• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
லெப்.கேணல் வானதி

லெப்.கேணல் வானதி


விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம்.

ஆனாலும் மறைமுக கரும்புலிகள் போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும் தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த தற்க்கொடையும் எம்மையெல்லாம் எம் இலக்கு நோக்கிய பயணத்தில் உந்தி தள்ளும் விசையாக செயற்பட ஏதுவாகிறது.

தாயக களங்களில் சமர்களிலெல்லாம் போராளிகளின் தன்னலமற்ற செயற்பாடுகளே வெற்றிகளை எமதாக்கியது.

குடும்ப வாழ்வில் இணைந்த பெண் போராளிகளாயினும் போராட்ட வாழ்வின் முன்னுதாரணங்களாக மேஜர் நிர்மலா, லெப்.கேணல் கமலி, மேஜர் சுடரேந்தி, லெப்.கேணல் வரதா, கேணல் தமிழ்செல்வி, லெப்.கேணல் இசைப்பிரியா ஆகியோரின் வரிசையில் லெப்.கேணல் வானதியும் இணைந்து கொண்டாள்.

ஆம் குடும்ப சுமைகளை தாங்கும் குடும்பத்தலைவிகளாகவும் தாயக சுமைகளை தாங்கும் வீராங்கனைகளாகவும் போராடும் வாழ்வின் ஆதாரங்களாக மனதின் துணிவு எங்கிருந்துதான் கிடைக்க பெற்றது இவர்களிடம்.....!!!!!!!!

சிறுத்தை படையணியின் இரண்டாவது பயிற்சி முகாமிலே பயிற்சிகளை நிறைவு செய்தவள் லெப்.கேணல் கிருபா/ வானதி.

தொடக்க காலம் முதல் லெப்.கேணல் சுதந்திராவின் வழிகாட்டலில் சிறுத்தை படையணிகளால் நடாத்தபட்ட பாரிய வலிந்த தாக்குதல்கள், ஊடுருவி தாக்குதல்கள், வேவு நடவடிக்கைகள் போன்றவற்றில் மிகவும் திறமையாக செயற்பட்டாள்.

சமகாலத்தில் கவிகை, கட்டுரை, நாடகங்களென இவளது கலைத்திறமைகளும் வெளிவந்து கொண்டிருந்தன. அமைதியான இயல்பிற்கு சொந்தகாரி இவள். ஆனாலும் போராளிகளின் மத்தியில் கல, கலப்பாகவும் போராளிகளை மகிழ்வித்த வண்ணமிருப்பாள்.

பல சமர்களில் விழுப்புண்களை ஏற்ற உடலுடன் தொடர்ந்தும் களப்பணிகளில் இவளது பயணம் தொடர்ந்தது.

சிறுத்தை படையணி சோதியா படையணியுடன் இணைக்கப்பட்ட பின்னர் வலிந்த தாக்குதல் நடவடிக்கைகான பயிற்சி நடவடிக்கைகள், மாதிரி பயிற்சி நடவடிக்கைகள்களை தானே முன்னின்று நடாத்த சமருக்கான வெற்றிக்கு வழிசமைத்தாள்.

மேஜர் சோதியா படையணியில் பிரிகேடியர் துர்க்கா அவர்களின் நிர்வாக பொறுப்பாளாராக பல ஆண்டுகள் பணியாற்றினாள்.

போர் அமைதி காலத்தின் போது யாழ்.மாவட்டத்திற்கு அரசியல் பணிக்காக தெரிவு செய்யப்பட்ட சோதியா படையணி போராளிகளிற்கு பொறுப்பாளாராக நியமிக்கபட்டாள். அமைதிக் காலமென்றாலும் பல புல்லுருவிகளின் செயற்பாடுகள், இராணுவ புலனாய்வாளர்களின் ஊடுருவல் முயற்சிகளிலிருந்து பெண் போராளிகளை காக்கும் பணி இவளின் முதன்மை செயற்பாடாகவிருந்தது.

2005 ம் ஆண்டு காலப்பகுதியில் தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கமைய தான் வாழ்க்கை துணைவராக நேசித்த புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான வினோதன் எனும் போராளியை கரம் பிடித்து திருமணபந்தத்தில் இணைந்துகொண்டாள்.

திருமணபந்தத்தில் இணைந்துகொண்ட போதிலும் தனது கள செயற்பாட்டில் எவ்வேளையிலும் பின் நிற்காது தொடர்ந்தும் சமர்களிலும், நிர்வாக செயற்பாடுகளிலும் உழைத்தாள். 2006 ம் ஆண்டு பண்ணரசன் எனும் குழந்தைக்கு தாயான போதும், அவளது போராட்டச் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமிருந்தன.

இறுதி சமர் வன்னியெங்கும் விரிந்திருந்த போதும், குடும்ப வாழ்வும், களமுனை வாழ்வுமாக இவளது பயணம் தொடர்ந்தது. தான் வளர்த்து விட்ட தோழிகளின் இழப்புக்கள், மக்களின் பேரழிவுகள், தொடர் வான் தாக்குதல்கள், இடப்பெயர்வின் அவலங்கள், மனதினை தாக்கிய போதும் கூட தனது குடும்பம், தனது குழந்தையென எவற்றையும் எண்ணாது தாயகத்தை எதிரியின் வல்வளைப்பிற்குள் செல்லாது தடுக்கும் பணியில் இரவு பகல் பாராது ஈடுபட்டாள்.

துணைவன் ஒரு சமர் களத்தில், இவளோ எதிரியின் வரவை எதிர்பார்த்து வேறொரு சமர் களத்தில், இவர்களின் குழந்தை செல்வமோ உறவினர்கள், நண்பர்களின் பராமரிப்பில் மாதமொருமுறை ஒரு சில மணித்துளிகளே குடும்பங்களுடனான சந்த்திப்புக்கள். இப்படியாகத்தான் இறுதிப் போர் காலங்களில் போராளிக் குடும்பங்களின் வாழ்விருந்தது.

இறுதிப் போர்க்காலங்களில் தொடர்ச்சியாக எதிரின் வல்வளைப்புக்களிற்கு எதிரான சமர்களில் ஈடுபட்ட லெப்.கேணல் வானதி 21.03.2009 அன்று தாக்குதல் நடவடிக்கை ஒன்றிற்கான திட்டமிடல் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது எதிரியின் எறிகணை வீச்சில் வீரச்சாவை அணைத்துக் கொண்டாள்.

 விடுதலைக்காய்
வீச்சாகி -நின்றவள்
களங்களிலே
கனலாகி நின்றவள்
சிறுத்தையணியில்
சீற்றமுடன் பகையளித்தவள்
சோதியா படையணியின்
சோதியாய் நின்றவள்
கனவுகள் தாங்கி
நினைவெல்லாம் நடப்போம். 

- ஈழமதி



Image
© 2011 - 2024 Veeravengaikal.Com. All Rights Reserved.