தங்கராசா இலங்கேஸ்வரன்
மூதூர் - திருகோணமலை
திருகோணமலையில் நாளும் துயரச் செய்தியோடு விடியும் கிராமங்களில் ஒன்றில்தான் தனுசன் பிறந்தான். நாளுக்கு நாள் சுற்றிவளைப்புக்கள், கைதுகள், சித்திரவதைகள் என்று அந்த ஊரிற்கே பழகிப்போன அவலங்கள் அது.
நித்தம் ஒரு வீட்டில் ஒப்பாரி கேட்கும். சின்ன வயதில் காயங்கள் மேல் காயங்களாக அவனில் பதிந்த காட்சிகள் ஒவ்வொன்றும் மாறாத தளும்பாக என்றும் அவனின் நினைவில் இருந்தன. அந்த நினைவுகளிலிருந்து அவன் தன்னை மீட்டுக்கொள்ள முடியாதவனாய் அலைந்தான். அவன் சிந்திக்கத் தொடங்கியபோது அந்த நாட்கள் மிகக் கொடுமையானதாக இருந்தன. என்றாலும் அவனால் அம்மாவை மீறி எதையுமே செய்ய முடியாதவனாய் மனசிற்குள்ளேயே அடக்கிக் கொண்டான்.
அம்மாவிற்குத் தெரியாது மௌனமாய் ஒரு எரிமலை குமுறிக் கொள்வது. அவள் பாவம். எப்போதும் பிள்ளைகளுக்காகவே தன்னை தேய்ப்பதில் திருப்தி கண்டுகொண்டிருந்தாள். அவளைப் பொறுத்தவரை தன் எல்லாச் செல்வங்களும் தன்கூடவே இருந்துவிட வேண்டும் என்றதுதான் ஆசை.
''என்ர குஞ்சுகள் எல்லாம் என் னோடயே இருக்கவேணும்" என்று அவள் அணைக்கிறபோது, அவளின் மனதிற்கள் ஓராயிரம் கனவுகள் சிறகு விரிக்கும். அவளைப் பொறுத்தவரையில் தன்னைவிட்டு பிள்ளைகள் பிரிந்துவிடக் கூடாது என்ற நினைப்பு மட்டுமே இருந்தது.
"அண்ணா ஊருக்குவாற இயக்க அண்ணாக்களோட கதைக்கிறான்" என்று அவளின் சின்னமகன் வேர்க்ககளைக்க ஓடிவந்து சொல்லுகின்ற பொழுதெல்லாம் அவள் பெரிதாகப் பதறுவதில்லை. "அவன் என்னை விட்டுட்டு போகமாட்டான்." என்று பிள்ளை மேல் அவள் வைத்த பாசத்தினாலும் நம்பிக்கையாலும் தம்பியை அமைதிப்படுத்துவாள்.
அவளைப் பொறுத்தவரை இப்போதும் அவன் சின்னப் பிள்ளையே. ஆனால், அவனின் செயற்பாடுகளோ வேறுவிதமாய் இருந்தது.
ஒழித்து ஒழித்து வரும் போராளிகளுக்கு சாப்பாட்டுப் பொதி எடுத்துச் சென்று கொடுப்பது, அவர்கள் ஊருக் குள் சேகரித்த அரிசி, பருப்புகளை சுமந்துகொண்டு அவர்களின் முகாம் வரை செல்வது, அவர்கள் வீதி கடக்க வேவுபார்ப்பது என்று அவனது ஒவ்வொரு செயற்பாடும் பெரிதாக, தேவையானதாக இருந்தது.
ஊருக்குள் சிறு காக்காய் குருவிக்குக் கூட இவனின் செய்கை எதுவும் புரியாது. மிக அமைதியானவன். அம்மா மீதும், சொந்தங்கள் மீதும், ஊரின் மீதும் அவனது உறவு வலுப்பெற வலுப்பெற அவனது போராட்டச் சிந்தனைகள் தீவிரமானது.
அவனது அப்பா, மரங்களை அறுத்துச் சீவி வியர்வை சிந்தும் தச்சுத் தொழிலாளி. அவரைச் சுற்றி வளைப்பொன்றில் இராணுவம் கைது செய்து கொண்டுபோனது. தங்கரா சாவை பிடிச்சுக்கொண்டு போட்டாங்களாம் என்ற சேதி அந்த ஊருக்கு வழமையான ஒன்றாய் போனாலும் அவனின் வீட்டில் அது பெரும் இடியானது. அன்றாடம் உழைத்து சரா சரியாக வாழ்ந்துகொண்டிருக்கும் எளிமையான குடும்பம் இந்தத் திடீர் இழப்பால் அவதியுற்றது.
வீட்டிலே அவனையும் தம்பி யையும் வைத்துக்கொண்டு அந்தச் சீருடையணிந்த மிருகங்களிடம் அம்மா இரந்து கேட்டபோதுகூட அவைகள் இரங்கவில்லை. அவளது கண்ணீரைப் போலவே கெஞ்சுதலும் வீணாய் சிந்தப்பட்டது.
அப்பாவைக் கொண்டுசென்று விட்டார்கள். உதைத்து அப்பாவை றக்கில் ஏற்றிய காட்சி கண் முன்னே நடந்ததால் சித்திரவதைகள் எப்பிடி இருக் கும்.... மனசு நினைவிழந் தது. அன்றிலிருந்து அந்த வீட்டில் நேரத்திற்கு அடுப்பு புகையவில்லை. அம்மா பிள்ளைகளோடு அவர்க ளின் முகாம்களுக்கு அப் பாவை விசாரித்து அலைந் தாள். எங்கேயும் இல்லை.
ஒவ்வொரு முகாம் வாசலாய் ஏறி இறங்குகின்ற அவர்களின் நம்பிக்கை இப்போதும் அப்பா இருக்கின்றார் என்றதுதான். அது உண்மையானபோது சந்தோசப்பட முடியவில்லை. அப்பா வெளவால் போல தலைகீழாக தூங்கிக்கொண்டிருந்தார். அடிகாயங்களில் இருந்து இரத்தம் கசிந்து காய்ந்து போயிருந்தது. அந்த வதைமுகாமின் சின்ன இடை வெளிக்குள்ளால் இது மட்டுமே அவ னுக்குத் தெரிந்தது. அவன் அழுதான். அப்போது சின்னப் பெடியன்.
சிறிது நாட்களில் அப்பா வந்துவிட்டார். ஆனால் அப்பாவின் இயல்புநிலை இன்னும் வந்துசேர வில்லை. முன்போல வேலைசெய்ய இயலாமல் அவரின் உடல் அடி காயங்களால் நோய்வாய்ப்பட்டிருந்தது. "அம்மாவைப் பார்க்க அண்ணாக்கள் இருக்கிறார்கள். தம்பியும் வளர்ந்து அவனும் பார்ப்பான்தானே."
அவன் இயக்கத்திற்கு புறப்படத் தயாரான போது இப்படித்தான் அம்மாக்காக அழும் மனசை திடப்படுத்திக் கொண் டான். போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ளவே அவனொரு போராட்டம் நடத்தவேண்டியிருந்தது. எந்த நாளும் கண்ணில் படுமளவிற்கு அங்கே போராளிகள் திரிவதில்லை. எப்பவாவது இடையிடையே அங்கே உலாவும் அவனிற்குத் தெரிந்த போரா ளிகளைக் கூட சில நாட்களாகக் காண வில்லை. அவனின் காத்திருப்பு பொறு மையின் எல்லைவரை கொண்டு சென் றது. அவனும் அவனோடு இன்னும் இருவரும் போராட்டத்தில் இணை வதற்காக ஊரின் ஒதுக்குப்புறத்தில் காட்டிற்குள் தெரிந்த போராளிகளின் பாசறை ஒன்றிற்குச் செல்வதற்கு புறப் பட்டார்கள். நீண்டதூரப் பயணம். இடையிடையே பயணத்தைக் குறுக் கிட்டு மூர்க்கத்தனமாக ஓடும் ஆறுகள். எல்லாம் சலிப்பில்லாமல் கடந்துவந்து அந்த காட்டுப் பாசறையில் தன்னைப் போராளியாக்கினான். ஏற்கனவே அப்பாவின் உடல்நிலையால் உடைந்து போயிருந்த அம்மாவிற்கு இவ னின் பிரிவு தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. அவள் எதிர் பார்க்கவே இல்லை இப்படி ஒரு பிரிவை. நாளும் நாளும் அம்மா தூஙகாமலேயே பிள்ளை வருவான் என்று விழித்திருந்தாள்.
எதை எதையோ வெல்லாம் நினைத்து மனதை வருத் திக் கொண்டிருந்தாள். ஒவ்வோரு நாளி லும் அவளின் செயற்பாடுகளில் ஒவ் வொன்று குறைந்தது. தன் கருமங் களை கவனிக்காமலேயே ஏதோ மனநோய் பிடித்தவளாய் அலைந் தாள். மகன் வருவான், வரு வான் என்றே சொல்லிக்கொண்டிருந்தாள். பொன்னம்மான் பயிற்சிப் பாச றையில் பயிற்சி முடித்து பாசறை விட்டு வெளியே வந்தபோது அவனிற் கும் அம்மாவின் சேதி அதிர்ச்சியாய் த்தான் இருந்தது.
"என்ர குஞ்சுகளெல்லாம் என் னோடையே இருக்கவேணும்" கட்டிப் பிடிச்சுக்கொண்டு அடிக்கடி அம்மா சொல்வது நினைவில் பாரமானது. ஆனால் ஓடிச்சென்று பார்க்கும் சந்தர்ப்பம் இருக்கவில்லை. வன்னிநோக்கி அவர்கள் வந்து பல மாதங்கள் ஆகியிருந்தது.
அவன் கிராமத்திற்குச் சென்று அம்மாவோடு சும்மா இருந்தால் இவனிற்கு பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது. அம்மாமீது வைத்திருந்த பாசத்தை அடக்கி வீரமாக்கிக்கொண்டு அவன் நினைத்துவந்த காரியத்தைச் செய்துகொண்டிருந்தான்.
சாள்ஸ் அன் ரனி படையணியில்தான் அவனது பணிகள் அனைத்தும் ஆரம்பமானது. வன்னியில் முக்கிய ஒருசில தாக்குதல்களிற்குச் சென்றுவந்த பின் லெப். கேணல் ராகவண்ணையுடன் கட்டளை மையத்தில் அவனது போராட்டப்பணி தொடர்ந்தன.
அறிக்கை எழுதுவது, ஆயுத விபரம் எடுப்பது என்று களத்தினில் நிகழும் மாற்றங்களையும் இழப்புக் களையும் வெற்றிகளையும் ஆவணமாக்கும் முக்கியமான பணியது. அங்கேதான் ஆரம்பப் பயிற்சி முகாமிலேயே உறவான உறவொன்று தொடர்ந்துகொண்டே வந்தது.
பிரிவு என்பதில் நொந்துபோயிருந்தவனிற்கு அரவணைக்க அன்புசெய்ய சகோதரன் மாருதியனின் பாசமிருந்தது. முதலில் அவனுடனான பாசம் பின் அவர்களின் வீடுவரை சென்றது. அந்த வீடு, அம்மா, அப்பா சகோதரிகள் எல்லாம் அவனின் நெருங்கிய உறவுகளானது. தனுசனின் வீட்டார் அவனிற்கு கடிதம் அனுப்புவதென்றால் அங்கே தான் அனுப்புவார்கள். மாருதியன் தனக்கு உடுப்பெடுத்தால், தனுசனுக்கும் சேர்த்தே எடுப்பான்.
இப்படி அவனின் உறவுகள் வலுப்பெற்றுக் கொண்டிருக்க உள்ளத்தில் இழப்புக்கள் உருவாகிக்கொண்டிருந்தன. வீரச்சாவு விபரம் எழுதி அவனது கை வைரம் பெற்றது. அதுவும் அவனோடு கூட இருந்தவர்கள், ஒன்றாய் பழகியவர்கள். ஒவ்வொரு போராள யின் பெயர்களும் நாளும் அவனின் மனதிற்குள் பெரும் எரிமலைகளை உருவாக்கிக் கொண்டிருந்தன.
இந்த நாட்களில்தான் அவனிற்குள் கரும்புலியாகச் செல்லவேண்டும் என்று முடிவெடுத்தான். தனது மனதிற்குள் இருந்தவற்றை தலைவனிற்கு எழுதி அனுமதி கேட்டான். அவன் போராட்டத்தில் இணைவதற்கு நிகழ்த்திய மனப் போராட்டங்களைப்போல கரும்புலி அணிக்கான அனுமதி கேட்டு காத்திருக்கும் நாட்கள் கடுமையானதாக இருந்தது. எந்த விடயத்திலும் அவன் கூடவே திரிந்து, என்ன செய்தாலும் அவனைப் போலவே செய்யும் மாருதியன் அப்போதுதான் தனுசனின் பிரிவை எதிர்கொண்டான்.
அன்று கரும்புலிகள் அணியில் இணைந்துகொள்வதறகு அனுமதி வந்தவர்களை எற்றிச் செல்வதற்கு வாகனம் வந்துநின்றது. பிரியப்போகும் அந்த இறுதி நிமிடங்களை ஒரே இடத்திலிருந்து சந்திக்கும் சக்தி இருவருக்கும் இருக்கவில்லை.
தனுசன் புறப்படப்போகின்றான் என்றதும் மாருதியன் முகாமைவிட்டு வெளியே சென்றான். முகாமில் இருந்து பிரிவதற்கான நிமிடங்கள் விரைவாகக் கழிந்தன. மாருதியன் அந்த வாகனம் புறப்பட்டிருக்கும் என்ற கணிப்பீட்டில் அந்த முகாம் வந்தபோது வாகனம் இன்னும் புறப்படவில்லை. அவன் எந்த நேரத்தில் நிற்கக் கூடாது என நினைத்தானோ அது நிகழ்ந்துவிட்டது. வாகனத்தை விட்டு தனுசன் வேகமாக இறங்கினான். இறதியாக அந்த இணைவில் அவர்கள் பேசிக்கொள்ள வார்த்தைகள் இருக்கவில்லை. கண்ணீர்தான் கதைத்துக் கொண்டது.
தனுசனின் வாழ்வில் அடுத்தடுத்து பிரிவுச் சுமைகள் பாரமாய் கனத்தன. அந்தச் சுமைகளோடும் தாயகக்கனவை முதன்மையாக்கிக்கொண்டான். கரும்புலிகள் அணிக்குள் அவன் சேர்ந்திருந்தபோது அவனிற்கு மாருதியன் வீரச்சாவு என்ற சேதி வந்தது.
மீண்டும் மீண்டும் அவனின் மனதில் ஏற்பட்ட இழப்புக்கள் அவனை இன்னும் இன்னும் வேகமாக்கியது. கரும்புலிகள் அணிப் பயிற்சி முடிந்தபோது ஓயாத அலைகள் மூன்றிற்கான ஆரம்ப ஏற்பாடுகள் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஓயாத அலைகள் வன்னியின் சமர்முனையில் உக்கிரமானபோது அவனும் கரும்புலிகள் அணியின் ஒரு அணிக்கு பொறுப்பாகச் சென்றான். இராணுவப் பிரதேசத்திற் குள்ளேயே தங்கி அவனிற்கும் அவனது சொத்துக்களிற்கும் இழப்புக்களை ஏற்படுத்துவதற்காக பைகளில் உணவுகளோடு பெரும் சுமைகளைச் சுமந்து கொண்டு இரவுபகல் நித்திரையில்லாது ஓய்வில்லாது தங்களிடம் இந்த தேசம் எதிர்பார்த்ததை செய்து முடித்திருந்தார்கள்.
அதேபோலதான் வட போர் முனையில் ஓயாத அலைகள் அடிக்க ஆரம்பித்தபோது ஆனையிறவு களத்தினுள் இராணுவத்தின் சில செயற்பாடுகளை முடக்கி வைத்திருப்பதில் அவனின் பங்களிப்பும் இருந்தது.
அந்தத் தாக்குதலிற்காய் அவன் செல்கின்றபோது லேசான காய்ச்சல் அவனது உடற் சுகயீனத்தினை காரணம் காட்டி அந்தத் தாக்குதலில் அவன் பங்குபற்றும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அவன் கேட்பதாக இல்லை. அவனும் செல்லப் போவதாக பிடிவாதம் பிடித்தான். அனுமதி பெறும் மட்டும் ஓயவில்லை. அதன் பின்னே திருப்தி.
தாக்குதலிற்காக நகர்ந்து தண்ணீரைக் கடக்கின்றபோது அவனின் உடல் குளிரால் நடுங்கத் தொடங்கியது. அவனின் மனது மட்டும் வைரமாய் இருந்தது. பொதிகளோடு நீந்துவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்த இன்னொரு தோழனிற்கு உதவி செய்து அவனையும் அழைத்துச் செல்லும் மனத்திடம் அவனிடம் இருந்தது.
தாக்குதலிற்காகச் சென்று இடையில் வேறு வேலைக்காக இருவர் அவர்களை விட்டுப் பிரிந்து சென்ற போது அவர்களோடு இவர்களிற்கான உணவுப் பொதிகளும் சென்றுவிட்டது. திரும்பிவந்து எடுப்பதற்கோ வேறு எவர் மூலமாவது பெற்றுக்கொள்ள முடியாத சூழல். அவர்கள் இராணுவப் பிரதேசத்திற்குள் நுழைந்துவிட்டார்கள்.
இனி வெளியே வருவதென்றால் அவர்கள் தங்களிற்கான பணியினை முடித்துத்தான் வருவார்கள். சாப்பாட்டுப் பொதி இல்லாதபோதும் அவர்கள் தங்களிற்கான இலக்கு நோக்கிச் சென்றார்கள். அவர்களிற்கான பணியை முடித்தபோது பெரிதும் சோர்வுற்றுப் போயிருந்தார்கள். ஆனாலும் அவர்கள் தங்கள் பணி முடிந்தது என்ற திருப்தியோடிருந்தார்கள்.
அதேபோலவே பளைப்பகுதியில் அமைந்திருக் கும் ஆட்லறித் தளம்மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்ட போது தனுசனும் ஓர் அணியோடு தெரிவு செய்யப்பட்டிருந்தான்.
26.03.2000 நள்ளிரவு பளை ஆட்டிலறித் தளப்பகுதி பெரும் வெடிச்சத்தங்களினால் அதிர்ந்து கொண்டிருந்தது. ஆட்டிலறிகளும் எறிகணைகளும் வெடித்துச் சிதறி எரிவது அந்த ஆட்லறித்தளம் நிர்மூலமாகி விட்ட சேதியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தது. வானளாவ பரவிக் கொண்டிருந்த தீச்சுவாலைகளின் பிரகாசம் கரும்புலிகளின் வீரத்தையும் தியாகத்தையும் வானத்தில் பிரதிபலிக்கும்படி செய்து கொண்டிருந்தன. அந்த வீரமிகு சாதனையை நிகழ்த்தி விட்டு காவியமாகினர் இரண்டு கருவேங்கைகள். கரும்புலி மேஜர் தனுசன், அவனோடு கரும்புலி மேஜர் சுதாஜினி. தனுசன், அவன் சுமை மீது சுமை வந்தபோதும் சோராது நடந்தவன். தினம்தோறும் வானில் வீரவரலாறு எழுதி நெருப்பாற்றைக் கடந்தவன்.