• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
மேஜர் கணேஸ்

மேஜர் கணேஸ்


 அவனுடைய சாவு ஓர் இலையின் உதிர்வு அல்ல ஒரு மலையின் சரிவு ஆகும் மேயர் கணேஷ் தமிழ் ஈழ விடுதலைப் போர்வரலாற்றில் மேனி சிலிர்க்க வைக்கும் ஒரு அத்தியாயம் ஆகிவிட்டான். பெருத்த மீசை தடித்த உதடுகள் பருத்த மார்பு களத்தில் வெடித்த எரிமலையாய் உலா வந்தவன் கணேஷ்.

மூதூர் ஆறுகளால் துண்டுதுண்டாகி புவியியல் நிலையில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நிலப்பரப்பு.கொலை வெறிச் சிங்களவரின் குடியேற்றப்பகுதி. இஸ்லாமியத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் அவர்கள் வாழ்வையே சூறையாடும் முஸ்லிம் ஊர்காவல் வெறிப்படையின் இருண்ட கூடாரம். 9 இராணுவ முகாம்களாலும் 3 அதிரடி காவல் நிலையங்களாலும் வளைக்கப்பட்ட தமிழீழத்தி் முள் வேலிப்பகுதி.அங்கேதான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை வித்திட்டு வளர்த்தவன் கணேஷ்.

1981 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரனைச் சந்தித்து புலிகள் இயக்கத்தில் சேர்ந்தபோது அவனுக்கு வயது 20 தான்.ஆனால் அப்போதே அவன் கண்களில் நெருப்பின் அலை பொங்கிற்று.

ஒன்றாய் படித்த காலத்தில் ஆசிர் சீலனோடு சேர்ந்து வளர்த்துக்கொண்ட விடுதலை உணர்வுகள் ஆழப் பதிந்திருந்தன. தளபதி சீலனுக்குப் பக்கத்தில் அவன் ஒரு வீரனாய் களத்தில் நின்ற காலம் உண்டு.

அந்த நாட்கள் கணேசின் வாழ்க்கையில் அவன் பாடம் கற்ற நாட்களாகும்.மீசாலை முற்றுகையில் தளபதி சீலன் மீளாத் துயில் கொண்ட நிகழ்ச்சி கணேஷ் நெஞ்சில் மின்னலின் கொடிய வீச்சாயிற்று.தன் பள்ளிக்கூட நண்பனின் அந்தப் பெரிய சாவை அவன் என்றும் மறந்ததில்லை.

நெல்லியடியில்தான் அவனுடைய முதல் களப்போர் 02.07.1982 அன்று ரோந்துப் போலிஸ் படையினரைச் சாகடித்து வீறு கொண்ட தன் போராட்ட வரலாற்றின் முதல் அத்தியாயத்தை எழுதினான் ஒப்பிலாத அந்த மாவீரன் தொடந்து கண்ட களங்கள் ஒன்றா? இரண்டா ?

சாவகச்சேரி போலீஸ் நிலையத் தாக்குதல்,உமையாள்புரம் இராணுவ வாகனங்கள் மீதானஅதிரடி,13 இராணுவ வெறியர்களை முதன்முறை பலிகொண்ட திருநெல்வேலி வரலாற்றுப்போர், களுவாஞ்சிக்குடிபோலீஸ் நிலையத் தாக்குதல்,திருக்கோவிலில் வைத்து துரோகி ஒருவன்மீதான துப்பாக்கிப் பிரயோகம், ஈச்சலம்பத்தை முற்றுகை தகர்ப்பு,கட்டைப்பறிச்சான் கண்ணிவெடித் தாக்குதல்,பாலம்பட்டாறு இராணுவ மோதல், புலிகளின் வரலாற்றின் முதன்முதல் இராணுவத்தின் L.M.G வகைத் துப்பாக்கியை கைப்பற்றிய பட்டித்திடல் கவசவண்டித் தகர்ப்பு, இறால்குழி சுற்றிவளைப்பு மீறல்போர்,3 ஆம் கொலனி இராணுவ நேரடிமோதல்,வாகரை கண்ணிவெடி அதிரடித்தாக்குதல், தெகிவத்தை போலிஸ் கொமாண்டோக்கள் கடத்திச்சென்று நடுக்காட்டில் வைத்து கற்பழிக்க முயன்ற தமிழ் பெண்களை மீட்டெடுத்த தீரப்போர்,எமது விடுதலை வரலாற்றில் முதல்தடவை சிங்கள விமானப்படையின் கெலிகொப்டர் சுட்டு வீழ்த்திய கூனித்தீவு முற்றுகையுடைப்பு,சம்பூர் யுத்தம், வெருகல் விடுதலைப்புலிகளின் முகாம் வளைப்பு முயற்ச்சி முறியடிப்பு ஆம் …..

கணேஷ் புகழின் எல்லைகடந்த மாவீரன் தமிழீழத்தின் வடக்கெல்லைக் கிராமங்களில் ஒன்றான காரைநகர் தொடக்கம் தெற்கெல்லைக் கிராமங்களில் ஒன்றான திருக்கோவில் வரை களங்கள் பார்த்த கணேஷ்தமிழீழம் முழுவதையும் தன்இரண்டு கால்களால் அளந்தான்.யாழ்ப்பாணம்,மன்னார்,வவுனியா,திருகோணமலை, அம்பாறை என்று நீண்டு கிடந்த தமிழீழத்தை எத்தனை ஆறுகள், உப்பேரிகள்,கடல் நீரோடைகள் இடை நின்று பிரித்தலும் ஒற்றைப் பாலமாய் அத்தனை இடைவெளிகளிலும் நிரப்பித் தமிழீழத்தை இணைத்து நின்ற அவன் செயல் வடக்குக்கும்,கிழக்குக்கும் வேலி போட நினைப்போருக்கு வரலாறு கொடுத்த சரியான அடியாகும். கந்தளாய் என்னும் கிராமத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்த கணேஷ் ஆடம்பரம் இல்லாதவனாய் எளிமையானவனாகவே கடைசிவரை வாழ்ந்தான்.

புலிகள் அவனை விரும்பினார்கள் என்று சொல்வதைவிட அவனைப் போலவே இருக்க விரும்பினார்கள் என்பதே பொருத்தமானது. கூனித் தவின் அழகான உப்பாற்றுக்கரையில் புலிகள் அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து மகிழ மகிழ பேசுவார்களே. வெருகல் மண்ணுக்குப் பச்சை வண்ணம் பூசும் வயல்களில் புலிகளின் கைகளைப்பற்றியபடியே சிரிக்கச் சிரிக்கப்பேசி அவன் உலா வருவானே ஓ ! அந்த நாட்கள் இனிமையானவை.

இஸ்லாமியர்,இஸ்லாமியர் அல்லாதார் இடையே மதக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழினத்தைப் பிரிக்க சிங்கள ஆட்சியாளர் முனைத்த ஒரு சந்தர்ப்பத்தில் கலவரத்தை நிறுத்த மூதூர் நகருக்குப் பிரஜைகள் குழுவை அனுப்பினான் கணேஷ். அக்குழுவை கூலிப்படையினர் கைது செய்தபோது போராடி அவர்களை அவன் மீட்ட களப்போர் இன்னுமொரு மயிர் சிலிர்க்கும் வரலாற்று நிகழ்வே. புலிகளுக்குப் பக்கத்தில் மட்டுமல்ல, மக்களுக்குப் பக்கத்திலும் அவன் நெருக்கமாகவே நின்றான்.

சாவு அந்தமாவீரனைச் சந்தித்த நாள் கொடுமையானது.திருகோணமலை மாவட்டத்திலுள்ள பெரியபாலம் என்ற இடத்தில் 05.11.1986அன்று 4 மணியளவில் நிகழ்ந்த இராணுவத்தின் சுற்றிவளைப்பி் மேஜர் கணேஷ் நெருப்பின் நடுவில் 5 ஆண்டுகள் நின்று விளையாடிய விடுதலைபுலி நேர்நின்ற எதிரிகளை மோதி நிமிர்ந்த தலையோடு மரணத்தை ஏற்றுக்கொண்டான்

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் மாபெரும் துப்பாக்கிகளில் ஒன்று மெளனத்தை தழுவிற்று.

ஓ …..  கணேஸ்!…..

நீ போய்விட்டாயா ? இல்லை ….!

அகதி முகாமில் இருந்து உன் தாய் ஆசையோடு உனக்கென்று சமைத்துக் கொடுத்த சோற்றுப் பொட்டலத்தோடு, உன் தந்தை பயந்து பயந்து உன்னைக் காண வருவாரே….

அந்த சோற்றுப் பொதியை அவிழ்த்து வைத்து ஒவ்வொரு பிடியாய் வைத்து நீ புலிகள் வாயில் ஆசையோடு ஊட்டுவாயே !

நீ ஊட்டிய சோறு எங்கள் உடம்பில் இரத்தமாகி விட்டதையா.

நடக்கிறோம்…..

அதே உப்பாற்றங்க்கரை …. அதே வயல்வெளிகள் ….

நன்றி: விடுதலைப்புலிகள், குரல்: 12, 1987.



Image
© 2011 - 2024 Veeravengaikal.Com. All Rights Reserved.