• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

திலீபன்

திலீபனுடன் ஐந்தாம் நாள்.!

திலீபனுடன் ஐந்தாம் நாள்.!


வழக்கம்போல் காலையில் அனைத்து செய்தி ஏடுகளையும் படிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்யமுடியவில்லை. யாழ்ப்பாண குடா நாடு முழுவதும் இருந்து தனியார் பேரூந்துகளில் மக்கள் வெள்ளம் போல் வந்து நிறையத் தொடங்கிவிட்டனர்.

இன்னும் திலீபன் போர்வைக்குள்ளேயே புதைந்து கிடக்கிறான். அவனால் எழும்ப முடியவில்லை. உடல் கடுமையாக வியர்த்து கொட்டியது. மின்விசிறி அவர் பக்கத்தில் வேகமாக சுழன்று கொண்டிருந்தது. ஒரு மனிதப்பொறி தன் முழுச்சக்தியையும் பயன்படுத்தி இயங்கிக் கொண்டிருக்கிறது. அன்றைய செய்தி ஏடுகள் முக்கிய செய்திகளாக வழக்கம்போல் திலீபனை பற்றிய செய்திகளே இடம்பெற்றிருந்தன. திலீபன் சோர்ந்து வருகிறார். மெழுவர்த்தியைப் போல அவர் சிறிது சிறிதாக உருகிக்கொண்டிருக்கிறார். அவரது சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கிவிட்டது. நெஞ்சம் பலமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவர் உணவு நீர் உட்பொள்ளாவிட்டால் நிலமை மேலும் மோசமாகி எந்த வேளையிலும் எதுவும் நடக்கலாம்.

செய்தி ஏடுகளைப் படிக்கும்போது என் கைகளுடன் உள்ளமும் சேர்ந்து நடுங்கியது. திலீபன் என்ற ஒரு இனிய காவியத்தின் கடைசி அத்தியாயத்திற்கு வந்து விட்டதுபோல் உணர்வு எனக்கு ஏற்பட்டது. அதற்கிடையில் ஓர் செய்தி காற்றோடு காற்றாக கலந்து வந்து என் செவியில் விழுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த திலகர் அவர்கள் இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார் என்பதுதான் அது. புலிகளின் சார்பாக திம்பு பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்களில் திலகரும் ஒருவர். அப்படியானால் இந்திய தலைமை அமைச்சர் ராஜிவ் காந்தியிடமிருந்து ஏதாவது அழைப்பு வந்திருக்குமா என்ற நப்பாசை என் மனதில். விசாரித்தபோது எந்த விதமான அழைப்பும் வரவில்லை வழமைபோல வழக்கமான விடயங்களைக் கவனிப்பதற்காகத்தான் திலகர் போய் இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் ஏன் கேட்டோம் என்றிருந்தது.

திலகரின் இந்தியப் பயணம் பற்றி கேட்டு அறியாமல் விட்டிருந்தால் ஓரளவு மன நிம்மதியாவது கிடைத்திருக்கும். ஆனால் விதியே உன் கரங்கள் இத்தனை கொடியதா ? பம்பரம்போல் கள்ளமில்லாத வெள்ளையுள்ளத்துடன் கலகலவென்று சிரித்துக்கொண்டு எம்மையே சுற்றி வரும் திலீபனை சித்திரவதை பள்ளத்தில் தள்ளுவதுதான் உன் கோர முடிவா ? அப்படி அவர் என்ன குற்றம் செய்து விட்டார். தமிழினத்திற்காக தனது தந்தை உடன்பிறப்புக்களைப் பிரிந்து வந்தாரே அது குற்றமா? தமிழினத்திற்காக தன் மருத்துவப் படிப்பையே உதறி எறிந்தாரே அது குற்றமா? தமிழினத்திற்காக இரவும் பகலும் மாடாக உழைத்தாரே அது குற்றமா? தமிழினத்திற்காக தனது வயிற்றிலுள்ள குடலின் 14 அங்குலத்தை வெட்டி எறிந்தாரே அது குற்றமா? தமிழினத்திற்காக இன்று தன்னையே சிறிது சிறிதாக அழித்துக் கொண்டு உண்ணாமல் இருக்கிறாரே அது குற்றமா? எது குற்றம்?

வானத்தைப் பார்த்து வாய்விட்டு கத்த வேண்டும் போல் இருக்கிறது. கதறித்தான் என்ன பயன் ஏற்படப்போகிறது. இலட்சக்கணக்கான மக்கள் கடந்த ஐந்து நாட்களாக கண்ணீர் சிந்திக்கொண்டு இருக்கிறார்களே. யாருக்காக? திலீபனுக்காக, தமிழினத்திற்காக அப்படி இருக்க அந்த கண்ணீரை ஏக்கத்தை இன்னும் யாருமே புரிந்து கொள்ளவில்லையே. ஏன்? உலகில் மனித ஈகமே செத்துவிட்டதா? காந்தி இறந்ததற்காக கண்ணீர் வடிக்கும் உலகம் காந்தியத்தின் காலடியில் சிறிது சிறிதாக எரிந்து கொண்டிருக்கும் திலீபன் என்னும் மெழுகுவர்த்தியைக் காணவில்லையா? அல்லது கண்டும் காணாது போய்விட்டதா? எத்தனையோ முறை திலீபன் சாவின் விளிம்பில் இருந்து தப்பியிருக்கிறார்.

1983ம் ஆண்டு அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நவாலிப் பகுதியில் பொறுப்பாளராக இருந்தபோது ஓர் நாள் நவாலி கத்தோலிக்க தேவாலயத்தின் அருகே நின்று பொது மக்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று இரண்டு ஜீப்வண்டிகள் அவரருகே முன்னும் பின்னுமாக வந்து நின்றன. சிறிலங்கா படையினர் கண்சிமிட்டும் நேரத்தில் சுற்றி வளைத்துவிட்டதை உணர்ந்த திலீபன் எதுவித பதற்றமும் அடையாமல் இயல்பாக நின்றார். அவரின் மதி நுட்பம் மிகவும் தீவிரமாக வேலை செய்யத் தொடங்கியது. யாரோ ஒரு தமிழ்த்துரோகியால் வழங்கப்பட்ட தகவலை வைத்துக்கொண்டு திலீபனை அடையாளம் கண்டு கொண்ட படையினர் ஜீவண்டியில் ஏறுமாறு உத்தரவிட்டனர். அவரது கையிலே ஆயுதம் அடங்கிய சிறிய சூட்கேஸ் ஒன்று இருந்தது. அவரருகே இரு படையினர் சேர்ந்து வந்தனர்.

ஜீப் வண்டியில் ஏறும்போது எதிர்பாராத விதமாக பக்கத்தில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்து சூட்கேஸினால் மின்னல் வேகத்தில் தாக்கிவிட்டு பக்கத்திலிருந்த பனந்தோப்பை நோக்கி ஓடத் தொடங்கினார் திலீபன். எதிர்பாராத தாக்குதலினால் நிலைகுலைந்து விட்ட படையினர் என்ன செய்வது என்று திகைத்து நின்றனர். மறுகணம் அவர்களின் கைகளிலிருந்த துப்பாக்கிகள்  திலீபனை நோக்கி உறுமத் தொடங்கின.

அவரது கை ஒன்றை துளைத்துக் கொண்டு சென்றது துப்பாக்கி ரவை. இரத்தம் சிந்த மனதை திடமாக்கிக் கொண்டு வெகுநேரமாக ஓடிக்கொண்டிருந்தார் திலீபன். படையினரால் அவரை பிடிக்க முடியவில்லை. இந்த ஏமாற்றத்தினால் பல பொதுமக்களை அவர்கள் அன்று கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளிவிட்டுச் சென்றனர்.

1986ம் ஆண்டின் இறுதியில் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற படையினருடனான மோதலின்போது திலீபன் தன் துப்பாக்கியால் பல படையினரை சுட்டுத்தள்ளினார். ஆனால் எதிரிகளின் ஓர் ரவை அவர் குடலை சிதைத்துவிட்டிருந்தது. யாழ் பொது மருத்துவமனையில் அவரின் குடலின் 14 அங்குலத் துண்டை மருத்துவர்கள் அகற்றிவிட்டனர். சுமார் மூன்று மாதங்களாக மருத்துவமனையிலேயே கழித்த பின்தான் அவர் முழுமையாக நலமடைந்தார். இப்படி எத்தனையோ துன்பங்களை தமிழினத்திற்காக அனுபவித்தவர்தான் திலீபன். ஆயுதப் போராட்டத்தினால் மாத்திரமன்றி அகிம்சையாலும் தன்னால் சாதனை புரிய முடியும் என திலீபனுக்கு அசையாத ந்ம்பிக்கை இருந்தது.

அதனால் இந்தப் போராட்டத்தில் அவர் தானாகவே முன்வந்த எத்தனையோ பேர் தடுத்தும் கேளாமல் குதித்தார். இன்று மாலை இந்திய அமைதிப் படையினரின் யாழ் கோட்டை படை முகாம் பொறுப்பாளர் கேணல் தரார் அவர்கள் திலீபனை பார்க்க வந்தார். அவர் மக்களுடாக நடந்து வரும்போது பலதாய்மார்கள் அவர் மீது கல்களை வீச தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்களை தடுத்து அவருக்கு தகுந்த பாதுகாப்புக் கொடுத்து மேடைக்கு அருகே அழைத்துச் சென்றனர் விடுதலைப்புலிகள். திலீபனின் உடல் மோசமாகி வருவதால் பொதுமக்களும், இயக்க உறுப்பினர்களும் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை யோகியும் வேறு சிலரும் எடுத்துக் கூறினர்.

தான் சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறிவிட்டுச் சென்றார். அவர் மூலமாவது திலீபனின் உயிர் காப்பாற்றப்படாதா என்று எங்களில் சிலர் நிம்மதியாக இருந்தோம். களைப்புடன் திலீபன் உறங்கிவிட்டார்.இணைப்புக்கள்

வேர்கள்.
மாவீரர் இல்லம்
© 2011 - 2023 Veeravengaikal.Com. All Rights Reserved.