தமிழ் மக்களின் பாதுகாப்புக்குத் தானே உத்தரவாதம் என்று எமது ஆயுதங்களைப் பெற்ற இந்தியா, நீ திருமலைக்குப் போவதற்குப் பாதுகாப்புக் கேட்டபோது இந்திய இராணுவத்திலுள்ள மேஜர் கருப்பசாமி உனக்குச் சொன்னார், “இன்றும் இல்லை, இனி எப்போதும் இல்லை” என்று. விடுதலைக்காகப் போரிடும் ஓரினம் தன்னைத் தானே நம்பியிருக்கவேண்டும் என்ற உண்மையைக் கருப்பசாமி வாயிலாக அன்று இந்தியா உணர்த்தியது. பின்னர் அதே செய்தி உனது மரணம் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.
உனது மரணம் தமிழீழத்தையே உலுக்கியது. மாபெரும் வரலாற்றுக் துரோகமல்லவா அது. தமிழீழ வரலாற்றில் உனது பெயர் அழியாஇடத்தைப் பெற்றதல்லவா? முதன் முதன் சிறீலங்கா இராணுவத்தினருக்கு எதிராக் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் (1981 இல் காங்கேசன்துறை வீதிச் சம்பவம் ) பங்கு பற்றியவர்களில் சீலன், ரஞ்சன் ஆகியோர் வீரச்சாவெய்திய பின் நீ தானே எஞ்சியிருந்தாய். கடைசியில் நம்பிக்கை துரோகத்துக்கல்லவா நீ பலியாகியிருக்கிறாய். தமிழீழ விடுதலைப் போரின் பல வரலாற்றுப் பதிவுகள் உனது வீரச்சாவால் ஸ்தம்பிதமாகிவிட்டனவே.
நான் இந்தியப் படைகளின் சிறையில் இருந்த காலத்தில் எனது மனைவி எனது மகளின் நிலையைப் பற்றி ஒரு செய்தி சொன்னாள். வீதியில் தமது தகப்பனுடன் செல்லும் குழந்தைகளை வெறித்தபடி பார்ப்பாளாம். தனது பார்வையிலிருந்து அவர்கள் மறையும் வரை வேறெதையும் பார்க்கமாட்டாளாம், பேசமாட்டாளாம், இச் செய்தியைக் கேட்டதும், தந்தை அருகில்லாதது ஒரு குழந்தைக்கு எப்படியான ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என்பதை உணர முடிகிறது. கூடவே உனது ஞாபகம் என்னை வாட்டியது. எனது மகள் என்றோ ஒருநாள் தனது தந்தையைக் கண்டவள். இனி மேலும் அந்த வாய்ப்புக் கிடைக்கலாம். ஆனால் உனது மகன் பிறக்கும்போதே ‘இன்னும் இல்லை இனி எப்போதும் இல்லை’ என்ற நிலையல்லவா ஒ…எவ்வளவு விலை கொடுத்திருக்கிறோம் எமது தாயக விடுதலைக்கு. கூடவே எம் இயக்கத்தின் சக்தியையும் கணக்கிட்டுக் கொள்கின்றேன். இதையெல்லாம் தாங்கும் வலிமையை எபப்டிப் பெற்றுக் கொண்டோமென்று .
இயக்க ரீதியாக என்பதை விட தனிப்பட்ட முறையிலும் எமது கிராமத்து மக்களின் இதயத்தைப் பொருத்தவரை நீ அவர்களது தத்துப்பிள்ளை பாடசாலை மாணவர்கள் என்ற போர்வையில் பொட்டுவின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த அந்த நாட்களை நினைத்துக் கொள்கிறேன். மீள வருமா அந்த நாட்கள் “புலேந்திரன், புலேந்திரன்” என்று உருகி வழிந்தர்களே எனது கிராம மக்கள்! எங்கள் எல்லோருக்கும் இடையில் உன்னிடம் மட்டும் அப்படியென்ன சக்தியிருந்தது? விஷேசமான கறிகள் சமைத்தாலோ, கோயில் விஷேசங்களின் பிரசாதங்கள் என்றாலோ உனது பெயரைச் சொல்லி விசாரித்துக் கொண்டுவந்து ஒரு பங்கை தருவார்களே அது ஏன் ?
அந்தக் காலத்தில் எனது கிராமத்தில் நடந்த மரண ஊர்வலங்களில் பிரேதத்தைச் சுமக்கும் தோள்களில் ஒன்று உன்னுடையது. மங்கள காரியங்கள் நடைபெறும் வீடுகளில் அலங்கார வேலைகளுக்கிடையே உனது குரல் தனித்துக் கேட்கும். குடும்பத்தில் முரண்டு பிடிக்கும் இளைஞர்களுக்கெல்லாம் உனது வார்த்தைகள் நாணய கயிறு, மாலை நேரத்தில் சனசமூக நிலையை மைதானத்தில் நீ தான் உதைபந்தாட்டப் பயிற்சியாளன். அயலிலுள்ள மாணவர்களுக்கு இலவசக்கல்வி போதனையாளன். இன்னும் எத்தனை எத்தனை? இந்தச் சம்பவங்களையெல்லாம் எனது கிராம மக்கள் ஞாபகப்படுத்திச் சொல்கையில் அவர்களது கண்கள் கலங்கும். தொண்டை அடைத்துக் கொள்ளும். மீண்டும் பிறந்து வரமாட்டாயா? என்ற ஏக்கம் பிறக்கும்.
‘சுப்பர்சொனிக்’ அது தான் நாங்கள் உனக்கு இட்ட பட்டப் பெயர். எங்கும் எதிலும் வேகம் காட்டும் உனது போக்கு – மிதிவண்டி தொடங்கி எந்த வாகனத்திலும் உன்னுடன் நாம் வரப் பயப்படுவது உனது வேகத்தைப் பார்த்துதான். எங்கே பொய் அடிபட்டாலும் இறுதியில் நொண்டுவதும் நாங்கள் தான். நீ சிரித்தபடியே எழும்பி வருவாய் அப்படியான சர்ந்தப்பங்களில் ஒரு போதுமே நீ உனது தவறை ஒத்துக்கொள்வதில்லை “நானென்ன செய்யிறது திடீரெண்டு வந்திட்டான் – திடீரெண்டு வளைவு வந்திட்டுது” என்றெல்லாம் நீ சொல்லும் பொது நாங்கள் வழியை மறந்து சிரிப்போம். பயிற்சியின் போது ஒழுங்காகச் செய்வதற்காக நாங்கள் தண்டனை பெறும்போது நீ மேலதிகமாகச் செய்ததற்காகத் தண்டனை பெறுவாய். அந்த கடுமையான பயிற்சி முடிந்தும் நாங்கள் தரையில் கிடந்தது தத்தளிக்கும் போது நீயோ சிரித்தபடியே துள்ளித் திரிந்தாய் மீண்டும் வருமா அந்த நாட்கள்?
நாங்கள் செம்மணியிலிருந்து கொடிகாமம் வரை ஓடிப் பயிர்சியெடுப்பது எதுக்கு ஓடுகிறோம் என்று தெரியாமல் எமது கிராமத்து இளைஞர்கள் ” நாங்களும் வாறம் ” எனத் துணைக்கு ஓடி வருவது ” எந்த இடத்து றேசுக்கு ஓடிப்பழகுறீங்கள் ? ” என்று சாவகச்சேரி காவல் நிலையக் காவலர்கள் கேட்பது. இவற்றில் நான் எதை நினைப்பது? எதை மறப்பது அன்று எமது வியர்வையை தாங்கிக் கொண்ட அந்த வீதி அந்த வீதியால் செல்லும் பொது உதிரும் கண்ணீரையும் ஏற்றுக்கொள்கிறது. உனது மகன் வளரட்டும் இந்தப்பாதையெல்லாம் கூட்டிச் சென்று ” இதால தானடா கொப்பரும் நாங்களும் ஓடிப்பழகினது ” என்று காட்டுகிறேன்.
புலேந்திரன் நீ நடத்திய தாக்குதல்கள் ஒவ்வொன்றுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. சிறீலங்காவின் சகல படைகளுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தியிருகிறாய். குடியேற்றம் மூலம் எனது பாரம்பரிய பிரதேசங்களைக் கபளீகரம் செய்ய முனைந்த சிங்களப் பேரினவாதிகளுக்கு நீ சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தாய். அதனால் தான் உன்னை பணயமாக வைத்து தமது சிப்பாய்களைக் கேட்க முனைந்தது சிறீலங்கா அரசு. மணமாகி மூன்று மாதங்கள் உனது வரிசைச் சுமக்கும் உனது மனைவி இந்த நிலையிலும் அடிபணிய மறுத்தாய்.”சிறீலங்கா இராணுவத்தினர் யுத்தகாலத்தில் கைது செய்யப்பட்டவர்கள். நாம் சமாதான காலத்தில் கைது செய்யபப்ட்டவர்கள்” என்றாய். முடிவில் சயனைட் உட்கொண்ட நிலையிலும் கைகள், கால்கள் பற்களால் யுத்தம் நிகழ்த்தினாய்.
உனது உடலில் தெரிந்த காயங்கள் சிங்களப்படை உன்மீது எவ்வளவு ஆத்திரம் கொண்டு இருந்தது என்பதைப் புலப்படுத்தின.
“இந்தியா எமக்குச் செய்த பாவத்தைக் கழுவ புனித கங்கை நீர் போதாது” என்று ஒரு வரலாற்றறிஞர் குறிப்பிட்டதை நினைவு கூறுகின்றேன். திலீபனின் மரணம், உனது மரணம் எமது மக்களுக்கெதிரான போர் இவற்றைக் குறித்தே அவர் அவ்வாறு கூறினார்.
விடுதலைப்புலிகளின் மத்தியகுழு உறுப்பினரான லெப் கேணல் புலேந்திரன் திருகோணமலை மாவட்டத் தளபதியாகவும் பொறுப்பு வகித்தார்.
இவர் பங்கேற்ற முக்கிய தாக்குதல்கள் :
- 15.10.1981 அன்று முதன்முதலாக சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதலான யாழ். காங்கேசன்துறை வீதித் தாக்குதல்.
- 27.10.1983 அன்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல்.
- 18.02.1983 அன்று பருத்தித்துறையில் பொலிஸ் ‘ஜீப்’ மீதான தாக்குதல்.
- 29.04.1983 அன்று சாவகச்சேரி ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் முத்தையா மீதான தாக்குதல்.
- 18.05.1983 அன்று கந்தர்மடம் தேர்தல் சாவடியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்.
- 23.07.1983 அன்று திருநெல்வேலித் தாக்குதல்.
- 18.12.1984 அன்று பதவியா – புல்மோட்டை வீதி சிரீபுரச் சந்தியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்.
- 09.01.1985 அன்று அச்சுவேலி சிறீலங்கா இராணுவ முருகைக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல்.
- 14.02.1985 அன்று கொக்கிளாய் சிறீலங்கா இராணுவ முற்றுகைக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல்.
- திருமலை – கிண்ணியா வீதியில் இராணுவத்தின் கவசவாகனம் மீதான தாக்குதல்.
- திருமலை – கிண்ணியா வீதியில் விமானப்படையினர் மீதான தாக்குதல்.
- முள்ளிப்பொத்தானை சிறீலங்கா இராணுவ முகாம் மீதான தாக்குதல்.
- பன்மதவாச்சி சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்.