரவைக்கும். உறவுகள் ஒவ்வொன்றின் குரலும் தொலைவில் இருந்து கேட்பது போலிருக்கும்.

சின்ன வயதிலேயே அவன் இயக்கத்தின் ஆதரவாளனாகத் தீவிரமாய் உழைத்தபோது இந்திய படை அவனைப் பின்தொடர தொடங்கியது. அவனும் அவனது குடும்பமும் எதிர்கொண்ட துன்பங்கள்... எண்ணிலடங்கா. அனைத்துத் துயரங்களுக்கும் தீர்வு காணவேண்டுமென்ற இலட்சியத்தோடு 13.07.90 இற் போராட்டத்தில் இணைந்தான். பயிற்சிப் பாசறையில் ஒவ்வொரு பயிற்சியிலும் அவன் காட்டிய ஆர்வமும் திறமையும் அவனது விடுதலைப்பற்றை வெளிக்காட்டின.

எதிர்காலத்தில் தளபதியாக வரப்போகும் அந்த விதை தொடக்கத்திலேயே வீரியமுள்ளதாகவே இருந்தது. அவனுக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களில் அவன் காட்டிய திறமையும், தொடர்ந்து வந்த களவாழ்வில் வெளிப்பட்ட அவனது தனித்தகைமையும், பயிற்சியாசிரியனாய், பின் வழங்கல் பொறுப்பாளனாய், வேவு அணிகளின் வழிநடத்துனனாய் அவன் வளர்ச்சியடைய வழிவகுத்தன. மேலாளர்கள் பயிற்சிக் கல்லூரிப் படிப்பு முடிந்து வந்ததும் அவன் ஏற்றுக் கொண்ட 'பலவேகய-2'
எதிர் நடவடிக்கைக்கான வழங்கல் நடவடிக்கை அவனை ஒரு தளபதி என்று கூறக் கூடியளவுக்கு அவனது ஆளுமையை வெளிப்படுத்தியது.

1992ஆம் ஆண்டு மாவீரர் நாளுக்கு முந்திய சமராக அமைந்த வளலாய்த் தொடர் காவலரண் மீதான தாக்குதல் நடவடிக்கையில் ஒருபகுதிக்கு அணிப் பொறுப்பாளராகக் கில்மன் நியமிக்கப்பட்டபோது, அந்தச் சமரின் முடிவில் அவனது போர்த்திறமையும், கட்டளை வழங்கும் ஆற்றலும் ஐயத்திற்கு இடமற்றவாறு உறுதிப்படுத்தப்பட்டன. மூத்த தளபதிகளாற் பேசப்படுபவனாகக் கில்மன் மாறினான். படிநிலை வளர்ச்சியின் உயர்வாய், தலைவரின் நம்பிக்கையின் வெளிப்பாடாகச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாகக் கில்மன் நியமிக்கப் பட்டான்.

தலைநகர்க்காடுகளில் அவன் கால்கள் நடந்தன.

ஓய்வறியாத அவன், வரைபடத்தை விரித்துப் பார்த்தபடியோ எழுதப்படிக்கத் தெரியாத போராளிகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தபடியோ இருப்பான். அங்கே எதிர்கொண்ட தாக்குதல்கள் ஒவ்வொன்றிற்கும் பின்னாற் கில்மனின் முகமே சிரிப்போடு தெரியும்.
எதிரியின் கட்டுப்பாட்டிலிருந்த காடு சிறிது சிறிதாக எமது கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது அதனால் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய சிக்கல்களை எதிரி உணர்ந்தான். திருமலை வந்திருக்கும் எமது தாக்குதல் அணிமீது தாக்குதல் தொடுப்பதற்காகக் காடுகளை நோக்கிப் பெருமெடுப்பிலான படை நடவடிக்கை ஒன்றிற்குத் திட்டமிட்டான். 31.05.1995 'ராமசக்தி-03' என்ற படை நடவடிக்கை எமது  கட்டுப்பாட்டிலிருந்த காடுகளை நோக்கி அலைபுரண்டு வந்தது. கில்மன் இதனை முன்னுணர்ந்து இருந்தானோ என்னவோ உடனே செயலில் இறங்கினான். தனது அணிகளை எதிர்ச்சமரிற்குத் தயாராக்கினான். செயன்முறைத் தாக்குதல் திட்டத்தை வகுத்து அதனை விளங்கவைத்தான். முன்னேறி வந்த எதிரிக்கு மூக்குடைத்து அனுப்பும் மூர்க்கத்தோடு அணிகளை வழிநடத்தினான் கில்மன்.

அலைபுரண்டதுபோல் காடுகளில் முன்னேறிய எதிரிப்படை துவண்டுபோய்ப் பின்வாங்கியது. தனது கேணல் நிலைத் தளபதி உட்படப் படையினர் பலரை இழந்ததுடன் உடல்களையும் ஆயுதங்களையும் கைவிட்டு அவமானத்தைக் கையிலேந்தியவாறு ஓடித்தப்பியது சிங்களப்படை.

அரசதரப்புத் தம்மிற் 17 பேர் கொல்லப்பட்டு 35 பேர் காயமடைந்ததாகவும் பலர் காணாமற் போயுள்ளதாகவும் கூறி விடயத்தைச் 'சடைய' முனைந்தது. சிறிய அணி. பெரியசமர். வெற்றி இலகுவானதன்று.

சீலனின் பெயர்தாங்கிய படையணியைத் தலைவனின் எதிர்பார்ப்புக்கு அமையத் தலைநகரில் வெற்றிநடை போடவைத்து எம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்த கில்மன் எதிரிமீது தாக்குதல் நடத்த முயன்றபோது வெடிவிபத்து ஏற்பட்டு 28.06.95 இல் வீரச்சாவடைந்தான் என்ற கொடிய செய்தி இடியென வந்தது. அவனை அறிந்தவர்களுக்கு இடிவிழுந்தது போலிருந்தது. இனிக் கில்மன் என்றொருவன் இல்லை. அந்த வெடிமருந்து பொய்த்துப்போயிருந்தால்... எவ்வளவு நன்றாக இருக்கும்!... மனம் நப்பாசையில் துடித்தது.

- துளசிச்செல்வன்

மூலம்: நெருப்பாற்று நிச்சலில் பத்தாண்டுகள் நூல்

மூல ஆக்கத்திலிருந்த பிறமொழிச் சொற்களிற்குப் பதிலாக தூய தமிழ்ச்சொற்கள் எம்மால் மாற்றப்பட்டுள்ளது.Image
© 2011 - 2024 Veeravengaikal.Com. All Rights Reserved.