• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
2ம் லெப். சுரேந்தினி

2ம் லெப். சுரேந்தினி


வலிகாமத்தின் வடபகுதியில் அமைந்த அழகிய கிராமம்தான் இளவாலை. விவசாயிகளின் கை வண்ணத்ததில் பசுமை குறையாது செழிப்புடன் விளங்கியது. தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாக பல ஆண், பெண் போராளிகளைத் தந்து புகழிபூத்த மண்ணது. அந்த மண்ணில் பிறந்ததாலோ என்னவோ ஜனந்தினியும் அச்சம் சிறிதும் இன்றி ஆயுதம் கரத்தில் ஏந்தி களம் பல கண்டு வீரச்சாவை புகழுடன் தழுவிக் கொணடவள்.
 
இளவாலையைச் சேர்ந்த திரு. திருமதி பரமானந்தம் இணையரின் மகளாக மூன்று அண்ணன்களிற்கு அன்புத் தங்கையாக ஜனந்தினி மலர்ந்தாள். ஒரேயோரு பெண் குழந்தை என்று பெற்றோரும், உறவினரும் மிகச் செல்லமாக ஜனந்தினியை வளர்த்தார்கள். அவளை நல்ல முறையில் கற்பித்து ஆளாக்க வேண்டுமென பெற்றோர் பெருவிருப்புக் கொண்டனர். அவர்களின் விருப்பத்துக்கமைய தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் தனது தொடக்க கல்வியை ஜனந்தினி பயின்றாள். கல்வியில் அவள் கொண்ட விருப்பு அவளை ஆவலுடன் படிக்கத் தூண்டியது. ஒவ்வொரு வகுப்பிலும் தங்குதடையின்றி சித்தியேய்தினாள். இவளின் கல்வித்திறமையை பார்க்க கொடுத்து வைக்காமல் தந்தையார் இவளது சிறு வயதிலிலேயே காலமாகிவிட தாயின் அன்பான அரவணைப்பில், அவள் கொடுத்த ஊக்கத்தில் கல்விப் பொதுத் தராதர சாதரண பரீட்சையில் திறமைச்சித்திகள் பல பெற்று சித்தியெய்தினாள். உயர் வகுப்பை உன்னதமாகப் படித்துத் தேறிவிடவேண்டுமென உறுதியான எண்ணதுடன் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த வேளை அவளது எண்ணத்தைக் கலைத்தது சிறிலங்கா படைகளின்தமிழர் மீதான தாக்குதல்கள்.
 
சிறிலங்கா படைகள் தமிழர் மீது இரக்கமற்ற தாக்குதல்கள் மாத்திரம் மேற்கொள்ளவில்லை. ஒரு இன அழிப்பையே மேற்கொண்டிருந்தனர். அத்தோடு தமிழரின் முன்னேற்றத்துக்கான கல்வியை திட்டமிட்டு அழிக்க முற்பட்டனர். அவர்களின் கொடூரத்தனமான குண்டு வீச்சுக்கு அடிக்கடி தமிழ்ப் பிள்ளைகள் படிக்கும் கல்விக் கூடங்கள் இலக்காகி சிதறின. படைநடவடிக்கைகளால் சேதமுறாத பள்ளிக்கூடங்களே தமிழ் மண்ணில் இல்லை என்று சொல்லலாம். கல்வியில் மேன்மை அடைய வேண்டுமென பெருவிருப்புக் கொண்டிருந்த ஜனந்தினியின் மனதை இது பெரிதும் பாதித்தது. தமிழ் மக்களின் உயிரினும் மேலான கல்வியை பயில வாய்ப்பில்லாத நிலையை உருவாக்கிய அந்த எதிரிமீது ஜனந்தினி உள்ளூரக் சினம் கொண்டாள்.
 
கல்வி... கல்விக்குத் தடையாய் இருக்கிற இந்தப் பேய்களை...... கோபத்தில் குமுறியவள் எதிரியை ஒழிக்க 1995 ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அணியில் போராளியாக இணைந்து கொண்டாள். 30 வது பயிற்சி முகாமில் தனது ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டாள். பயிற்சியின் நுட்பங்களை மிக இலகுவாக புரிந்து கொண்டு பொறுப்பாளர்களின் நன் மதிப்பை பெற்றுக் கொண்டாள். பயிற்சி முடிந்து வெளியேறும் போது சுரேந்தினி என்னும் போராளியாக வெளிவந்தாள். பயிற்சி முடிந்த பின் மற்றைய போராளிகளுடன் உயிர் காக்கும் சேவையான மருத்துவப் பகுதிக்கு அனுப்பப்பட்டாள். அந்த மருத்துவக் கல்லூரி பயிற்சியும் சுரேந்தினிக்கு பெரும் அக மகிழ்வினைத் தந்தது. போருக்கு பக்கபலமான பெரிய சேவை மருத்துவச் சேவை. போரில் காயப்படும் போராளிகளின் உயிரைக் காப்பாற்றுவதும் குணமடையச் செய்து எதிரியை அழிக்க மீண்டும் களம் அனுப்பும் பாரிய பணியை மருத்துவ பிரிவுவல்லவா செய்து கொண்டிருக்கின்றது. அந்தச் சேவையில் விருப்புடன் செயலாற்றியதாலோ என்னவோ சுரேந்தினியின் முகம் எந்த நேரமும் சாந்தமாக அமைதியாக இருக்கும். சக போராளிகளுக்கு எந் நேரமும் எந்த வித உதவி என்றாலும் சிறிதும் தயங்காமல் இன்முகத்துடன் செய்து முடிப்பாள். கோபம் என்பதை இவளிடம் காணவே முடியாது. மருத்துவத் துறையில் மிகவும் திறமையாகவும் கடமை உணர்வுடனும் செயற்பட்டாள்.
 
தான் மாத்திரம் திறமையாக இருந்தால் போதாது மற்றவர்களும் திறமைசாலிகளாக வரவேண்டும் என்பதற்காக தான் கற்ற அறிவினை மற்றவர்களுக்கும் எடுத்து விளக்குவாள். தமிழர் வாழ்வைக் குலைத்து இனத்தின் குரல் வாளையை முறுக்கி நறுக்கிவிவென சிறிலங்கா படைகளால் சூரியக்கதிர் 01 என்ற படை நடவடிக்கை தொடங்கப்பட்டது. இரவு பகல் பாராது கண்விழித்த போராளிகளைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டாள். அவளது சேவையைப் பெற்று எத்தனையோ போராளிகள் மீண்டும் களம் ஏறினார்கள். மருத்துவம் என்கின்ற அந்தப் தூய தொண்டில் அவள் தொடர்ந்து ஈடுபட்டாள். சூரியக்கதிர் 01 நடவடிக்கையை அடுத்து முல்லைச் சமர் களத்தில் அவளது மருத்துவப் பணி தொடர்ந்தது. போர்களத்திற்கு மிக அருகே அவள் பணிவிடம் அமைந்திருந்தது. எதிரியின் வெறி கொண்ட தாக்குதலுக்கு சுரேந்தினி குறியானாள். அவள் உடல் தளர்ந்தது. மெல்ல மெல்ல மண்ணில் சரிந்தாள். தமிழர் தம் போர்க்காவியம் படைத்த முல்லைமண் அவள் உடலைத் தழுவிக் கொண்டது. அவள் மாவீரர் ஆனாள்.
 
இவளின் அன்பான நெருக்கமும் திறமையான செயற்பாடுகளும் இவளது சக போராளிகளுக்கு எந்நாளும் அவளை நினைவு கூரச் செய்யும். அவள் விட்டுச் சென்ற பாதையில் உறுதியுடன் விரையும் கால்கள் வெகுவிரைவில் தமிழீழம் வென்றெடுக்கும்.



Image
© 2011 - 2024 Veeravengaikal.Com. All Rights Reserved.