நம்பர் வண்(1)
இந்தியப் படைகளும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து உணர்வாளர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பகுதியில் யூலியனின் தந்தை இந்தியப் படைகளால் கைது செய்யப்பட்டார். பள்ளிக்குள் புகுந்த படையினர் யூலியனைக் காட்டித்தரும் படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பள்ளிக்குச் செல்லாத யூலியன் தப்பித்துக்கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக் கடையொன்றில் தற்காலிகமாகப் பணிக்கு அமர்த்தப்படுகின்றான். முதல் நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் நாற்காலி அமர்ந்திருக்கின்றான். அங்கு வந்த முதலாளி "கடைக்கு வேலைக்கு வந்தனி எப்படிக் கதிரையில் இருக்கலாம்?" என அதட்டுகிறார். "நான் எனது ஆசிரியர்களுக்கு மட்டும்தான் எழுந்து மரியாதை கொடுக்கிறனான்" என கூறியவன் எவருடைய உதவியுமின்றி மீண்டும் தாயிடம் வந்து சேருகின்றான்.
"அம்மா இப்படி அடிமையாகச் சிறுமைப்படுவதிலும் பார்க்க நான் இயக்கத்திற்குப் போகப்போறன்" என இசைவு கேட்கிறான். அன்னை அமைதியாக இருக்கின்றாள். அங்கிருந்த உறவினர்கள் அழுகின்றார்கள். நீங்கள் அழுதுகொண்டு இருக்கையில் நான் இயக்கத்திற்குப் போக மாட்டன். ஆனால் விரைவில் போயிருவன்" என்றவன், ஒருநாள் இயக்கத்தில் இணைந்து விட்டான். உயிரச்சத்தை அசட்டை செய்து, போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மிகவும் ஆதரவான வீட்டிலிருந்து, இவன் இயக்கத்தில் இணைந்தது, முகாம் பொறுப்பாளரைச் சங்கடத்திற்கு உள்ளாக்கியது. "நீ வீட்ட திரும்பிப் போ" என கூறுகின்றார். "இல்ல நான் அம்மாவிட்ட சொல்லிப் போட்டுத்தான் வந்தனான்". என பதிலளிக்கின்றான். இதனை உறுதிப்படுத்த பொறுப்பாளர் தாயைச் சந்திக்கின்றார். மகனின் கூற்றை உண்மையாக்க விரும்பியவள் "ஓம் என்னட்ட சொல்லிப்போட்டுத்தான் வெளிக்கிட்டவன்" எனக் கூறுகின்றாள். முழுமையான போராளியாக மணலாற்றுக் காட்டினுள் இவனது போராட்ட வாழ்க்கை "பூட்டோ" எனும் பெயருடன் தொடங்கியது.
காட்டு வாழ்க்கை, கடினப் பயிற்சிகள் கடந்து வேவுப்புலியாகப் பரிணமிக்கின்றான். காடுகளையும் எதிரிமுகாம்களையும், காவலரண்களையும் கால்களால் நடந்து அளந்து கணிக்கின்றான்.
ஒரு நாள் ஏழு பேர் கொண்ட வேவு அணியை வழிநடத்தியவாறு, வனப்பாதுகாப்பு வலயத்தின் சுற்றயல் பகுதியை கண்காணித்துக் கொண்டு வருகின்றான். ஒரு இடத்தில் சூழலுக்குப் பொருத்த மற்ற முறையில் புற்கள் மடிந்திருப்பதை அவதானிக்கின்றான். எதிரி தமது பகுதிக்குள் புகுந்துவிட்டதாக கூறுகின்றான். மற்றவர்கள் அதனை மறுதலிக்கின்றனர். இவனோ அப்பகுதியில் அண்மையில் தான் புதைத்து வைத்த மிதிவெடியொன்றைத் தோண்டி எடுக்கின்றான். எதிரி மீண்டும் அப்பாதையைக் கடப்பானாயின் எங்கு பாதம் வைப்பான் என்பதைக் கணிக் கின்றான். அவ்விடத்தில் மிதிவெடியை வைத்து உருமறைத்து விடுகின்றான். தொடர்ந்து நகர்கின்றார்கள். சிறிது நேரத்தில் வெடிச்சத்தம் ஒன்று கேட்கின்றது. ஏனையவர்கள் காட்டு விலங்கு ஏதும் மிதிவெடியில் சிக்கியிருக்கும் என கருத்துத் தெரிவிக்கின்றனர். அதனை மறுதலித்தவன் அவர்களையும் அழைத்துக்கொண்டு அவ்விடம் திரும்புகின்றான்.
அங்கு இரத்தம் சொட்டிய படியே இராணுவப் பாதணியுடன் துண்டிக்கப் பட்ட கால் ஒன்று கிடக்கின்றது. பின்னர் வந்த நம்பகமான தகவல் மூலத்திலிருந்து தெரியவந்தது,. இவர்களுடைய காட்டு முகாமைச் சுற்றிவளைத்து தாக்கியழிப்பதற்காகத் தங்களது வேவு தகவல்களை இறுதியாக உறுதிசெய்ய வந்த இராணுவ அதிகாரி ஒருவர்தான் மிதிவெடியில் சிக்கியது என்பது.
இவனது இச் செயற்பாட்டால் பல போராளிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது. இவ்வாறான பல பதிவிலுள்ள, பதிவில் இல்லாத நிகழ்வுகளின் ஊடாக இவன் ஒரு படைய அறிவியலாளனாக வருவதற்கான அறிகுறிகள் தென்படத்தொடங்கின.
மணலாறு மாவட்டத்தில் நடாத்தப்பட்ட பல்வேறு முகாம் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்கள் என்பனவற்றிற்கு வேவு எடுத்தும், அணிகளை வழி நடத்தியும் போராட்டத்திற்கான தன் பங்களிப்பை மேம்படுத்திக்கொண்டான். இக்கால கட்டத்தில் ஒரு சண்டையில் தனது இடதுகைப் பெருவிரலையும் இழந்திருந்தான்.
இயல்பாகவே இவனிடம் இருந்த ஓவியம் வரையும் ஆற்றலால் இவன் வரைபடப் பகுதிக்குள் உள்ளீர்க்கப்பட்டான். வேவு தகவல்களை வரைபடங்களாக்கி துல்லியமான விபரங்களைக் கொடுத்து முதன்மைத் தளபதிகளின் தாக்குதல் திட்டமிடல்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தான். இயற்கையாகவே இவனிடம் இனிமையாகப் பாடும் திறனும், கவிதை யார்க்கும் வல்லமையும் கைகூடியிருந்தது.
வனமுகாம்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்குகொண்டு கலையாற்றல்களை வெளிப்படுத்தி போராளிகளை மகிழ்விக்கவும் செய்தான். இயக்கத்தில் கலையரசன் எனும் பெயரையும் பெற்றான். சமகாலத்தில் போராயுதத் தளபாடங்களையும், புதிய படைய கருவிகளையும் தன்னுடன் பழக்கப்படுத்தினான். அவற்றின் உச்ச பயன் பாட்டைப் பெறும்வகையில் தன்னை தகவமைத்துக் கொண்டான்.
தொடர்ந்து பூநகரி - கொக்குத்தொடுவாய் படை முகாம்களின் வேவுகளை எடுத்து அவற்றின் மீதான தாக்குதல்களை உறுதிப்படுத்தினான். இப்பொழுது இவன் பல அணிகளை வழிநடத்தும் அணித் தலைமைப் பொறுப்பை வகிக்கத் தொடங்கியிருந்தான்.
சூரியக்கதிர் படை நடவடிக்கை தொடர யாழ்நகரம் கைவிடப்பட, இவன் உள்நின்ற போராளிகளுடன் கலந்திருந்தான். இவனது போராவலைத் தீர்ப்பதற்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைத்திருந்ததன.
ஒருமுறை நடவடிக்கையின் காரணமாக பண்ணைக் கடலினூடு நீந்திக்கொண்டிருந்தான். அப்பொழுது அழற்சியை ஏற்படுத்தக்கூடிய, நச்சுக் கடற் தாவரம் ஒன்றினால் தாக்கப்பட்டிருந்தான். உடல் முழுவதும் தடித்து மூச்சு விடுவதையும் சிரமம் ஆக்கியது. ஒருவாறு சிரமப்பட்டு கரையொதுங்கியவன் ஒரு கிழமைக்கு மேலாக மருத்துவமனையில் மருத்துவமனையில் பெற்று மீண்டும் களம் சென்றான்.
முல்லைத்தீவுச் சமர் தொடங்கி விட்டது. "பூட்டோ... பூட்டோ!" என தொலைத் தொடர்பு கருவியில் தளபதி பால்ராஜ் அழைப்பது கேட்கின்றது. ஈழத் தமிழர்களின் தலைவிதியைத் முடிவு செய்யும் திருப்புமுனைத் தாக்குதல் அது. நாங்கள் வென்றே ஆகவேண்டும் உலகிற்கான தமிழீழத்தின் கடற்பாதை திறக்கப்பட்டே ஆக வேண்டும்.
முகாம் துடைத்தழிப்பை முழுமைப்படுத்தப்பட வேண்டும். அதற்காக வேவில் வரைபடத்துறையில், தாக்குதல் பட்டறிவில், நெருக்கடி நேரங்களில் சரியான முடிவெடுக்கும் வல்லமையைப் பலமுறை உறுதிப்படுத்தியிருந்த பூட்டோ களநிலை கண்காணிப்பாளராகவும், டாங்கிக்கான ஒருங்கிணைப்பாளராகவும் களத்தினுள் இறக்கப்பட்டிருந்தான்.
இவனது செயற்பாட்டால் பகைமுகாம் வீழ்த்தும் முயற்சி துரிதப்படுத்தப்பட்டது. பெரும்பாலான முகாம் பகுதிகள் வீழ்ந்து விட்டன. ஒரு கட்டடத்தினுள் பல படையினர் ஒளிந்திருந்து தாக்குதலைத் தொடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களைச் செயல் முடக்கம் செய்யவேண்டும். பூட்டோ டாங்கியைத் தாக்குதலுக்கு ஆயத்தம் செய்து அதன் மூலம் சில சூடுகளை வழங்க ஆணையிட்டான். பகைவன் பதுங்கியிருந்த கட்டடம் அப்படியே தகர்ந்து இறங்கியது. பெரும்பாலான படையினர் கொல்லப்பட்டு விட்டனர்.
தொடர்ந்து தாக்குதலை நடாத்தி வெற்றியை உறுதிப்படுத்தும்படி களமுனைத் தளபதி கட்டளையிட்டார். அவ்வாறு செய்ய முற்படுகையில் அவனது உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. மீண்டும் சூழலை அளவெடுக்கின்றான். மின்னல் என பொறி தட்டியது. டாங்கிக்குப் பக்கவாட்டாக இருக்கும் மண்ணரணில் இடைவெளி தென்பட்டது. எக்காரணம் கொண்டும் டாங்கி இழக்கப்பட முடியாத இயக்கத்தின் படையச் சொத்து. டாங்கியை வேகமாகப் பின்னகர்த்தி பாதுகாப்பிடம் செல்ல உத்தரவிட்டான். டாங்கி சடுதியாகப் பின்னகரவும் குறித்த மண்ணரண் இடைவெளியூடு ஆர்பிஜி கணை ஒன்று எகிறி வந்து இலக்குத் தவறித் தாண்டிச் செல்லவும் சரியாக இருந்தது. கணநேர முடிவில் இயக்கத்தின் படையப் பலங்களில் ஒன்றைப் பாதுகாத்து தொடர்ந்த பல வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணமாகின்றான்.
ஓயாத அலை 1 வெற்றியில் தமிழீழம் திளைத்திருந்தது. தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்கத் தொடங்கினர். சிங்களம் தோல்விக்குச் சப்பைக்கட்டுக் கட்டிக்கொண்டிருந்தது. அவ்வேளை முல்லைத்தீவு முகாமில் எடுக்கப்பட்ட பொருட்களின் தவறான பயன்பாடு தொடர்பாக பூட்டோ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். அவனை அறிந்திருந்த அனைவருக்குமே விளங்கியிருந்தது. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என நிரூபிக்கும் என. ஆனால் அதுவல்ல இங்கு முக்கியம், அர்ப்பணிப்பும் செயற்திறனும் உள்ள அப்போராளிக்கு இச்செயல் மனவுடைவை ஏற்படுத்தலாம்.
ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாகவே நிகழ்வுகள் நடந்தேறின. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என்றது. "தொடர்ந்து என்னசெய்யப் போகிறீர்கள்? விரும்பினால் தண்டனை இல்லாமல் வீட்ட போகலாம்" என பொறுப்பாளர் தெரிவித்தார். மெலிதாகச் சிரித்தான். "நான் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கிறன்" என கூறினான். அப்பொழுது பொறுப்பாளர் அப்பச் சரி வரிப்புலி சீருடையைப் போடுங்கோ அண்ணை உங்களைச் சந்திக்க வரட்டாம்." "நான் தவறு செய்யமாட்டன் என்பதைத் தலைவர் நம்பினார். இதுபோதும் சாகும்வரை இயக்கத்தில் இருந்து செயற்படுவதற்கு" என தன்னுள் எண்ணியவன் தலைவரைச் சந்தித்தபின் தொடர்ந்து களப்பணியாற்றுகின்றான்.
பல மாதங்களுக்கு முன்னர் கரும்புலி அணியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துக் கடிதம் அனுப்பியிருந்தான். அதற்கான அனுமதி கிடைத்திருந்தது. ஆபத்துக்களை கடந்து செய்யப்படும் தனது கடின உழைப்பில் மனநிறைவு கிடைக்காதவன் கரும்புலியாகச் செயற்படுவதில் அதனை அடையலாம் என நம்பினான். தொடர்ந்து கரும்புலிகளுக்கான உடல் உள உறுதிகளை உறுதிப்படுத்தும், தாங்குதிறனைப் பரீட்சிக்கும் பயிற்சிகளைப் பெற்றுத் தன்னைக் கரும்புலி அணித்தலைவர்களுள் ஒருவனாக்கிக்கொள்கிறான்.
இப்பொழுது கரும்புலியாகவும், வேவு வீரனாகவும் தனது பட்டறிவை ஒருங்கிணைத்துச் செயற்படுகின்றான். வரையறைக் குட்பட்ட முறையில் முடிவெடுக்கும் அதிகாரத்துடன் எதிரி முகாம்களினுள் ஊடுருவி இலக்குத்தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான்.
முல்லைத்தீவு வெற்றியைப்போல், முழுமையான வெற்றியைத் தரக்கூடிய புறச்சூழலுடன் அமைந்திருப்பது பூநகரி படைத்தளம். ஏற்கனவே அதனுடன் இவனுக்கிருந்த பரீட்சயம் காரணமாக அதனை வேவு எடுக்கப் புறப்படுகின்றான். பட்டறிவு வாய்ந்த வேவுப்புலிக்கு படைமுகாமொன்றின் காவலரணுக்கு அண்மையாகச் சென்று அதனுள் எட்டிப்பார்ப்பதென்பது திகில் நிறைந்த விருப்பிற்குரிய செயற்பாடு ஆகும். தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தி ஒரு காவலரணுக்கு உள்ளே எட்டிப் பார்க்கின்றான். இராணுவ நடமாட்டத்தைக் காணவில்லை. அடுத்த காலரணினுள்ளும் சென்று பார்க்கின்றான். அதுவும் அவ்வாறே காணப்படுகின்றது. சிறிது நேரத்திற்கு முன்னர்வரை படையினர் இருந்ததற்கான தடயங்கள் காணப்பட்டன. இவனுக்கு ஏதோ ஐயம் ஏற்பட்டு விட்டது.
மெல்ல முகாமின் உட்பகுதிக்குள் செல்கின்றான். அம்முகாமின் வெதுப்பகத்தில் நெருப்புத்தணல் காணப்படுகின்றது. ‘வெதுப்பிகளும்’ அவ்வாறே கிடக்கின்றன. ஆள் நடமாட்டம் தான் இல்லை. முழுமையாக விளங்கிவிட்டது. அங்கிருந்தவர்களுக்கான முன்னறிவிப்பு இன்றியே அம் முகாம் பின்வாங்கப்பட்டு விட்டது என்பது. இரவோடு இரவாக பலவாயிரம் படையினர், கடற்படையினர் இருந்த முகாம் வெறுமையாகிவிட்டது. இது எங்களுக்குத் தெரியாமல் இருந்து விட்டது? என தன்னுள் எண்ணியவன் தொடர்பெடுத்து தனது முகாம் பொறுப்பாளருக்கு நிலைமையை அறிவிக்கின்றான். மேலும் உறுதிப்படுத்தும்படி அவர் கேட்க தான் உறுதிப்படுத்தியவற்றைத் தெரிவித்தான். முகாம் பின்வாங்கும் முடிவெடுத்த முலோபாய முடிவுகள் எடுக்கும் எதிரித் தளபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்தபடி வெளிவருகின்றான்.
‘ஜெயசிக்குறு’ படை நட வடிக்கை இறுக்கமாகத் தொடர்கின்றது. அதனைத் தடம்புரளச் செய்யும் தந்திரோபாய நடவடிக்கையாகவும் போராட்டத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சலாகவும் கிளிநொச்சி படை முகாம் வீழ்த்தப்பட வேண்டும். இந்நடவடிக்கையின் வெற்றியை உறுதிப்படுத்தவும், வேகப்படுத்தவும் என கரும்புலிகள் போரணியொன்று ஆனையிறவு படைத்தளத்தினுள் ஊடுருவியது. இவர்களின் இலக்காக ஆனையிறவு தளத்தினுள் குழப்பத்தினை ஏற்படுத்துவதன் மூலம் கிளிநொச்சி படையினருக்கான வழங்கலைத் தடுப்பது, கட்டளைகளைக் குழப்புவது என்பன அமைந்திருந்ததன.
கொமாண்டோ பாணியிலான உட் தாக்குதல் தொடங்கிவிட்டது. பூட்டோவினால் எதிரி முகாமின் நடுப்பகுதியில் அமைந்திருந்த தொலைத் தொடர்புப் பகுதி செயலிழக்கச் செய்யப்பட்டது. இவனது அணித்தலைவர்கள் வீரச்சாவடைய இவனும் இடது கையில் காயப்பட்டு என்பு முறிவிற்குள்ளாகினான். இதனால் சார்ச்சர் பட்டியை இழுத்துக் கொழுவித் தன்னைத் தானே தகர்த்து அழிக்கும் முயற்சி சாத்திய மற்றுப் போனது. எனவே தப்பிக்கும் முடி வெடுக்கின்றான். உள்ளே காயமடைந்திருந்த ஏனைய வீரர்களையும் வெளிக்கொண்டுவர இவனது தலைமைத்துவம் கை கொடுக்கின்றது. கிளிநொச்சியைக் கைப்பற்றும் அத்தாக்குதல் அப்போது வெற்றியடையாமல் போனது. எனினும் பெரும்பாலான கரும்புலிகள் வெற்றிகரமாக தமது இலக்கை நிறைவுசெய்து தளம் திரும்பியிருந்தனர்.
கை என்பு முறிவுக்காயம் மாறுவதற்காக சில காலம் மருத்துவமனையிலும் முகாமிலும் ஓய்வெடுத்தான். அக்காலப் பகுதியில் தன்னுடன் பணியாற்றி வீரச்சாவடைந்த கரும்புலிகள் பற்றி கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுதி வெளியிட்டிருந்தான். புலிகளின் குரல் வானொலியில் பல கவியரங்குகளில் இவன் குரல் ஒலித்திருந்தது.
மீண்டும் பயிற்சிகள் எடுத்து அடுத்த தாக்குதலுக்கு தயாராகினான். மீண்டுமொரு முறை கிளிநொச்சி படைத்தளம் தாக்கியழிக்கப்படும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதற்கு ஆதரவாக இம்முறையும் ஆனையிறவினுள் ஊடுருவியிருந்த கரும்புலிகள் அணியில் பூட்டோ காணப்பட்டான். அப்பொழுது பூட்டோவிற்கு பாம்பு கடித்து விட்டது. நச்சு இரத்தத்தில் கலக்க சாவு இவனை நோக்கிவந்தது. எனினும் பகை முகாமினுள் பற்றையொன்றினுள் வைத்து விசமுறிப்பு மருந்து (ASV) ஏற்றப்பட்டது. மீண்டுமொரு முறை சாவிலிருந்து தப்பித்துக் கொள்ள தமிழீழம் ஒரு பெறுமதியான கரும்புலியை மீளப்பெற்றுக்கொண்டது. அத்திட்டம் வெற்றிபெற கிளிநொச்சி நகரம் விடுவிக் கப்பட, ஓயாத அலைகள் 2 வெற்றி உறுதிப்படுத்தப்படுகின்றது.
மீண்டும் கடின தொடர்பயிற்சிகளை மேற்கொள்கின்றான். அக்காலத்தில் அவசியம் தேவைப்பட்ட ஒரு வெற்றியைப் பெறுவதற்காக தலைவரின் ஆசிபெற்று நகரும் கரும்புலியணியில், இலக்கின் மீதான தாக்குதல் தொடுக்கும் பொறுப்பை ஏற்று இணைந்துகொள்கின்றான். படையினரால் வல்வளைக்கப்பட்டு அதிஉயர் பாதுகாப்புடன் பேணப்படும் மணவாளன்பட்டை எனும் இடத்தில் தரையிறங்கும் உலங்குவானூர்தியைத் தாக்கி அழிக்க வேண்டும். பல்வேறு சிரமங்களைத் தாண்டி குறித்த இடம்சென்று பகைவர்களுக்குள் ஓடிச்சென்று அவர்களுக்கு மத்தியில் நின்று அவர்களின் கண் முன்னால் தரையிறங்க முற்பட்ட உலங்கு வானூர்தியை வானில் வைத்தே ‘லோ’ உந்துகணையால் தாக்கியழித்து பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து நிற்கும் எதிரிகளின் மத்தியில் இவனும் ஏனைய வீரர்களும் தப்பிவந்த செயலானது கரும்புலித் தாக்குதல் வரலாற்றில் புதிய அத்தியாயமாகச் சேர்க்கப்பட்டது.
இடைக்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் படைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை வேவு எடுக்கப் பணிக்கப்பட்டான். அங்கு மக்களோடு மக்களாகவும் கரந்துறைந்திருக்கும் ‘கெரில்லா’ வீரனாகவும் செயற்பட்டு பல பெறுமதியான வேவு தகவல்களைச் சேகரித்திருந்தான். களங்களினுள் செல்லும்போது முன்னும் களம் விட்ட கலும்போது இறுதியாகவும் வெளிவருவது இவனது இயல்பான பண்பு. இவன் தலைமையில் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் வன்னித் தளம் திரும்புமாறு பணிக்கப்பட்டான். இவர்களுக்கென ஒரு ஷமீன்படி படகு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் இவனும் அறிவுக்குமரனும் ஏற முற்படுகையில் சற்று நிதானித்தவன் அத்திட்டத்தைக் கைவிடுகின்றான். இவரும் ஒன்றாக போய் ஏதாவது நடந்தால் இவ்வளவு நாளும் கடினப்பட்டு சேகரித்த தகவல்கள் செல்லாக்காசு ஆகிவிடும். ஆதலால் அறிவுக்குமரனை முதலில் போகச்சொல்கின்றான். படகில் ஏறியவனிடம் இரண்டு கைக்குண்டுகளைக் கொடுத்துவிடுகிறான். அந்த துன்பியல் நிகழ்வு நடந்தே விடுகின்றது. எதிரிப் படகுகள் அறிவுக்குரனின் படகை வழிமறித்தன. பகைவன் சோதனையிட முயற்சிக்கையில் அறிவுக்குமரன் குண்டுகளை வெடிக்கவைத்து தன்னையும் படகையும் அழித்துக்கொண்டான்.
பூட்டோ எடுத்த முடிவால் வேவுத்தகவல்கள் பத்திரமாக வன்னித்தளம் வந்து சேர்ந்தது. அவர்களின் கோட்பாட்டின்படி பூட்டோவின் முடிவு முற்றிலும் சரியானது எனினும் உணர்வு ரீதி யாக பூட்டோவை இது பாதிக்கவே செய்தது. அறிவுக்குமரனுக்குப் பதிலாகத்தான் வந்திருக்கலாமோ என அடிக்கடி கூறிக்கொள்வான்.
‘கரும்புலிகளின்’ வளர்ச்சிப் போக்கில் இவனது பங்களிப்பின் காரணமாக கரும்புலிகள் தொடர்பான விதிமுறைகளை எழுதுவதிலும் அதனைப் ஆய்வு செய்வதிலும் இயக்கம் இவனை ஈடுபடுத்தலானது. இவன் தனது நடைமுறைச் செயற்பாடுகளினூடாக கோட்பாடுகளை உருவாக்கினான். கரும்புலிகளுக்கான உறுதியுரை, பயிற்சிகள், ஒத்திகைகள், விதிமுறைகள் அடங்கிய மரபு சார் யாப்பை உருவாக்கப் பெரும் பங்களிப்பைச் செய்தான். இவனது தொடர் அனுபவமும் செயற்பாடும் காரணமாக கரும்புலிகளுக்கான எண்கள் ஒதுக்கப்படும்போது இவனுக்கு க.1 ஒதுக்கப்பட்டது. அன்று முதல் இவன் ‘நம்பர் வண்’ எனும் குறியீட்டு மொழியில் அழைக்கப்படலானான்.
பல்வேறு தரத்திலான போராளிகளுடனும் அகவை வேறுபாடுடைய பொதுமக்களுடனும் இவன் பழகும் முறை மாறுபாடுடையது.. அந்தந்த அகவைக்காரர்களுடன் அவர்களின் குணஇயல்புகளிற்கு ஏற்றவாறு பழகினான். தனது அதிக ஓய்வு நேரங்களை சிறு குழந்தைகளுடனேயே செலவழித்தான். அவர்களுக்குச் ஓவியம் வரையப் பழக்குவதிலிருந்து பரீட்சைகளில் சித்தியடைய என்ன செய்யவேண்டும் என்பது வரை நடைமுறை ஏற்றவகையில் வகையில் சொல்லிக்கொடுப்பான். எந்த நேரமும் இந்த நாட்டிற்காக வெடிக்கக் கூடிய கரும்புலி ஒருவனே தங்களுடன் பழகுகின்றான் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. எனினும் அதனை இவன் ஒருபோதும் ஒத்துணர்வைப் பெறுவதற்காகப் பயன்படுத்தியதே இல்லை.
ஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை தொடர் காவலரண்களைக் கடந்து உள்நுழைவது முடியாமல் போனது. உள் நிலைமைகளை கண்காணித்து உட்புறமாகத் தாக்குதல் தொடுத்தால் மட்டுமே எதிரி குழப்பமடைவான். பலரால் இயலாமல் போகையில் மீண்டும் பூட்டோ தெரிவானான். கரும்புலிகளால் ஒரு முன்முயற்சி இயலாமல் போனது எனும் சொற்களைக் கேட்கவே அவன் விரும்பவில்லை. பொதி செய்யப்பட்ட சிறு ஆயுதங்களுடனும், உணவுப் பொருட்களுடனும் கடலினுள் இறங்கினான். கரையோரமாக நீண்ட தூரம் நீந்திச்சென்றான். கடற்கரை முழுவதும் படையினரும், கடலில் கடற்படையினரும் அதியுச்ச விழிப்பு நிலையில் நின்றனலட. கடலினுள் பகைப் படகுகள் சுற்றுக்காவல் செய்த வண்ணம் இருந்தன. கரையேறுவதோ கடலில் ஆழம் செல்வதோ இயலாமல் இருந்தது. மீண்டும் தளம் திரும்புவதை அவன் கற்பனைகூடச் செய்யவில்லை. செய் அல்லது செத்துமடி என்பதுவே இவனது தாரக மந்திரமானது.
ஏற்ற சூழலுக்காகக் கடலில் மிதந்த படியே காத்திருக்கலானான். பாரங்களைக் குறைப்பதற்காக உணவுப் பொருட்களையும் ஆயுதங்களையும் கழட்டி விடலானான். தொலைத்தொடர்பு கருவியும் 'GPS' ம் குப்பியும் மட்டுமே அவனிடம் மிஞ்சி யிருந்தது. இரண்டு நாட்களாக கடல் நீரில் மிதக்கலானான். பசியும், தாகமும், கடல் நீரின் உப்புச் செறிவும் அவனைத் துன்புறுத்தின.
தண்ணீரில் மிதந்தபடி தண்ணீர் இன்றித் தாகத்தால் தவித்தான். அவனையும் மீறி வெளிவந்த கண்ணீரைத் தண்ணீராகச் சுவைத்தான். தாயையும் தலைவனையும் நினைத்து நினைத்து தாங்குதிறனை வளர்த்து, யுகங்களாகும் கணங்களைக் கழித்தான். பூட்டோ தடயமின்றி வீரச்சாவடைந்து விட்டானோ எனப் பெரும்பாலானோர் கருதத் தொடங்கினர்.
ஒருவாறு எதிரி முகாமிற்குள் புகுந்துகொண்டான். புற்களில் நனைந்திருந்த பனி நீரை நாக்கால் நக்கி நாக்கிற்கு தண்ணீர் காட்டிக்கொண்டான். உட் சென்றவன் தொடர்பெடுத்து தான் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினான். அவன் கொடுத்த ஆள்கூற்றுத் தளங்கள் மீது எங்கள் ஆட்லறிகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. பத்திற்கு மேற்பட்ட ஆட்லறிகளும் பல பல்குழல் பீரங்கிகளும், ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான எறிகணைக் களஞ்சியங்களும் அழித்தொழிக்கப்பட்டன. உணவின்றி, ஆயுதமின்றி, பூஞ்சணம் பிடித்த பூசனிக்காயைத் துண்டுதுண்டாகச் உண்டவாறு, உயிரையும் இயங்கு சக்தியையும் தக்க வைத்தவாறு பலநாள் பணி தொடர்ந்தான்.
தனியான இவன் பகைத் தளத்தினுள் கரும்புயலாகச் சுழன்றான். பெரும் படையணி புகுந்ததாக செயலாற்றி அழிவை ஏற்படுத்தினான். தொலைத் தொடர்பை இடை மறித்ததில் பூட்டோ தனியாகத்தான் செயற்படுகின்றான் என்பதை பகைவன் அறிந்துகொண்டான். இவனைப் பிடிப்பதற்கு பலநூறு இராணுவத்தினரையும் பல உந்துருளி அணிகளையும் களத்தில் இறக்கி களைத்துப் போனான் எதிரி. இறுதியாக இவனை மீட்டுவர இன்னொரு கரும்புலியணி உள்நுழைக்கப்பட்டது. அப்பகுதி முழுவதும் இவனுக்குத் தண்ணிபட்ட பாடாக இருந்ததால் அவர்களையும் அழைத்துக்கொண்டு இருபத்தியாறாம் நாள் இவன் வெளியில் வந்தான். மெலிந்து, நோய்வாய்ப்பட்டு சிறிதளவு நீர்உணவுகளைக்கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு உதடுகளும் நாக்கும் வெடித்து, எலும்பும் தோலுமாக அவன் வெளி வந்த காட்சி காண்பவர் கண்களைக் கசிய வைத்து. தொடர்ந்து நியூமோனியாக் காய்ச்சலுக்கு உள்ளானான். சிலவாரங்களாக மருத்து வமனையில் பண்டுவம் பெற்று மீண்டவன் மீண்டும் பணிக்கு தயாரானான்
அக்காலப் பகுதியில் இவன் முள்ளியவளைப் பகுதியில் தங்கியிருப்பதை அறிந்து இவனது தாய் மகனைச் சந்திப்பதற்காக மன்னாரில் இருந்து பேருந்தில் வந்திறங்கினார். அங்கு தென்பட்ட பெண் போராளிகளிடம் "பூட்டோ தங்கியிருக்கும் மருத்துவமுகாம் எது" வென கேட்க "யாரு, "கரும்புலி பூட்டோவா!" என அவர்கள் கேட்டு முகாமிற்கு வழிகாட்டி விட்டனர். தாயும் மகனும் சந்தித்த அந்தவேளை அவர்களுக்கே உரித்தானவை.
பல ஆண்டுகளாக மகன் கரும்புலி என்பது தாயிற்குத் தெரியும். தாய்க்குத் தெரியும் என்பது மகனிற்கும் தெரியும். ஆயினும் இருவரும் ஒருபோதும் அதுபற்றிக் கதைத்தது இல்லை. மகன் தான்பட்ட கடினங்களைக் கவிதைகளாக எழுதியிருந்தான். அவற்றை வாசித்த அன்னையின் கண்கள் நீர் சொரிந்ததை அருகிருந்தவர்கள் பார்த்தார்கள்.
அடுத்த பணிக்காக இவன் தயாராகிக் கொண்டிருக்கையில் தலைவரிடம் இருந்து தகவல் வருகின்றது. உலங்குவானூர்தி தாக்குதல் சம்பவத்தைப் படமாக எடுக்கும்படி பணித்திருப்பதாகவும் அதில் அவன் செய்த பணியை இவனையே நடிக்கும்படியும்.
விடுதலைப்புலிகள் சொல்லுக்கு முந்திச் செயலை வைத்திருப்பவர்கள். செய்தவற்றையும் சொல்லாமல் விடுபவர்கள். இக்குணவியல்வினால் வரலாறு திரிந்துவிடக்கூடாது என்பதற்காக தாக்குதல் செய்தவனையே நடிக்கச்சொன்னார்கள். வன்னிமண் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்த காலம். திரைப்படம் எடுப்பதற்கான போதிய வளங்கள் இல்லை. ஆயுத தளபாடங்களையும், துணைப் நடிகர்களிற்கான தேவையான ஆளணிகளையும் இவனே ஒழுங்குபடுத்தி படப்பிடிப்பை விரைவாக்கினான். படப்பிடிப்பின் காரணமாக பல்வேறு தரப்பினர்களுடனும் பழகவேண்டி ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறைவேறும் நிலையில் மீண்டுமொரு சிறு தவறு ஏற்பட்டது. உள்ளுர் முகவர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப் படையில் பூட்டோ விளக்கம் கோரலுக்கு உள்ளாக்கப்பட்டான். பலர் எதிர்பார்த்ததற்கு மாறாக தேச நன்மைக்காக உருவாக்கப்பட்ட பொறி முறைக்கு ஒத்துழைப்பதையும் தனது கடமைகளில் ஒன்றென வெளிப்படுத்தினான். இவன் நடித்த திரைப்படம் "புயல் புகுந்த பூக்கள்" என வரலாற்றுப் பதிவானது. இக்காலப் பகுதியில் வெளிச்சம் பவள இதழில் இவனது உள் நடவடிக்கைகள் பற்றிய ஒரு சம்பவத்தை புயலவன் எனும் பெயரில் எழுதியிருந்தான்.
தொடர்ந்து தேசத்திற்கான இவன் பணி ஈகத்தின் உச்சம் நோக்கி வேக மெடுத்தது. மறைமுகக் கரும்புலியாகச் செயற்படத் தொடங்கினான். அரசியல் தெளிவும், இலட்சியப் பற்றும், செயல்திறனும், நிதானமும் உள்ள போராளியாக இவன் ஒளிவீசினான். இவனது பன்முகத்திறமை மறைமுகக் கரும்புலிகளை பலமடங்காகப் பலம்பெறச் செய்தது. இவனது சில ஆண்டுச் செயற்பாடுகள் வெளித்தெரிய முடியாதவையாகின. ஆனால் தமிழினம் அதனை உணர்த்து கொண்டிருக்கின்றது. சுதந்திர தமிழீழத்தின் பலமான அடித்தளத்தினுள் இவனது உழைப்பு கலந்திருக்கின்றது.
மாவிலாறைச் சாட்டாக வைத்து எதிரி பெரும்போரைத் தொடங்கினான்.
முகமாலையைத் தாண்டி ஆனையிறவு நோக்கி எதிரி முன்னேறத் திட்டமிட்டிருக்கிறான். சம்பூர் மீது பெரும் படைய அழுத்தத்தைப் பயன்படுத்தினான். படையினரைத் திசைதிருப்பவும் குழப்பவும் வேகமாக நடவடிக்கையில் இறங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. பலமுறை தலைவனுக்கு தடைநீக்கியாகச் செயற்பட்ட பூட்டோ இம்முறையும் முதல் தெரிவானன். தலைவருடனும், தளபதிகளுடனும் தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டான். ஓகஸ்ட் தொடக்க நாட்களில் ஒரு நாள் இரவு இரண்டு மணியளவில் தலைவரிடம் இறுதி விடை பெற்றுக்கொண்டான். மறைமுகக் கரும்புலி மீண்டும் தரைக்கரும்புலியாக யாழ்ப்பாணத்திற்குள் உட்புகுந்தான்.
பாரிய படையத் திருப்புமுனைச் சாதனைகள் எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் சில நாட்களில் செய்திவந்தது. "நம்பர் வண்" தொடர்பு இல்லை என. இம்முறையும் தப்பிவருவான் என அவனைத் தெரிந்த அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் பூட்டோ வீரச்சாவு உறுதியான செய்தியுடன் 2006ஆம் ஆண்டு மாவீரர் நாள் கொண்டாடப்பட்டது.
ஒரு வேவுப் புலி வீரனை, வரைபடக் கலைஞனை, ஒரு கரும்புலிக் கவிஞனை, பாடலாசிரியனை, எழுத்தாளனை, நடிகனை, உச்சவினைத்திறனுடைய அப்பழுக்கற்ற செயல்வீரனை, போராளிகளுக்கான ஒரு " எடுத்துக்காட்டான வீரனை " பட்டறிவால் உருவான போரியல் ஞானியை, எல்லா வற்றுக்கும் மேலாக தேசத்தையும், தலைவ னையும் நேசித்த "நம்பர் வண்" ஐ தமிழீழம் பௌதீக ரீதியாக இழந்துவிட்டது. எனினும் தலைமுறைகள் கடந்து கடத்தப்படும் அவனது செயல் வீச்சுக்களின் விளைவாக சுதந்திர தமிழீழம் விடுதலை பெற்று, வளம்பெற்று தலைநிமிர்ந்து எங்கள் பெயர் சொல்லி வாழும்.
குறிப்பு:- இவனது செயற்பாடுகளில் சிலவற்றை மட்டும் இப்பகுதி கோடிகாட்டுகின்றது. காலம் கைகொடுக்கையில் இவன் வீரகாவியமாக விரிவான்.
- தூயவன் -