• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
மேஜர் வெற்றியரசன்

மேஜர் வெற்றியரசன்


மன்னார் பேசாலை என்னும் ஊரில் செல்லையா திரேசம்மா இணையரின் மூன்றாவது மகனாகப் பிறந்தான் மேஜர் வெற்றியரசன். இவனிற்குப் பெற்றோர் ஆனந்த் என்று பெயரிட்டனர். இவன் தனது தொடக்க கல்வியை புனித பற்றிமா மகாவித்தியாலயத்தில் கற்றுக்கொண்டு இருக்கும் போது சிறி அட்டூழியங்களை நேரில் கண்டதாலும் சில சம்பவங்களால் இடையில் தனது கல்வியை நிறுத்தி 10.08.1995 அன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை முற்றுமுழுதாக இணைத்துக் கொண்டான். இவன் தொடக்க படையப் பயிற்சியை கெனடி-1 இராணுவப் பயிற்சிப் பாசறையில் பெற்றான். பயிற்சி முடிந்து இவர்களின் அணி, சூரியக்கதிர் எதிர் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது.
 
அங்கு கொடுக்கப்பட்ட பணிகளை திறம்படச் செய்து முடித்த பின்னர் ஓயாத அலைகள்-1 சமரிற்கு இவர்களது அணி அனுப்பப்பட்டது. அதில் இவனும் ஒருவனாக நின்று சமராடினான். இவன் முகத்தின் மென்மையான சிரிப்பு யாரையும் சிரித்து மயக்கி விடுவான். இப்படியாக இவனின் வாழ்வும் போய்க்கொண்டிருந்த போது, தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையின் உருவாக்கம் பெற்ற விக்டர் விசேட கவச எதிர்ப்பு அணியில் தானும் இணைய வேண்டும் என்று பொறுப்பாளரிடம் கேட்டான். இவனது விருப்பிற்கு அமைய இவனை அப்பயிற்சிக்கு அனுப்பி வைத்தார் பொறுப்பாளர். இவனது திறமைக்கு அமைய சிறப்பு ஆயுதம் ஒன்றிற்கான பயிற்சி வழங்கப்பட்டது. அவ்வாயுதத்துடன் சென்று பல களங்கள் கண்டவன். மீண்டும் பொறுப்பாளரிடம் கேட்டு ஆர். பி. எம் உடன் சண்டைக்குச் செல்வதற்கான அனுமதியைப் பெற்றான். பின் ஆயுதத்தை இயக்குவதற்கான அனுமதியைப் பெற்றான். பின் அவ்வாயுதத்தை இயக்குவதற்கான பயிற்சியையும் பெற்று ஓயாத அலைகள்-2 சமர்க்களத்தில் திறம்படச் செயற்பட்ட இவனுக்கு தேசியத் தலைவர் பரிசினை வழங்கினார். பின் இவன் ஒரு அணிப் பொறுப்பாளனாக விடப்பட்டான்.
 
இவன் வீட்டில் சகோதரர்களை எப்படி அரவணைப்பானோ அவ்வாறு தான் தனது போராளிகளையும் அரவணைப்பான். எந் நேரமும் சண்டைக்குப் போக வேண்டும் என்ற துடிதுடிப்போடுதான் செயற்பட்டுக் கொண்டிருப்பான். இவன் விளையாட்டிலும் சிறப்பாகச் செயற்படுவான். பம்பல் அடிப்பதில் இவனிற்கு நிகர் யாரும் இல்லை. இவன் ஊராக்கள் யாரையும் கண்டால் 'ஊரான்' என்று சொல்லி கட்டிப்பிடித்து முத்தமிடுவான்.
 
இவ்வாறு இருக்கும் போது இவன் காதில் 'மச்சான் நீ சண்டைக்குப் போகப் போகிறாய்' என்ற செய்தி விழுகிறது. இவன் முகத்தில் என்றும் இல்லாத புன்னகையுடன் 'உண்மையோடா மச்சான்' என்ற வண்ணம் இருக்க, இவனது பொறுப்பாளர் அழைத்து 'வெற்றி நாளைக்கு வெளிக்கிட வேணும். அணியை ஒழுங்குபடுத்து. ஓம் அண்ணை ஒழுங்குபடுத்திறன்' என்ற வண்ணம் போராளிகளைக் கூப்பிட்டுக் கதைத்தான். பின் இவனது அணியுடன் சமரிற்குப் புறப்பட்டான்.

வரலாற்றுப்புகழ் மிக்க இத்தாவில் சமரில் முதன் முதலாக இராணுவ டிரக் ஊர்தி ஒன்றைத் தகர்த்தான். பின்னர் அணிகளை ஒழுங்குபடுத்தி (கேணல்) இளங்கீரன் அண்ணையிடம் தெரியப்படுத்தினான். பின் தொடர்ச்சியாக இராணுவ நடவடிக்கைக்கு முகம் கொடுத்த வண்ணம் திறமையாகச் செயற்பட்டான். அம் மண் மீட்கப்பட்டது.

இவனை நெடுங்கேணி மண் அழைத்தது. அங்கு எல்லையில் ஊடுருவி பதுங்கித் தாக்குதல் நடத்த வந்த படையினரை எதிர்த்து சமர் செய்யும் போது மார்பில் காயமடைந்தான். காயடைந்த பின்னரும் கூட சளைக்காது சமராடினான். பின் மருத்துவமனைக்கு சென்று மறுநாள் இவன் தமிழீழ மண்ணிற்காய் தான் நேசித்த மக்களிற்காய் வீரச்சாவை அணைத்துக் கொள்கிறான்.
 
வீரனே உன் பணி தொடரும் எங்கள் பாதச் சுவடுகள். இனி நீ நிம்மதியாய் உறங்கு.
 
போராளி பகலவன்



Image
© 2011 - 2024 Veeravengaikal.Com. All Rights Reserved.