மறைமுகச் செயற்பாட்டாளர் லெப்.கேணல் முகிலன் (சுரேஸ்) அவர்கள் விநாயகபுரம், திருக்கோவில், அம்பாறையைச் சேர்ந்தவர். பழனிவேல் ஜெயக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 நவம்பர் 2005 அன்று அம்பாறை மாவட்டத்தில் தேசவிரோதிகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது. மாவீரர்களை எமது இனவிடுதலைப் போரின் வரலாற்று நாயகர்களாக, தேசிய வீரர்களாக நாம் போற்றுகிறோம். அவர்களது நினைவுகள் காலத்தாற் கரைந்துபோகாது, என்றும் எமது நெஞ்சங்களில் நிலைத்திருக்க வேண்டுமென்பதற்காக நாம் அவர்களுக்கு நினைவு விழாக்கள் எடுக்கிறோம். நினைவுச் சின்னங்கள் நிறுவிக் கௌரவிக்கிறோம். வீர வணக்கச் சடங்குகளுடன் மாவீரர்களது வித்துடல்களை விதைப்பதும், நினைவுக் கல் நாட்டுவதும், அவர்களது கல்லறைகளைப் புனிதச் சின்னங்களாகப் பூசிப்பதும், அவர்களது துயிலும் இல்லங்களைப் புனிதத் தலங்களாக வழிபடுவதும் எமது மக்களால் விரும்பப்படும் வழக்காகிவிட்டது.